மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

பாய வேண்டிய நேரத்தில் பாய்வேன்:டிடிவி தினகரன்

பாய வேண்டிய நேரத்தில் பாய்வேன்:டிடிவி தினகரன்

பதுங்க வேண்டிய நேரத்தில் பதுங்கி பாய வேண்டிய நேரத்தில் பாய்வேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, இன்று (பிப்ரவரி 24 ) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

கொரோனா தொற்று பரவலால் ஓரிரு வருடங்களாகவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலையில்... டிடிவி தினகரன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வதில்லை.

கடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக 102 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அமமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து உரையாற்றினார் டிடிவி தினகரன்.

அப்போது அவர், "ஆளும் கட்சியாகவும் இல்லாமல் ஆண்ட கட்சியாகவும் இல்லாமல் நாம் இந்தத் தேர்தலை சந்தித்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் மார்ச் மாதம்தான் வருமென எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கு முன் கூட்டியே வந்து தேர்தலும் நடந்து நாம் 102 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆளும் கட்சியின் அதிகார பணபலம், நமது பங்காளிகளின் பண மூட்டை, பணத்தை அள்ளி இறைத்த இன்னொரு கட்சி ஆகியவற்றின் இடையே நாம் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்று உள்ளோம். 102 வெற்றியாளர்களில் சுமார் 60 பேர் பெண்களாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

சில நாட்களாகவே என்னைப் பற்றி கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் சில கருத்துக்கள் பேசப்படுகின்றன. அண்ணனுக்கு எதுவுமே தெரியாது... அவர் எல்லாவற்றையும் மண்டல செயலாளர்களிடம் கொடுத்து விட்டார். கட்சியில் என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை என்றெல்லாம் பேசுகிறார்கள். என்னை திட்டினாலாவது பரவாயில்லை, மண்டல செயலாளர்களை திட்டுகிறார்கள்.

நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.... நான் மற்ற தலைவர்களைப் போல அல்ல. இன்றைய நவீன யுகத்தில் ஒரு போனை வைத்து எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும். எனக்குத் தெரியாமல் நம் கட்சியில் எதுவும் நடக்காது. எனது நாலட்ஜ் இல்லாமல் எதுவும் நகராது.

சிலர் தினகரன் பதுங்கி விட்டார், ஆரோவில்லில் அமைதியாகிவிட்டார் என்றெல்லாம் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள்.

நான் மற்ற தலைவர்களைப் போல் அல்ல. கொரோனா தொற்றுப் பரவல் நேரத்தில் நம்மால் யாரும் பாதித்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு சில கட்டுப்பாடுகளை பின்பற்றினேன்.

தஞ்சைக்கு என் மகளைப் பார்க்க வந்து செல்லும்போது கூட கட்சி நிர்வாகிகள் யாரையும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தான் வந்தேன்.

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை பொருத்தவரைக்கும் நான் வந்து இருந்தாலும் இதே அளவுதான் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஆர்கேநகர் தேர்தல் வெற்றியின் போது என்ன மன நிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் 2019 தோல்வியின் போதும் இருந்தேன். இப்போதும் அப்படியே இருக்கிறேன். வெற்றி தோல்விகள் என்னை அசைத்து விட முடியாது.

உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த பகுதியில் கட்சியின் வலிமையையும் உள்ளூர் பொறுப்பாளர்களின் வலிமையையும் பொருத்தது. அதனால்தான் நான் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. ஆனால் நம்முடைய மாவட்ட செயலாளர்கள் மண்டல செயலாளர்கள் வேட்பாளர்கள் என பலரிடமும் பேசி இருக்கிறேன்.

கருணாநிதி, அம்மா ஆகியோர் கூட உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு இப்படி சென்றதில்லை. ஆனால் சிலர் இப்போது ஊர்ஊராக போய் நாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அரங்க கூட்டங்களை நடத்தினார்கள்.

இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து விட்டன.

நான் பதுங்கினாலும் பயந்து கொண்டு பதுங்குபவன் அல்ல. ஒரு தந்திரமாகவே இருக்கும். எப்போது பதுங்க வேண்டும், எப்போது பாய வேண்டும் என்பதையெல்லாம் அறிவேன்.

தீய சக்தி என்று நமது தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட திமுகவை எதிர்த்து நிற்கும் நெஞ்சமும் வீரமும் இன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும்தான் உண்டு. நம்மிடம் மடியில் கனமில்லை. அதனால் நமக்கு எந்த பயமும் இல்லை.

என் சுவாசம் உள்ளவரை போராடுவேன் என்று நான் ஏற்கனவே உங்களுக்கு உறுதி கொடுத்திருக்கிறேன்.

இனி நாம் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டதால் இனி நான் உங்களை சந்திக்க தொடர்ந்து வருவேன். மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே அரசை எதிர்த்து நாம் போராட்டங்களும் நடத்துவோம். தமிழகம் முழுவதும் ஒரத்தநாடுகளாக மாற்றுவோம்.

அம்மாவின் உண்மையான ஆட்சியை நம்மால் தான் தர முடியும். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. எனது நம்பிக்கையை செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு உண்டு" என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் டிடிவி தினகரன்.

வேந்தன்

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 24 பிப் 2022