மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

எதிர்காலம் இல்லையா?: அழகிரிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

எதிர்காலம் இல்லையா?: அழகிரிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, பாஜக மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிமுகவை விமர்சித்திருந்தார்.

அதில், அ,தி.மு.க.வின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலமே படுதோல்வியைக் கண்டிருக்கிறது. இது ஒரு மாயை என்பதை தேர்தல் நிரூபித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல என்ற பழமொழிக்கேற்ப ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் 400-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இன்று 40 இடங்களுக்கு அல்லல்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றிச் சிந்திக்காமல், அதிமுகவை விமர்சனம் செய்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1967-ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல், அதிமுக, திமுக என மாறி, மாறி அடுத்தவர் முதுகில் சவாரி செய்து ஒரு சில இடங்களைப் பெற்றுவரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. அதைப்பற்றிச் சிந்திக்காமல், அதிமுகவுக்கு எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், “1952ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு இதுவரை நடைபெற்ற 16 பொதுத் தேர்தல்களில் 6 முறை வெற்றி பெற்று, 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதாவது மொத்தமுள்ள 70 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும், 22 ஆண்டுகள் திமுகவும், 30 ஆண்டுகள் அதிமுகவும் ஆட்சி செய்துள்ளன. அதிமுக சந்தித்திராத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தோல்வியைக் கண்டு துவண்டதில்லை.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி எங்கள் கையை விட்டுச் சென்றது. திமுக ஆட்சி அமையப் பெற்றது. திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? அதன் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை. எனவே இதைவைத்து அதிமுகவுக்கு இனிமேல் எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியிருப்பது பகல் கனவு. இது நிச்சயம் பலிக்காது. 'இலவு காத்த கிளி போல' ஏதாவது ஒன்றிரண்டு மேயர், துணை மேயர் பதவிகள் கிடைக்குமா என்ற ஆசையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இதுபோல் பேசியிருப்பார் என்றே நான் கருதுகிறேன்.

அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மூழ்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டு நடைபெறப் போகும் மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும்” என்று கூறியுள்ளார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வியாழன் 24 பிப் 2022