வேதா இல்லத்தில் தீபா: ஜெயலலிதாவுக்கு மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வேதா இல்லத்துக்குச் சென்று ஜெ.தீபா ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74ஆவது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அதிமுக தலைமையகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினர்.
அதுபோன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, வேதா இல்லத்துக்குச் சென்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போயஸ் கார்டனில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகுதான் இங்கே குடியேறி வருவோம். போயஸ் தோட்டத்தில் உள்ள பொருட்கள் எங்கள் கண்காணிப்பில் இருக்கிறது. ஆனால் அவர் பயன்படுத்திய கார் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அதுகுறித்து புகார் அளிக்கவுள்ளோம். கொடநாடு இடம் குறித்த விவரம் இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை. இதுவரை சசிகலாவிடம் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
-பிரியா