வாக்குப்பெட்டி மாற்றம்?: கோவையில் அதிமுக தர்ணா!

கோவை மாநகராட்சி 32ஆவது வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கேட்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டன.
32ஆவது வார்டில் அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாஜக, அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சுயேட்சை என பல கட்சிகளும் போட்டியிட்டன.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகராட்சி 32 வது வார்டில் திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச்சூழலில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், இந்த வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவினர், இந்த பகுதி மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை. முழு பணியையும் அதிமுகவே செய்துள்ளது. அதனால் அதிமுகவுக்கே வெற்றி பிரகாசமாக இருந்தது. இந்த வார்டில் திமுகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. 4000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகக் கூறுகின்றனர். இதெல்லாம் சாத்தியமே இல்லை.
மக்கள் போட்ட வாக்குகளின் அடிப்படையில் திமுக வெற்றிபெறவில்லை. 4 வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. எங்களது கையெழுத்தும் போலியாக உள்ளது. இந்த வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி இங்கு அராஜகம் செய்து வருகிறார்” என்று குற்றம்சாட்டினர்.
இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலையச் செய்தனர்.
-பிரியா