திமுக, அதிமுகவை வீழ்த்திய பாஜக!


நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் நான்காவது வார்டில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இன்று(பிப்ரவரி 22) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்லையில் பணகுடி பேரூராட்சியில் நான்காவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனுவேல் மற்றும் அதிமுக வேட்பாளர் உஷா ஆகிய இருவரும் 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இருவரும் சம அளவில் வாக்குகள் பெற்றிருப்பதால்,குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கூட்டணியில் இருந்து பாஜக விலகி தனித்து போட்டியிட்டது. இந்த நிலையில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஒருவாக்கு வித்தியாசம்
அதுபோன்று கரூர், சோழபுரம் பேரூராட்சியில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சில் 3வது வார்டில் திமுக சார்பில் சுரேஷ், பாஜக சார்பில் கோபிநாத், அதிமுக சார்பில் தர்மலிங்கம், அமமுக சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுகவை சேர்ந்த வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், பாஜக வேட்பாளர் கோபிநாத் ஒரு வாக்கு கூடுதலாக, அதாவது 174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 5 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 51 வாக்குகளும் பெற்றார்.
கன்னியாகுமரியில் 3, தூத்துக்குடியில், 1 கோவையில் 2, ராமநாதபுரம் 1 ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர்.
-வினிதா