மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 பிப் 2022

ஆளுங்கட்சி அழுத்தம்: எதிர்க் கட்சி எச்சரிக்கை- குழப்பத்தில் தேர்தல் அலுவலர்கள்!

ஆளுங்கட்சி அழுத்தம்: எதிர்க் கட்சி எச்சரிக்கை- குழப்பத்தில் தேர்தல் அலுவலர்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல அதிகாரிகள் வட்டாரத்திலும் பரபரப்பும் படபடப்பும் அதிகரித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக மாநகராட்சிகளில் திமுக, அதிமுக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கூட்டத்தைக் கூட்டினர்.

கோவையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "அதிமுக நம்மிடமிருந்து வெற்றியை தட்டிப் பறித்திட எல்லாவிதமான வழி முறைகளையும் கையில் எடுக்க அதிமுக தயாராக இருக்கிறது. அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறையைத் தூண்டவும் சதி செய்திருக்கிறார்கள். எனவே திமுக முகவர்கள் நாம் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

அதேநேரம் அதிமுகவினர் நடத்திய முகவர்கள் கூட்டங்களில்..."எக்காரணத்தைக் கொண்டும் எண்ணிக்கை முடியும் வரை மையத்தை விட்டு வெளியேற வேண்டாம். நீதிமன்ற உத்தரவுப்படி தபால் ஓட்டுகளை முதலில் எண்ணச் சொல்லுங்கள். தபால் ஓட்டுக்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும். அதனால் அவற்றை முதலில் எண்ணுவது சிரமம் இல்லை.

மேலும் ஒவ்வொரு வார்டிலும் வாக்கு எண்ணிக்கை முடித்து முடிவுகளை அறிவித்த பிறகுதான் அடுத்த வார்டை எண்ணத் தொடங்க வேண்டும். இதையும் முறைப்படுத்த அதிகாரிகளை நிர்பந்த படுத்தவேண்டும்" என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நேற்று சேலத்தில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ‌‌எடப்பாடி பழனிசாமி... " வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுங்கட்சியினர் இடமிருந்து தாங்கள் சொல்வதை கேட்டு நடக்குமாறு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிமுக வெற்றி பெற்றால் அதை தோல்வியுற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அமைச்சர்களே நேரடியாக உத்தர விட்டிருக்கிறார்கள் என்றும் எனக்கு தகவல்கள் வந்துள்ளன.

தேர்தல் அலுவலர்கள் சட்டத்துக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று எச்சரித்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து பற்றி தேர்தல் அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, "பொதுவாகவே உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் செல்வாக்கு செலுத்துவது ஊரறிந்த விஷயம். ஆனால் இந்தத் தேர்தலில் அமைச்சர்கள் பலர் தங்களது பொறுப்புக்குள் வரும் மாநகராட்சிகளில் இன்ன வார்டுகளில் திமுக பலவீனமாக இருக்கிறது என்பதை உணர்ந்து அந்த வார்டுகளின் பட்டியலை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி... அவற்றை திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

பொதுவாகவே ஓரிரு வார்டுகளை இதுபோல அமைச்சர்கள் சிபாரிசு செய்வார்கள். ஆனால் ஒரு சில அமைச்சர்கள் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 12 வார்டுகள் அடங்கிய பட்டியல் வரை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி... அவற்றில் திமுக ஜெயிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் ஆளுங்கட்சி அமைச்சர்களின் அழுத்தம் இன்னொரு பக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சட்டபூர்வமான எச்சரிக்கை. இரண்டுக்கும் நடுவே தேர்தல் அலுவலர்கள் என்ன செய்வதென்று நேற்று நள்ளிரவு வரை விவாதமும் குழப்பமுமாக இருந்திருக்கிறார்கள்" என்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள் வட்டாரத்தில்.

இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தகவல்கள் அதிகாரிகள் தரப்பில் இருந்தே கசியவிடப்பட்டிருப்பதாக அறிந்து... யார் வழியே அவருக்கு தகவல் சென்றது என்ற விசாரணையும் தனியாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 22 பிப் 2022