மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

தேர்தலுக்காக கொரோனா குறைத்து காட்டப்படுகிறதா?: அமைச்சர் மா.சு பதில்

தேர்தலுக்காக கொரோனா குறைத்து காட்டப்படுகிறதா?: அமைச்சர் மா.சு பதில்

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை ஜனவரி மாதத்தில் உச்சம் தொட்டது. ஜனவரி 21 ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 30,178 என்ற உச்சத்தை அடைந்து, பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தற்போது தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. நேற்று 949 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேர்தலுக்காகத்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக கொரோனா பாதிப்பு குறைத்து காட்டப்படுவதாகக் கூறுவது தவறு என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கைகள் நடத்தும் ‘நம்ம கபே’ சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மறைந்த முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது எப்படி மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் சூட்டி அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாரோ, அதுபோல் ஆண்பாலை குறிக்கின்ற வகையில் திரு என்பதையும், பெண்பாலை குறிக்கிற வகையில் நங்கை எனச் சேர்த்து திருநங்கை எனப் பெயர் சூட்டி அந்த சமூகத்திற்கு பெரிய மரியாதையை உருவாக்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்திய மக்கள் திருநங்கைகள் மீது அக்கறைக்கொள்கிற விஷயத்தை முன்னெடுத்தார். முதல்வர் ஸ்டாலின் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்துக்கொடுத்து அவர்களை தமிழகத்தில் சிறப்பித்து வருகிறார்.

அதுபோன்று, குமரவேல் திருநங்கைகளைப் பார்த்து அனுதாபப்படுவதை விடவும், இரக்கப்படுவதைவிடவும் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி அவர்களுக்கும் சமுதாயத்தில் முக்கிய பங்களிக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு இந்த ‘நம்ம கபே’ உணவக கிளையை அவர்களுக்கு தந்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயமாகும்.

தமிழகத்தில் இருக்கிற திருநங்கைகள் அனைவரும் இதுபோன்ற புதிய, புதிய உத்திகளுடன்கூடிய தொழில்முனைவோராக ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவை கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், “முதல்வரின் தீவிர நடவடிக்கையினால், தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே குறைந்திருக்கிறது.

விரைவில் பூஜ்ஜியம் என்ற இலக்கை அடைவோம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் காரணமாக கொரோனா பாதிப்பு குறைத்து காட்டப்படுவதாக கூறுவது தவறு. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை. குறைத்து காட்டவும் முடியாது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 92 சதவிகிதம் பேர் முதல் தவணையையும், 72 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அகில இந்திய அளவில் 175 கோடி அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 9 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 169 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குஜராத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் 10 கோடி அளவுக்கு வருகிற வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று நம்பிக்கை இருக்கிறது. வரும் சனிக்கிழமை 26ஆம் தேதி 23வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. இன்றையிலிருந்து மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

-வினிதா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

திங்கள் 21 பிப் 2022