மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி ரிசல்ட்: தலைவர்களின் கணக்கு!

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி ரிசல்ட்: தலைவர்களின் கணக்கு!

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

"தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க‌. ஸ்டாலின் இந்த தேர்தலில் திமுக முழுமையான வெற்றியை பெறும் என்று கூறியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் நேர்மையாக நடந்தால் தங்களுக்கே வெற்றி வாய்ப்பு என்றும் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இதே நேரம் கட்சித் தலைவர்களுக்கு தங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு பற்றி என்ன ரிசல்ட் கிடைத்துள்ளது என்பதை அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகம் முழுவதிலும் 21 மாநகராட்சிகள் உட்பட நகராட்சிகள் பேரூராட்சிகளில் தேர்தல் நடந்திருந்தாலும்... பலருடைய கண்களையும் உற்று நோக்க வைத்திருப்பது கோவை மற்றும் சேலம் மாநகராட்சிகள் தான்.

பொதுவாக சென்னை மாநகராட்சி முடிவைத்தான் தமிழகம் முழுவதும் மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த முறை சென்னை மாநகராட்சியை விட கோவை மற்றும் சேலம் மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்பதைத்தான் மக்கள் மட்டுமல்ல திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைமைகளும் உற்று நோக்கி வருகின்றன.

குறிப்பாக திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்றாலும் கொங்கு மண்டலத்தில் கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் பெரிய தோல்வியை சந்தித்தது. அது மாதிரி இப்போது இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை சேலம் மாநகராட்சிகள் திமுகவுக்கு கிடைக்கும் என ஸ்டாலினுக்கு நம்பகமான தகவல்கள் சென்றுள்ளன.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் தனது தலைமையில் திமுக மீண்டும் பழைய திமுகவாக பலம் பெற்று வரும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஸ்டாலினே நேற்று கூறியிருக்கிறார்.

கோவையில் திமுகவுக்கு கிடைக்கும் வெற்றிக்கு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை தான் சுட்டிக்காட்டுகிறார் ஸ்டாலின்.

அவர் மட்டுமல்ல உதயநிதி, சபரீசன் ஆகியோரும் கோவையில் செந்தில்பாலாஜியின் தேர்தல் வியூகத்தை குறிப்பிட்டு குடும்பத்துக்குள் அவரை பாராட்டி இருக்கிறார்கள்.

'கோவை மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமித்ததிலிருந்து அவர் தினமும் கோவைக்கு சென்று வந்துகொண்டிருந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கிய செந்தில்பாலாஜி மற்ற நேரங்களில் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட திமுக வின் பூத் கமிட்டி, நிர்வாகிகள் ஆலோசனை, பிரச்சாரம் என்று ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார்.

அதுவும் பண விஷயத்தில் செந்தில் பாலாஜியை மிஞ்ச யாரும் இல்லை என்பது போல கோவை கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் முழுமையாக வாக்காளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக கரூரிலிருந்து தனக்கு நம்பகமான நண்பர்கள் உறவினர்கள் கொண்ட 100 பேர் டீமை கோவையில் களமிறக்கினார் செந்தில் பாலாஜி. அவர்கள் பண வினியோகத்தில் ஈடுபடும்போது சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு மிகவும் வேண்டியவர் களையும் அந்த டீமில் இணைத்து பண வினியோகத்தை எந்த விதமான முறைகேடும் இல்லாமல் முழுமையாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

சில வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் 70 சதவீதம் பேருக்கு கொடுத்தால் போதும் 60 சதவீதம் பேருக்கு கொடுத்தால் போதும் என்று சொன்னபோது கூட.... 'உங்களுக்கு என்ன ஆச்சு? பணத்தை நான் கொடுக்கிறேன் எல்லாருக்கும் கொண்டு நீங்க குடுங்க' என்று பேசி அவர்களை 100 சதவீதம் திருப்தியாக தேர்தல் பணி செய்ய வைத்தார் செந்தில்பாலாஜி.

கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களுக்காக செந்தில்பாலாஜி செலவு செய்தது 150 கோடி ரூபாய்க்கு குறையாது. இந்த வகையில் கோவை மாநகராட்சி உட்பட்ட கோவை மாவட்டத்தில் திமுக பெரிய வெற்றி பெறும்' என்று உதயநிதி, சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினரே செந்தில் பாலாஜியை சிலாகித்துக் கொள்கிறார்கள்.

கோவை பற்றி திமுக தலைமை மட்டுமல்ல

சில முக்கிய அமைச்சர்களும் கூட அறிவதற்கு ஆர்வம் காட்டினார்கள். காரணம், 'செந்தில் பாலாஜி ஏற்கனவே முதல்வர் குடும்பத்தினரோடு நெருங்கி இருக்கிற காரணத்தால் அமைச்சர்களிலேயே கொஞ்சம் உயர் படி நிலையில்தான் இருக்கிறார். கோவையும் ஜெயித்து விட்டால் அவரை இனி பிடிக்க முடியாது' என்பது மூத்த அமைச்சர்களின் முணுமுணுப்பாக இருக்கிறது.

கோவையை போன்றே ஸ்டாலின் கவனம் செலுத்திய இன்னொரு மாநகராட்சி சேலம். இம்மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் சேலம் திமுக நிர்வாகிகள் இடையே சவாலாக பணியாற்றியிருக்கிறார் நேரு.

கோவை அளவுக்கு பணம் இறங்க வில்லை என்றாலும் சேலத்தையும் திமுக வெற்றி பெறும் என்பது தான் ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் தகவல்.

இந்த நம்பிக்கையான தகவலை கேட்டுக்கொண்டு நேற்று சென்னையிலிருந்து தனது பண்ணை வீட்டுக்கு புறப்பட்டார் ஸ்டாலின்.

திமுகவில் இப்படி என்றால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிந்த 19ஆம் தேதி இரவில் இருந்தே தமிழகம் முழுதும் இருக்கும் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

'போன சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்று ஆட்சியை இழந்த பிறகு எடப்பாடி அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே... வார்த்தைக்கு வார்த்தை பழனிசாமி பழனிசாமி என்று என்னை தான் குறிப்பிட்டு தாக்கினார். காரணம் நாம் களத்தில் அவ்வளவு வலிமையாக நின்று திமுகவை திணற வைத்து இருக்கிறோம்.

கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட கொங்குப் பகுதி நம்முடைய கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். தென்மாவட்டத்தில் தான் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. ஓபிஎஸ் பற்றியும் சில தகவல்கள் எனக்கு வந்துள்ளன.

அதேநேரம் தலைநகர் சென்னையில் அதிமுகவின் தேர்தல் பணிகள் திமுகவையே வியக்க வைத்திருக்கின்றன.

'பிரச்சாரத்திலும் சரி தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியிலும் சரி அதிமுகவினர் திரண்டு நின்று துடிப்பாக தேர்தல் பணியாற்றினார்கள். கட்சியில் இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதிமுகவினரிடம் இந்த உழைப்பை நாங்க எதிர்பார்க்கவே இல்லை' என சில திமுக நண்பர்களே என்னிடம் கூறினார்கள். அந்த அளவுக்கு நாம் சென்னையிலும் நமது பலத்தை வெளிப்படுத்தி உள்ளோம். உள்ளாட்சி தேர்தல் அதிமுகவை வலிமைப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது' என்று எடப்பாடி அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் நம்பிக்கை யாகவே பேசியுள்ளார்.

இந்த தேர்தலில் திமுக அதிமுகவை தாண்டி கவனிக்கப்பட்ட இன்னொரு கட்சி பாஜக. கடைசி நேரத்தில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார் அண்ணாமலை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைத்து பார்க்காமல் திமுகவை மட்டுமே பாஜகவினர் கடுமையாகத் தாக்கினார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு மாநில அளவிலான பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அண்ணாமலை, 'வெற்றி தோல்வியை விடுங்கண்ணா. தமிழ்நாடு முழுசும் பாரதிய ஜனதா கட்சியையும் தாமரை சின்னத்தையும் தெருவுக்கு தெரு கொண்டு சேர்ந்திருக்கோம். எனக்கு வரும் தகவல்படி நம்மோட வாக்கு வங்கி மூன்று சதவிகிதம் என்பதில் இருந்து 8% ‌என்று உயர வாய்ப்பு இருக்கு. அப்படி 8% நாம வாங்கி விட்டோம் என்றால், வரும் எம்பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 சீட்டுகளை பாஜகவுக்கு நான் பெற்றுவிடுவேன்' என்று கணக்கு போட்டு சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. மேலும், 'உள்ளாட்சித் தேர்தல் களத்தில் திமுக, அதிமுகவினருககு இணையாக

பாஜக தொண்டர்கள் பிரச்சினைகளை சந்தித்து ‌ மாற்றுக் கட்சியினரோடு நேரடியாக மோத தயாராகும் அளவுக்கு தைரியம் பெற்றுள்ளனர். ஓட்டுகள் வாங்குவதை விட இது மிக முக்கியமானது' என்று மாநில நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார் அண்ணாமலை.

அதேபோல மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தமிழகம் எங்கும் தனது மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். பல இடங்களில் திமுகவின் கள்ள ஓட்டுகளை மக்கள் நீதி மையத்தினர் அம்பலப்படுத்தியது பற்றி கமல்ஹாசனிடம் அவர்கள் விவரித்துள்ளனர். நிலைமையை உணர்ந்த கமல்ஹாசன் தேர்தலுக்கு மறுநாளே தேர்தல் ஆணையத்திடம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சியின் வாக்கு சதவீதம் அடுத்த கட்டத்தை தாண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு. மக்கள் போட்ட கணக்கு என்னவென்று பிப்ரவரி 22ஆம் தேதி தெரிந்துவிடும்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

திங்கள் 21 பிப் 2022