ஒருநாள் முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த பழங்குடியின மக்கள்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்களித்து சென்றதை பார்த்தோம்.
இந்த நிலையில் திருநெல்வேலி அருகே, பழங்குடியின மக்கள், ஒருநாளுக்கு முன்னதாகவே வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதிக்கு சென்று காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பொதிகை மலையின் அடிவாரத்தில் காணி இனப்பழங்குடியினர் வசித்து வருகின்றனர். காணி என்றால் 24 மனை கொண்ட இடம் என்று பொருள். பாபநாசம் அணைக்கு அருகிலுள்ள சின்னமயிலார் காணியில் இஞ்சிக்குளி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு 9 காணி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான வாக்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பாபநாசம் மேல் அணை தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்தது. இவர்கள் தங்கள் பகுதியிலிருந்து நான்குமணி நேரம் படகில் பயணம் செய்து பாபநாசம் மேல் அணையை அடைய வேண்டும். அதன்பின்பு 10 கி.மீ நடந்து வாக்குச்சாவடி உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும். தேர்தல் அன்று இவ்வளவு நேரம் பயணம் செய்து, வாக்களிக்க முடியாது என்பதால், ஒருநாள் முன்னதாகவே அப்பகுதிக்கு சென்று தங்கியிருந்து தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அம்மக்கள் கூறுகையில், “வாக்குச்சாவடி மிக தொலைவில் அமைந்துள்ளதால் எங்களில் பல பேரால் வாக்களிக்க முடியவில்லை. இப்போது நாங்கள் 18 பேர் மட்டுமே வாக்களிக்க வந்துள்ளோம். இன்னும் 7 பேர் வரவில்லை. எங்களின் உரிமையை பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை கூட இழக்க விரும்பாததால், நாங்கள் வந்துள்ளோம். ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே இங்கு வருவோம்” என்று கூறினர்.
41 வயதான ஐயப்பன் என்பவர் கூறுகையில், “இவ்வளவு தூரம் பயணம் செய்து வர முடியாததால், முதியோர்களுக்கு தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை” என்று வேதனைப்பட்டார்.
அதுபோன்று தூத்துக்குடியில் நரிக்குறவர் சமூக மக்கள் 40 ஆண்டுகளில் முதல் முறையாக வாக்களித்தனர். நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நரிக்குறவர் சமூக மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-வினிதா