மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 பிப் 2022

ஹிஜாப் அணிந்து வாக்களிக்கக் கூடாதா? பாஜக-திமுக மோதல்!

ஹிஜாப் அணிந்து வாக்களிக்கக் கூடாதா? பாஜக-திமுக மோதல்!

மதுரையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வாக்குப்பதிவு மையத்திலிருந்து பாஜகவின் முகவரை வெளியேற்றிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இன்று மதுரை மேலூர் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து வாக்கு செலுத்த வந்த இஸ்லாமிய பெண்ணிடம், ஹிஜாப்பை அகற்றும்படி, பாஜக பூத் முகவர் கிரிராஜன் கூறினார். இதனால் அந்த பெண்ணுக்கும், கிரிராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற கட்சிகளின் முகவர்கள், அதிகாரிகள் வாக்கு சாவடியிலிருந்து வெளியேறினர். இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு போலீசார் வந்து பாஜக முகவர் கிரிராஜனை மையத்திலிருந்து வெளியே அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, தேர்தல் ஆணையர் பழனிக்குமார், “ இந்தியா மதசார்பற்ற நாடு. வாக்காளர்கள் எந்த உடையணிந்தும் வாக்களிக்கலாம். சம்பந்தப்பட்டவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில், “இன்று மதுரை மேலூர் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய பெண்மணியின் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்த பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜனை வெளியேற்றியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது அவரின் சட்ட உரிமை மட்டுமல்ல கடமையும் கூட.

"உங்களுக்கு மத நம்பிக்கைகள் தான் முக்கியம் என்று கருதுவீர்களேயானால் வாக்களிக்க செல்லாதீர்கள். ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்றால் வாக்காளரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும்" என்றும், "கடவுச்சீட்டு வேண்டுமென்றால் ஹிஜாப்பை நீக்கி புகைப்படம் எடுத்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள், வாக்காளர் அடையாள புகைப்படம் எடுக்க மறுப்பது தவறு" என்றும் ஜனவரி 23, 2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பாஜகவின் முகவரை வெளியேற்றிய அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தண்டிக்க வேண்டும். பாஜக முகவரை வாக்குசாவடிக்குள் அனுமதித்து நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டரில், ''மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

-வினிதா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 19 பிப் 2022