தேர்தலை புறக்கணித்த மக்கள்!

இன்று காலை முதல் மக்கள், முதியோர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வாக்கு செலுத்தி வரும் நிலையில், திருவெறும்பூர் அருகே 38வது வார்டில் காட்டூர் பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 38வது வார்டில் காட்டூர் பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தங்களது அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லீப்பை ஒரு அட்டை பெட்டியில் போட்டு, மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வசதி, கழிவறை வசதி, வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து தரவில்லை. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவொரு அடிப்படை வசதியும் செய்யபடாததைக் கண்டித்து, இன்று நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து காட்டூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டபோது, மூன்றாவது வார்டில் இருந்த பகுதிகள் இரண்டாவது வார்டுக்கு மாற்றப்பட்டது. இதை பழையபடியே இரண்டாவது வார்டு வாக்குச்சாவடிக்கு மாற்றக் கோரி ராஜாநகர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ராஜாநகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேர்தலை புறகணித்ததுடன், கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-வினிதா