மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 பிப் 2022

ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய சேலம்

ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய சேலம்

இன்று (பிப்ரவரி 19) காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சி, முன்னாள் அமைச்சர் வேலுமணி மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சி இவை இரண்டையும் குறிவைத்து மேயர் பதவியைப் பிடிக்க திமுகவும் அதிமுகவும் வரிந்து கட்டி வருகின்றன.

கொங்கு மண்டலத்தை அதிமுக எஃகு கோட்டையாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோர் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையையும் சேலத்தையும் விட்டு விடக்கூடாது என்று கௌரவ பிரச்சனையாக கருதி மெகா திட்டம் போட்டு வேலை செய்து வருகின்றனர்.

அதேபோல திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சேலம் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியைப் பிடித்தாக வேண்டும் என்ற கடுமையான முனைப்பில் இருப்பதாக சொல்கிறார்கள் திமுக வினர்.

சேலம் மாநகராட்சியில் வாக்கு பதிவு எப்படி நடைபெறுகிறது என்று ஒரு விசிட் அடித்தோம்.

7,9,19,60 வார்டுகள் உட்பட பத்து வார்டுகளில் திமுகவினர் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்கள். அவர்களை கட்சியை விட்டும் நீக்கி விட்டனர்‌.

"போட்டி வேட்பாளர்களை நீக்கிவிட்டால் போதுமா?. இந்த நேரத்தில் வீரபாண்டியார் இருந்திருந்தால் அவர்களை கூப்பிட்டு சமரசம் செய்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க சொல்லி இருப்பார், இந்த மாவட்ட செயலாளர் அந்த முயற்சியை எடுக்க வில்லை" என்கிறார்கள் போட்டி வேட்பாளரை எதிர்கொள்ளும் திமுக நிர்வாகிகள்.

26வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலையமுதன் ஓட்டுக்கு 500 வீதம் 50% வாக்காளர்களுக்கு மட்டுமே கொடுத்தார். மீதி வாக்காளர்களுக்கு கேட்டால் என்னிடம் பணம் இல்லை என்று கை விரித்துவிட்டார்.

6வது வார்டில் திமுக வேட்பாளர் ஆள் பார்த்து ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தார்.அதிமுக வேட்பாளர் அனைவருக்கும் 500 ரூபாய் கொடுத்தார். அவர்களைத் தாண்டி அமமுக வேட்பாளர் விஷ்ணு பார்த்திபன் ஓட்டுக்கு 700 ரூபாய் கொடுத்தார்.

அதிமுக திமுக இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஓட்டுக்கு 500 என்று கொடுத்தனர். ஆனால் திமுகவினர் 50 முதல் 60% வரையில் மட்டுமே கொடுத்தனர் அதுவும் வாக்காளர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்ற புகாரும் தேர்தல் நாளான இன்று திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

அதிமுகவினர் மூன்று மாதத்திற்கு முன்பே பலவிதமான திட்டங்களுடன் தேர்தல் பணிகளைத் துவங்கி விட்டனர்.

100 வாக்காளர்களுக்கு 2 நிர்வாகிகள், 500 வாக்காளர்களுக்கு 5 பொறுப்பாளர்கள், 1000 வாக்காளர்களுக்கு 10 செயல் வீரர்கள் என நியமித்து வெளியூரில் உள்ள வாக்காளர்கள் பற்றிய கணக்கு எடுத்து அதுக்கு ஒரு பட்ஜெட் போட்டு இன்று அழைத்து வந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வைக்கிறார்கள்.

மேலும் 80 முதல் 90% வாக்காளர்களுக்கு 500 வீதம் தடையில்லாமல் பணம் வழங்கப்பட்டுள்ளது.

அதனால்தான் அதிமுகவினர் நம்பிக்கையுடன் நடமாடுகிறார்கள், திமுகவினர் தளர்ந்து போயுள்ளனர் என்று திமுக வேட்பாளர்கள் சிலரே நம்மிடம் தெரிவித்தனர். இன்று காலை முதலே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகராட்சி வாக்குப்பதிவு விவரங்களை கட்சிக்காரர்களிடம் கேட்டு வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின், உளவுத்துறை கொடுக்கும் ரிப்போர்ட்களை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்களைத் தொடர்பு கொண்டுவருகிறார்.

அப்போது பலரிடம் சந்தோஷமாகவும் சிலரிடம் டென்ஷனாகவும் பேசி வருகிறார்.

சேலம் நிலவரத்தையும் அதற்கான காரணங்களையும் கேட்டு டென்ஷனாகிவிட்டார் திமுக தலைவர் என்கிறார்கள் சேலம் உடன்பிறப்புகள்.

-வணங்காமுடி

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

சனி 19 பிப் 2022