மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 பிப் 2022

சிறப்பு நேர்காணல்: உ.பி. தேர்தலில் நடப்பது இதுதான்! - பாகம் – 3

சிறப்பு நேர்காணல்: உ.பி. தேர்தலில் நடப்பது இதுதான்! - பாகம் – 3

ராஜன் குறை, ஸ்ரீரவி

பாகம் – 1 / பாகம் – 2

உத்தரப்பிரதேசத் தேர்தல் குறித்து அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜீல் வெர்னியர்ஸுடன் நடத்திய நேர்காணல் தொடர்ச்சி ..

ஜீல் வெர்னியர்ஸ் (Dr. Gilles Verniers) அசோகா பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயின்ஸ் எனப்படும் அரசியல் கோட்பாட்டுத் துறையில் பணியாற்றுபவர். உத்தரப்பிரதேச மக்களாட்சி அரசியல் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்பவர். ஆங்கில ஊடகங்களில் அரசியல் நிகழ்வுகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருபவர். அவருடன் உரையாடி உத்தரப்பிரதேசத் தேர்தல் நிலவரம் குறித்து அறிந்துகொள்ள விரும்பினோம். ஜனவரி மாத இறுதியில் அவருடன் உரையாடியதன் சுருக்கப்பட்ட நேர்காணல் வடிவத்தைத் தருகிறோம்.

உத்தரப்பிரதேசத்துக்கென்று அப்படி ஒரு தனித்துவமான அடையாளமோ, கதையாடலோ எதுவும் இல்லை என்பதுதான் பிரச்சினையா?

இந்தக் கருத்தைப் பல ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். காலனீய ஆட்சியின் யுனைடெட் பிரொவின்ஸ் (ஒருங்கிணைக்கப்பட்ட பிரதேசம்) என்ற பெயரே ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைச் சார்ந்ததாக இருக்கவில்லை. அதனால் அது இந்திய தேசத்தினுள்ளேயே கலந்து போய்விட்டது. அவதி கலாச்சாரம் என்ற தனித்துவமிக்க கலாச்சாரக் கலவை உருவாகத்தான் செய்தது. ஆனால், அதன் தனித்துவம் என்பது மெல்ல வலுவிழந்து போய்விட்டது. அதனால் பாரதீய ஜனதா கட்சியின் மத அடையாளத்துக்கு மாற்றாக மற்றொரு பொது அடையாளத்தை உருவாக்குவது கடினமாக உள்ளது.

அறுபது, எழுபதுகளில் விவசாயிகள் இயக்கம் வலுவாக இருந்தது. அப்போது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உழைக்கும் மக்களைத் திரட்டும் சாத்தியம் இருந்தது. அப்படியான இருப்பவருக்கும், இல்லாதோருக்குமான முரணை மையப்படுத்துவது என்பது பீகாரில் ஓரளவு சாத்தியமானது. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் லாலு பிரசாத் யாதவால் ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அணி திரட்ட முடிந்தது.

உத்தரப்பிரதேசத்தில் ஆதிக்க ஜாதிகளைத் தவிர்த்துவிட்டு அரசியல் அணிகளை உருவாக்குவது என்பது சாத்தியப்படவில்லை. மேலும், இப்போது ராஷ்டிரீய லோக் தளம் போன்ற கட்சிகளே மிகவும் பணக்கார விவசாயிகளின், வர்த்தகர்களின் தலைமையில் நடக்கிறது. அதனால் முன்புபோல சோஷலிஸ அரசியலை முன்னெடுப்பது கடினமாக இருக்கிறது. அதனால் இந்து அடையாள அரசியலை எதிர்ப்பதுகூட கடினமாக இருக்கிறது. அகிலேஷ் மதச்சார்பின்மை குறித்துப் பேசுகிறார். அவர் மத அடையாளத்தை அரசியலாக்க மாட்டேன் என்ற அளவில் சொல்கிறார். அவரால் அவர் தந்தையைப் போல மதச்சார்பின்மை குறித்து உரத்து முழங்க முடியவில்லை.

முலாயம் சிங் யாதவ் நரேந்திர மோடியைச் சிறிது காலம் முன்பு பாராட்டிப் பேசியதைப் பார்த்தோம். அதை எப்படிப் புரிந்துகொள்வது?

முலாயம் சிங் யாதவ் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி இரண்டையுமே கடுமையாக விமர்சனம் செய்பவர்தான். அதே நேரம் வயது, அனுபவம் காரணமாக கட்சி விரோதங்களைக் கடந்து நாகரிகமாக அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது. மோடியைப் பாராட்டிப் பேசிய தருணத்தை அப்படித்தான் அரசியல் நாகரிகம் தொடர்பான சங்கதியாகப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் பாரதீய ஜனதா கட்சி கருத்தியலை அங்கீகரிக்கிறார் என்று அதற்குப் பொருளல்ல.

சமாஜ்வாதி கட்சி முழுவதும் அகிலேஷ் யாதவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதா?

ஆம். வந்துவிட்டது. உட்கட்சிப் பூசல்கள் மிகவும் குறைந்துவிட்டன. ஷிவ்லால் யாதவும் இணைந்துவிட்டார். அகிலேஷ் தலைமை உறுதிப்பட்டுவிட்டது.

அகிலேஷ் யாதவ் வெற்றிபெற வாய்ப்புள்ளதா?

நான் தேர்தல் முடிவுகள் குறித்து ஆரூடம் சொல்வதில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாதது ஒரு பலவீனம் என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரம் பாஜக வென்றால் மட்டும் போதாது. சென்ற தேர்தலைப் போல மிகப் பெருவாரியாக வெல்ல வேண்டும். அது இந்த முறை நடக்குமா என்று தெரியவில்லை. மேலும் உத்தரப்பிரதேசத்தின் வரலாற்றில் எந்த முதல்வரும் தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதாக வரலாறு இல்லை. சுதந்திரத்துக்கு முன்னும்,

பின்னுமாக ஜி.பி.பந்த் ஆட்சியில் தொடர்ந்திருக்கிறார். ஆனால், அதைக் கணக்கில் சேர்க்க முடியாது. அதன் பிறகு எல்லா முதல்வர்களும் தேர்தலுக்குப் பிறகும் ஆட்சியில் தொடர்ந்ததில்லை. ஆனால், இது மாற்ற முடியாத விதி அல்ல. அநேகமாக இந்த முறை யோகி ஆதித்யநாத் வெல்லலாம். எதிர்பாராத திருப்பங்களும் நிகழலாம்.

ஆனால், பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சினை வேறு விதமானது. சென்ற முறை அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் பெருவாரியாக வென்றது அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பிம்பத்தை உருவாக்கியது. உத்தரப்பிரதேசத்தில் பெருவாரியாக வென்றவர்கள் என்பதால் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக அது கருதப்பட்டது. நாடாளுமன்றத்தில் அவர்களது அறுதிப் பெரும்பான்மை உத்தரப்பிரதேசத்தை நம்பித்தான் இருக்கிறது. அதனால் யோகி ஆதித்யநாத் குறைந்த எண்ணிக்கையில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தாலும், அதனால் பாரதீய ஜனதா கட்சியின் பலவீனம் புலப்பட்டுவிடலாம். நாடாளுமன்றத்தில் இருபது, முப்பது இருக்கைகள் உத்தரப்பிரதேசத்தில் குறைந்தால் மீண்டும் அவர்கள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது கடினம். அதுதான் பாஜக இந்தத் தேர்தலில் சந்திக்கும் சவால் என்று கூற வேண்டும். யோகி ஆதித்யநாத்தின் தேசிய அரசியல் கனவுகளும் பெருவாரியான வெற்றி பெற்றால்தான் உயிர்பெறும்.

சந்திரசேகர ஆசாத் புதிய கட்சி துவங்கியுள்ளார். அவருடைய தாக்கம் எப்படி இருக்கும்?

அவருக்கு தலித் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அந்தச் செல்வாக்கு தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் அமைப்பு ஒரு சில இடைத்தேர்தல்களில் பங்குபெற்று கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது. ஆனால், அது மேற்கு உத்தரப்பிரதேசத்தில்தான் வலுவாக உள்ளது. அதனால் எந்த அளவு அவர் அமைப்பால் மாநில அளவில் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஒரு குறீயீட்டு மதிப்புக்காக அவர் முதல்வர் ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி கட்சியுடன் அவருக்குக் கூட்டணி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமாஜ்வாதி கட்சியில் குறிப்பிடத்தகுந்த தலித் தலைவர்கள் யாரும் இப்போது இல்லை. முஸ்லிம் தலைவரான அசம் கானுக்கு இணையாக தலித் தலைவர் இல்லை. அதனால் சந்திரசேகர் ஆசாத் கூட்டணி சமாஜ்வாதிக்கு வலு சேர்த்திருக்கும். தவற விட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், யோகி ஆதித்யநாத்துக்கு மாற்று சமாஜ்வாதிதான் என்பதால் களத்தில் வலுவாகத்தான் இருக்கிறது அந்தக் கட்சி.

ராஷ்டிரீய லோக் தள் கூட்டணி சமாஜ்வாதி கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா?

மேற்கு உத்தரப்பிரதேசத்தில்தான் ஜாட் விவசாயிகளிடையே ஆர்.எல்.டி கட்சிக்கு ஆதரவு தளம் இருக்கிறது. அதிலும் சென்ற முறை அதிகமான ஜாட் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதீய ஜனதா கட்சியிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ஜெய்ந்த் செளத்ரி நிச்சயம் இந்த சந்தர்ப்பத்தில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முற்படுவார். விவசாயிகள் போராட்டத்தினால் பாரதீய ஜனதாவுக்கு இந்தப் பகுதியில் பின்னடைவு இருப்பது உண்மை. ஆனால், அதனால் பிற கட்சிகள் பலனடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகள் குறித்து என்ன நினைக்கிறார்கள்? பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் எடுபடுமா?

வேர்மட்ட அமைப்புகள் வலுவாக இல்லாமல் தேர்தலில் வெல்வது கடினம். பிரச்சாரம் நன்றாக இருக்கிறது. பெண்களுக்கு 40 சதவிகிதத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள். அவர்கள் வெற்றி பெறக்கூடிய மாநிலங்களிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், களத்தில் அமைப்பு வலுவிழந்து போயுள்ளது. இப்போதும் சில பகுதிகளில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. சென்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுக்கு 100 தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பெரிதும் பலவீனமடைந்தது. இந்த முறை தங்கள் எதிர்பார்ப்பை காங்கிரஸ் குறைத்துக்கொண்டு, அவர்கள் சக்திக்கேற்றபடி குறைந்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் தனித்து நின்று தங்கள் ஆதரவு தளத்தை வலுப்படுத்த நினைக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளில் வெல்லலாம். அதற்கு மேல் முக்கியத்துவம் இல்லையென்றுதான் நினைக்கிறேன்.

நன்றி. பல்வேறு அம்சங்களையும் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருப்போம்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

சனி 19 பிப் 2022