H10 பெற்று 15 கொடுத்த அமைச்சர்!

politics

புதியதாக அறிவிக்கப்பட்ட கடலூர் மாநகராட்சியைப் பிடிக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு கரன்சியால் போராடிவருகிறார்கள்.

கடலூர் மாநகராட்சித் தேர்தல் என்பதைவிட நகராட்சித் தேர்தல் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

2021அக்டோபர் 21ஆம் தேதி
கோண்டூர், காரமணிக்குப்பம், வரக்கால்பட்டு, கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு ஊராட்சிகள் உட்பட 22 ஊராட்சிகளைக் கடலூர் நகராட்சியுடன் இணைத்துத்தான் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சிகளை இணைக்காமல் பழையபடியிருந்த நகராட்சியான 45 வார்டுகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறுகிறது.

45 வார்டுகள், 924 வீதிகள், 44,500 குடியிருப்புகள், 1லட்சத்து 42 ஆயிரத்து 479 வாக்காளர்கள், சுமார் 2லட்சம் மக்கள் தொகை அடங்கியுள்ளதுதான் கடலூர் நகராட்சி.

45 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக 3, கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 2, தவாக 3 வார்டிலும் மனித நேய மக்கள் கட்சி 1வார்டிலும் திமுக சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள். திமுக நேரடியாக 34 வார்டுகளில் போட்டியிடுகிறது.
அதிமுக 45 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

பாஜக, பாமக, அமமுக, நாம் தமிழர் கட்சி, போன்ற கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகள் என மொத்தம் 286 பேர் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக வேட்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மூன்று லட்சம் முதல் பத்து லட்சம் வரையில் கொடுத்து உதவிவருகிறார், அதனால் அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு அதிகபட்சம் 500 ரூபாய் என்றும் குறைந்தது 300 என்றும் விநியோகம் செய்துவிட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்பு திமுக வேட்பாளர்களை அழைத்த வேளாண் துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
” நேர்காணலில் எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள்? கையில் எவ்வளவு உள்ளது? என்று கேட்டபோது… நீங்க எல்லோரும் பத்து லட்சம் இருப்பதாகவும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன்னும் சொன்னீர்கள். அந்த பணத்தை இப்போது கொடுங்க” என்றதும் விழிபிதுங்கிப் போய்விட்டனர் திமுக வேட்பாளர்கள்.
அவர்களின் பதிலை எதிர்பார்க்காத அமைச்சர்,
“போய் எடுத்து வாங்கய்யா அப்போதான் வாக்காளர்களுக்கு எவ்வளவு கொடுக்கறதுன்னு முடிவு செய்யமுடியும்” என்றார்.

உடனே பலரும் பத்து லட்சம் கொடுத்தார்கள். சிலர் ஐந்து, ஏழு என்று கொடுத்தார்கள். அனைத்து பணத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு நேற்றும் நேற்று முன் தினமும் வேட்பாளர்களை அழைத்து பத்து லட்சம் கொடுத்தவர்களுக்கு 15 லட்சம், ஐந்து லட்சம் கொடுத்தவருக்கு பத்து லட்சம் கொடுத்த அமைச்சர், நகரச் செயலாளர் ராஜாவுக்கு மட்டும் 30 லட்சம் கொடுத்துள்ளார்.
ஏன் அவருக்கு மட்டும் சிறப்புச் சலுகை என்று கேட்டபோது, “ராஜா, அவரது மனைவி, அவரது மச்சான் மூன்று பேர் போட்டியிடுகிறார்கள். அதனால் 30 லட்சம்” என்றாராம் அமைச்சர்.

அந்த பணத்தை வாங்கிதான் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் என விநியோகம் செய்துள்ளனர் திமுக வேட்பாளர்கள்.

5வது வார்டில் சூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர் பார்வதி. அவரது மகன் லெனின் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யக்கூடியவர் நகரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல அறிமுகமானவர் உதவும் குணம் உள்ளவர் என்பதாலும், பார்வதி கணவர் அய்யாசாமி அரசு ஊழியர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். அவர் பணியிலிருந்தபோது ஒரு பைசா லஞ்சம் வாங்காதவர், என்பதால் அவரது வார்டில் குடியிருக்கும் அரசு ஊழியர்கள் சுமார் 500 பேர் ஒன்று சேர்ந்து, ‘ ஓட்டுக்குப் பணம் எங்களுக்கு வேண்டாம், எங்கள் வாக்குகள் உங்களுக்குத்தான் என்று” உறுதி கொடுத்துவிட்டு அவர்களும் திண்ணை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அமைச்சர் எம்.ஆர்.கே.மகன் கதிரவன் காட்டு மன்னார் கோவிலில் உள்ள தனது பொறியியல் கல்லூரியின் பணியாளர்களை அழைத்து வந்து 45 வார்டுகளுக்கும் பிரித்து டூட்டி போட்டு வாக்காளர்களுக்குச் சரியாகப் பணம் போய்ச் சேர்ந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மக்களின் தீராத குறையாக இருப்பது முக்கியமான மூன்று பிரச்சினைகள்.

குப்பைகள் கெடிலம் ஆற்றங்கரை ஓரத்திலும் தென்பெண்ணையாறு ஓரத்திலும், இரயில்வே பாதை ஓரத்திலும் கொட்டி குப்பைமேடாக உயர்ந்துகொண்டே போகிறது.

நெல்லிக்குப்பம் ஆலையின் கழிவுநீர் கெடிலம் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசு படிந்துள்ளது‌.
2007இல் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாளச்சாக்கடை திட்டம் கடந்த 15ஆண்டுகளாக முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது.
சமீபத்தில் எல்&டி நிறுவனம் பூமிக்கடியில் மின் இணைப்பைக் கொண்டு செல்பவர்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் மின் இணைப்பு கேபிள்களை ஏர் கம்ப்ரசர் மூலம் செலுத்தியபோது பாதாள சாக்கடை குழாய்களை உடைத்துக்கொண்டன. இதை
சரி செய்யாமல் தாமதிக்கிறார்கள் நகராட்சி நிர்வாகத்தினர்.

பிரச்சனைகள் இவ்வளவு இருந்தாலும் கடலூரில் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார். அதனால் திமுகவும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது

**-வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *