மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

ஹிஜாப்பை எதிர்க்கவில்லை: கர்நாடக அரசு தரப்பு வாதம்!

ஹிஜாப்பை எதிர்க்கவில்லை: கர்நாடக அரசு தரப்பு வாதம்!

கல்லூரிகள் நிர்ணயித்த சீருடைகளையே மாணவர்கள் அணிய வேண்டும் என்றுதான் கூறுகிறோம், அரசு ஹிஜாப்பை எதிர்க்கவில்லை என்று கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆறாவது நாளாக இன்று(பிப்ரவரி 18) மீண்டும் ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜெஎம் காஸி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த நாட்களில் மாணவிகள் தரப்பு வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அரசு தரப்பு வாதம் நடைபெற்றது.

அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் புரபுலிங் நவடாகி, "உடுப்பியில் உள்ள பியூ கல்லூரியில் 2013ஆம் ஆண்டிலிருந்தே சீருடை விதிகள் உள்ளன. அதன்படிதான், மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வந்தனர். அதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. 2021 டிசம்பரில் சில மாணவிகள் திடீரென்று ஹிஜாப் அணிந்து வந்ததுதான் பிரச்சனை ஆனது. இந்த சம்பவம் நடந்ததும் கல்லூரி சிடிசி கமிட்டி ஜனவரி 1 ஆம் தேதி கூடி ஆலோசனை செய்தது. அதில் 1985 ஆண்டில் இருந்தே பியூ கல்லூரியில் சீருடை பின்பற்றப்படுகிறது. இருப்பினும் சில மாணவிகளின் பெற்றோர்கள், ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரியதால், அதை கல்லூரி சிடிசி கமிட்டி பரிசீலித்தது. இறுதியில் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், சீருடை விதிகளை மாணவிகள் பின்பற்றப்பட்டும். இதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டாம். ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பிரச்சனை பெரிதானதால்,சிடிசி கமிட்டி அரசை அணுகியதால், மாணவ-மாணவியர்கள் சீருடையை அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஹிஜாப்புக்கு எதிராக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அரசு உத்தரவை 10 முறை படித்து பார்த்தால் கூட அதில் ஹிஜாப்புக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இல்லை. கல்லூரி கமிட்டி கூறும் சீருடையை அணியுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். தேவையில்லாமல் எங்களை இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டுள்ளனர்” என்று வாதாடினார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், “அரசு ஹிஜாப்பிற்கு எதிராக பேசவில்லை என்றால் அதை பற்றிய வழக்கு எடுத்துக்காட்டுகளை ஏன் அரசு உத்தரவில் குறிப்பிட வேண்டும். ஹிஜாப் தடை என்பது அரசியலமைப்பு பிரிவு 25க்கு எதிரானது இல்லை என்று ஏன் நீங்கள் வாதம் வைக்க வேண்டும்

ஹிஜாப்பை நீங்கள் எதிர்க்கவில்லை என்று கூறி உள்ளீர்கள். அப்படி என்றால் ஏன் அதற்கு எதிரான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று கேள்வி கேட்டனர்.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “ அது எங்கள் தவறு ,அதை நாங்கள் செய்திருக்க கூடாது. அனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நாங்கள் ஹிஜாப்பை எதிர்க்கவில்லை. நாங்கள் சொன்னது ஒரே ஒரு விஷயம்தான். கல்லூரி கமிட்டி அறிவிக்கும் சீருடையை மாணவ, மாணவியர் அணிய வேண்டும். கல்லூரி கமிட்டிக்கு நாங்கள் இதில் முழு சுதந்திரம் அளித்துள்ளோம்” என்று கூறினார்.

இதையடுத்து கல்லூரி கமிட்டி எப்படி உருவாக்கப்படும் என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “எம்எல்ஏ தலைமையில் கல்லூரி நிர்வாகம் உருவாக்கும் கமிட்டி ,அரசு இதற்கு கடைசியில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

“எம்எல்ஏ தலைமையிலான கமிட்டி கல்லூரி சீருடையை முடிவு செய்தால் அதில் அரசியல் தலையீடு இருக்குமோ” என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “பல வருடமாக இந்த கமிட்டிகள் உள்ளன. எந்த அரசியல் பிரச்சனையும் இல்லை . கல்வி நிறுவனங்களில் உள்ள ஆடைக் கட்டுப்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை. கல்லூரி கமிட்டி முடிவெடுக்க அனுமதிக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் கூடுதல் வாதங்களை வைக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், உயர் நீதிமன்ற உத்தரவை மாணவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்வுகளை எழுத வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 18 பிப் 2022