>குரூப் 2 தேர்வு எப்போது?

politics

குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு எப்போதிலிருந்து விண்ணப்பிக்கலாம், தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்தான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(பிப்ரவரி 18) சென்னை பிராட்வே தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்,”தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் முக்கியமானவை.

அதன்படி, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறும். இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 23ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். அன்றிலிருந்து மார்ச் 23 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, இத்தேர்வுகளை இருவகைகளில் எழுதலாம். அதன்படி, தமிழில்
தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில்(கணிதம்) 25 கேள்விகள் கேட்கப்படும்.

ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதில் 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி இல்லை.

குரூப் 2 தேர்வு மூன்று கட்டமாக நடைபெறவுள்ளது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டமாக நடைபெறும். நேர்முகத் தேர்வு இருக்கும் குரூப்-2-க்கு 116 பணியிடங்களுக்கும், நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் 2- ஏ-க்கு 5413 பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறும்.

குரூப்2 மற்றும் 2ஏ தேர்வு முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதன்மை எழுத்துத்தேர்வு நடைபெறும். டிசம்பர் மற்றும் 2023 ஜனவரி மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும்.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுவதற்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகலுக்கான தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வின்போது கருப்பு மை கொண்ட பேனாவும், முதன்மை எழுத்துத் தேர்வில் ஜெல், பால்பாயின்ட் பேனாவும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதன்முறையாக காவல் துறையில் சிறப்பு பிரிவு உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த தேர்வுக்கு 9லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வெற்றி பெறுபவர்களில் 65ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் முதன்மை தேர்வை எழுத அனுமதிப்போம். தேர்வர்கள் அனைவரும் வரும் 28ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை நிரந்தரபதிவில் இணைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *