மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

மதுரை: திமுகவுக்கு உதவும் பாஜக-அதிமுகவை தடுக்கும் அமமுக

மதுரை: திமுகவுக்கு உதவும் பாஜக-அதிமுகவை தடுக்கும் அமமுக

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள மதுரையின் மாநகராட்சித் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

100 வார்டுகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. பாஜகவும் நூறு வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தாலும், அதில் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை.

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 23 வார்டுகளை பிரித்துக் கொடுத்துவிட்டு மீதியுள்ள 77 வார்டுகளில் போட்டியிடுகிறது.

மதுரை மாநகரைப் பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமூகத்தினரும் அவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் வாக்காளர்கள் சிறுபான்மையினர் என்று சொல்லக்கூடிய இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும்தான். இவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நமக்கு தான் விழும் என்ற அழுத்தமான நம்பிக்கையில் இருக்கிறார்கள் திமுகவினர்.

அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கணிசமான சமுதாய வாக்குகள் வாங்கக்கூடிய அமமுக வேட்பாளர்கள் 85 வார்டுகளில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் முன்னாள் கவுன்சிலர்கள் கேசவ பாண்டியம்மாள் மற்றும் ராஜபாண்டியன் போன்றவர்களும் போட்டியிடுவதை அதிமுக ஒருவித பதற்றத்தோடு தான் பார்க்கிறது.

மதுரையின் இரு அமைச்சர்களில் பழனிவேல் தியாகராஜனை விட அமைச்சர் மூர்த்தி இறங்கி வேலை செய்திருக்கிறார். திமுகவின் களப்பணிக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பெருமளவில் துணை நின்றுள்ளனர்.

அந்த வேலைகளை விட, நேற்று முன் தினம் இரவு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று 70% வாக்காளர்களுக்கு விநியோகம் செய்துவிட்டனர்.

அதிமுகவின் மதுரை அடையாளங்களான ராஜன் செல்லப்பா மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் பிரசாரத்தில் தென்றலாக இருந்தார்களே தவிர, சூறாவளியாக இல்லை.

அதிமுக வேட்பாளர்கள் சிலரிடம் பேசுகையில், "முன்னாள் மேயரான ராஜன் செல்லப்பாவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் எதிரும் புதிருமாகவே தேர்தல் களத்தைக் கடந்து விட்டார்கள். இதன் விளைவு தேர்தல் முடிவில் தெரியும்" என வருத்தமாக சொல்கிறார்கள். திமுக கொடுத்ததை கவனித்து அதிமுகவும் நேற்று இரவு பட்டுவாடா முடித்தது.

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மாவட்டச் செயலாளர்களான ராஜலிங்கம், பேராசிரியர் ஜெயபால், சரவணன், மகேந்திரன், அம்மா பேரவை மாநிலச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை போன்றவர்கள் ரவுண்டுகட்டி வேலை செய்தனர். அவர்கள் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைக் குறிவைத்து பணியாற்றியுள்ளனர்.

பாஜகவினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார். அப்போது அவரை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு, 'செங்கல் திருடர்கள் ஜாக்கிரதை' என்ற ஒரு போஸ்டரை பாஜகவினர் மதுரையில் பரவலாக ஒட்டினர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படாத நிலையில் அதை கண்டித்து பிரதமர் மோடி நட்ட செங்கல் இதுதான் என்று கூறி உதயநிதி தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்தார். அது திமுகவுக்கு பெரும் பலனை கொடுத்தது.

இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில் உதயநிதி செங்கல்லைத் தூக்கி பிரச்சாரம் செய்யும் காட்சியை போஸ்டர்கள் ஆக்கி ஒட்டியது பாஜக. இதைப்பார்த்த திமுகவினர், 'திமுகவை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு திமுகவுக்கு ஆதரவு திரட்டும் வேலையை பாஜக செய்கிறது' என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பாஜகவின் களப்பணி அதிமுக வாக்குகளை பிரிக்கக் கூடியது என்பதால் திமுகவுக்கு அது மேலும் சாதகமாகவே இருக்கிறது

திமுக தரப்பில் களப் பணி, கரன்சி பணி, கூட்டணி ஒத்துழைப்பு ஆகியவை பலம் சேர்க்கின்றன.

அமமுக, பாஜக ஆகியோரின் வேலைகள் தங்கள் அடிமடியில் கை வைப்பதை மதுரை அதிமுகவினர் உணர்ந்தே இருக்கிறார்கள்.

-வணங்காமுடி வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 18 பிப் 2022