மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: அவசர கதியில் இயற்றப்படும் சட்டங்கள்!

சிறப்புக் கட்டுரை: அவசர கதியில் இயற்றப்படும் சட்டங்கள்!

சக்‌ஷு ராய்

தற்போதைய மக்களவை, இரண்டரை ஆண்டுக் காலத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. முந்தைய 16ஆவது மக்களவை அதன் முழுப் பணி காலத்தில் 133 சட்டங்ளை நிறைவேற்றியது. இதுவே 15ஆவது மக்களவை நிறைவேற்றிய சட்டங்களைவிட 15 சதவிகிதம் அதிகம். சட்டம் நிறைவேற்றுவதில் வெளிப்படும் இந்த வேகம் அரசு தரப்பில் உறுதியின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், செயல்முறைக்கு பதிலாக வேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்படும் சட்டங்களின் தரமும் களத்தில் அவற்றின் தாக்கமும் குறைந்திருக்கின்றன.

சட்டங்கள், மாற்றத்துக்கான வலுவான சாதனங்களாகத் திகழக்கூடும். ஆனால், மோசமாக உருவாக்கப்பட்ட சட்டங்கள், அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. சட்டத்தை மாற்றுவது நீண்ட செயல்முறை என்பதால், ஒரு சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு அது நீண்ட காலம் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது. எனவே, நாடாளுமன்றம் நிறைவேற்றும் ஒவ்வொரு சட்டமும் இயன்றவரை குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களில் உள்ள பிரச்சினைக்கான உதாரணங்களைப் பார்க்கலாம்...

புலம்பெயரும் தொழிலாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட 1979 மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு, பணிச்சூழல் கட்டுப்பாடுகள்) சட்டம் தோல்வியடைந்த ஒன்று என்பதை கொரோனா கால புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையில் பார்த்தோம்.

உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய பிறகும், மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதைத் தடை செய்ய முன்பு இருந்த செயல்திறனில்லாத சட்டத்தைவிடவும் தீவிரமான சட்டம் கொண்டுவர இருபதாண்டுகள் ஆயின.

2012இல் வெளிநாடுகளில் பங்கு பரிவர்த்தனை நடைபெறும்போது இந்தியாவில் உள்ள சொத்துகளுக்கு முன் தேதியிட்டு வரி விதிக்க வழி செய்யும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து வோடோபோன், கெய்ரன் உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெற்றன. இந்தத் திருத்தம் கடந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டது.

சட்டம் இயற்றுவதற்கான குறைகள் இல்லாத செயல்முறையைக் கடந்த எழுபது ஆண்டுகளில் நாம் உருவாக்கவில்லை. செயல்முறை என்பது அரசின் தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பதாகவோ, அரசியல் ரீதியான ஒருமித்த கருத்துடன் கடந்து செல்லும் வகையிலோ இருக்கின்றன.

மூன்று அம்சங்கள்

சட்டம் இயற்றுவதற்கான துடிப்பான முறை மூன்று அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

1. ஒரு மசோதாவை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரும் முன் அரசு அனைத்துப் பயனுரிமையாளர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். வரைவுத் திட்டத்தைப் பொது வெளியில் வைத்து மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.

2. நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படும் ஒவ்வொரு மசோதாவும் நிலைக்குழுக்களால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். அதன்பிறகு உறுப்பினர்கள் விவாதித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

3. நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதும் அவ்வப்போது அதை ஆய்வு செய்ய வேண்டும். சட்டம் செயல்படுகிறதா, மாற்றம் தேவையா எனக் கண்டறிய இது உதவும்.

முதல் அம்சம் முழுக்க முழுக்க அரசின் கைகளில் உள்ளது.

இரண்டாவது அம்சம் நாடாளுமன்றத்தின் கைகளில் இருந்தாலும் பெரும்பாலும் இதன் செயல்முறை அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மூன்றாவது அம்சம் மூன்று பிரிவுக்கும் பொதுவாக உள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதலைக் கோரும் முன், அமைச்சகங்கள் சட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆலோசனை நடைமுறை தொடர்பான நெறிமுறைகளை 2014இல் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த நெறிமுறைபடி, வரைவு மசோதா 30 நாட்கள் பொதுவெளியில் இருக்க வேண்டும். அதன் தொடர்புடைய அம்சங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பெறப்படும் கருத்துகள் இணையதளத்திலும் வெளியிடப்பட வேண்டும்.

இந்த நெறிமுறைகளின் நோக்கம், பொதுமக்கள் கருத்துகளைக் கேட்டறிந்து சட்டம் இயற்றுவதாகவும், நாடாளுமன்றத்துக்கு வரும் முன் ஒருமித்த கருத்தை உண்டாக்குவதாகவும் அமைகிறது. ஆனால், ஒரு சில நாடுகளில் உள்ளது போல இந்தச் செயல்முறை கட்டாயம் அல்ல. எனவே, பெரும்பாலான சட்டங்கள், முறையான ஆலோசனை இல்லாமல் அவையில் முன்வைக்கப்படுகின்றன. இந்த நெறிமுறை அமலுக்கு வந்த பிறகு தாக்கலான 301 சட்ட முன்வடிவுகளில் 277 எந்த ஆலோசனையும் இல்லாமல் கொண்டு வரப்பட்டவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பரிசீலனைக்கு உள்ளாகாத சட்டங்கள்

நடைமுறையில் ஒரு மசோதா பல்வேறு கட்டங்களில் பரிசீலனைக்கு உள்ளாகிறது. ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டவுடன், உரிய நாடாளுமன்றக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்படலாம். பல நேரங்களில் மசோதாவைக் கொண்டுவரும் அமைச்சர் இவ்வாறு பரிந்துரைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதும் நடக்கிறது. பெரும் சர்ச்சைக்குள்ளான 2020 விவசாயச் சட்டங்கள் இவ்வாறு பரிசீலனைக்கு வராதவைதான்.

இந்தியாவில் சட்டங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய எந்த அமைப்பும் இல்லை. தொடர்புடைய அமைச்சகங்கள்தான் இதற்கான குழுக்களை அமைக்கின்றன. குழுக்களின் பரிந்துரை சட்டத் திருத்தத்துக்கு வழி வகுக்கலாம். நாடாளுமன்றக் குழுக்கள் சில நேரங்களில் சட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டாலும் இவை எப்போதேனும் அரிதாகவே நிகழ்கின்றன.

அரசால் குறிப்பிட்ட அம்சங்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு அமைக்கப்படும் இந்திய சட்ட கமிஷனும் இத்தகைய ஆய்வை மேற்கொள்ளலாம். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் கீழ் இந்த கமிஷன் அமைகிறது. எனினும், இந்தக் குழு சட்டங்களின் சட்ட அம்சங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன், அரசியல் சாசனச் செயல்பாட்டை ஆய்வு செய்த தேசிய கமிஷன், நம்முடைய சட்டம் இயற்றும் செயல்முறை, இயற்றுபவர்கள், பாதிக்கப்படுபவர்கள் என இரு தரப்பினர் சார்ந்தும் நாடாளுமன்ற ஆய்வு இல்லை என்றும் சட்டமியற்றும் நடைமுறை படு வேகமாக நடக்கிறது என்றும் தெரிவித்திருந்தது.

கமிஷன் சொன்னது இப்போதும் உண்மைதான். அரசும் நாடாளுமன்றமும் சட்டம் இயற்றும் செயல்முறையைச் சுயபரிசோதனைக்குள்ளாக்க வேண்டும். சட்டங்களை ஆய்வு செய்வது, நாடாளுமன்றக் குழுக்களின் ஆய்வுக்குட்படுத்துவது ஆகியவை கட்டாயம் எனும் விதத்தில் செயல்முறையில் மாற்றம் தேவை.

கட்டுரையாளர் சக்‌ஷு ராய் சட்டமன்ற மற்றும் குடிமை ஈடுபாட்டின் சட்ட ஆராய்ச்சியில் PRS தலைவராக உள்ளார்.

நன்றி: தி இந்தியா ஃபோரம்

தமிழில்: சைபர் சிம்மன்

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 18 பிப் 2022