மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

சென்னை: ரிப்பன் மாளிகை யாருக்கு? க்ளைமாக்ஸ் நிலவரம்!

சென்னை: ரிப்பன் மாளிகை யாருக்கு? க்ளைமாக்ஸ் நிலவரம்!

தமிழகத்தில் இருக்கும் மற்ற 20 மாநகராட்சிகளைவிட மிகப் பெரியதும் மிகப் பழமையானதுமான சென்னை மாநகராட்சி மொத்தம் 200 வார்டுகளைக் கொண்டது. ஆளும் திமுக 167 வார்டுகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி 16, விடுதலைச் சிறுத்தைகள் 6, மார்க்சிஸ்ட் கட்சி 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக தலா 3 எனப் போட்டியிடுகின்றன. புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளோடு 198 வார்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுகிறது. பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ரிப்பன் மாளிகை எனப்படும் வெள்ளை மாளிகைக்குள் வெற்றிகரமாகச் செல்லப் போவது யார்? கடைசி கட்ட நிலவரத்தைப் பார்ப்போம்.

திமுக

ஆளுங்கட்சி என்ற தெம்போடு திமுக களத்தில் இருக்கிறது. அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகிய இரு பெரும் தலைகளின் தலைமையிலான களப்பணி திமுக வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்போடு இருந்திருக்கிறது.

திமுக மாவட்டச் செயலாளர்களின் நேரடி மேற்பார்வையிலேயே கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் இருக்கிறார்கள். சேகர்பாபு சென்னை மாநகராட்சியில் தன்னை தனிப்பெரும் சக்தியாக நிரூபிப்பதற்காக தீவிரமான முயற்சியில் இருக்கிறார்.

தன்னுடைய மாவட்ட வார்டுகள் மட்டும் அல்லாமல், இளைய அருணா, சிற்றரசு ஆகியோரின் மாவட்டங்களுக்கு உட்பட்ட வார்டுகளிலும் தீவிர கவனம் செலுத்தி திமுக வேட்பாளர்களின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்து வருகிறார்.

அதேபோல அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் தனது பகுதியில் சேகர்பாபு அளவுக்கு வேர் வரை இறங்காவிட்டாலும் கே.கே.நகர் தனசேகரன் போன்றோரை இறக்கிவிட்டு தீவிரமாகப் பணியாற்றியிருக்கிறார்.

திமுக வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், சென்னையின் அடித்தட்டு மக்கள், 'இன்னாப்பா பொங்கலுக்கு துட்டே தரலியேப்பா?' என்ற கேள்வியை எதிர்கொண்டார்கள்.

கடந்த நவம்பர் மாதம் சென்னை வெள்ள நிவாரணம் வழங்காதது, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் வழங்காதது, பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் என்று அறிவித்து விட்டு அதை இன்னும் வழங்காமல் இருப்பது இந்த மூன்று விஷயங்களும் வாக்காளர்களிடம் திமுக மீது நேரடியான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், மக்களின் இந்த அதிருப்தியை தங்கள் வசம் ஓட்டாக மாற்றுவதற்கான எந்த வியூகத்தையும் நம்பிக்கையையும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தவில்லை என்பது தான் யதார்த்தம்.

அம்மக்களின் இந்தக் குறையைப் போக்க திமுக தலைமையிடம் இருந்து தேர்தல் நேரத்தில் பெரும் தொகை வரும் என வேட்பாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி ஏதும் வராததால் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் இணைந்து தேர்தல் செலவுகளைச் செய்திருக்கிறார்கள்.

அதிமுக வெற்றியும் சேகர்பாபு கையில்

அதிமுக கவுன்சிலர் வேட்பாளர்களை சென்னை அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களே முடிவு செய்துள்ளனர். சில வேட்பாளர்களை மாற்றக்கோரி எடப்பாடி பழனிச்சாமி வரை சென்றும் அவர்களை மாற்ற மாவட்டச் செயலாளர்கள் முன்வரவில்லை. 'நீங்க வேட்பாளரை போட்டீங்கன்னா நீங்களே செலவு பண்ணுங்க' என்று எடப்பாடியிடம் மாவட்டச் செயலாளர்கள் கேட்டதால் சென்னை வேட்பாளர்கள் தேர்வில் தலையிடவில்லை எடப்பாடி.

தலைமை பணம் கொடுக்காத நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் செலவு செய்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் 10 வேட்பாளர்களுக்காவது வேலுமணி சில லட்சங்களைக் கொடுத்து உதவி செய்திருக்கிறார். பின்னாட்களில் சென்னையில் தனக்கு தோதான ஆட்கள் தேவை என்று ஒரு கணக்குப் போட்டு தான் சென்னை மாநகராட்சித் தேர்தலில் வேலுமணி தனக்கான சிலரை கவுன்சிலர்கள் ஆக்குவதற்காக தனியாக அழைத்துக் கவனித்துள்ளார். மற்றபடி மாவட்டச் செயலாளர்கள் 10 ஆண்டுக் கால அதிமுக ஆட்சியில் சம்பாதித்த பணத்திலிருந்து செலவு செய்து வருகிறார்கள்.

அதிமுகவில் சில வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பை அமைச்சர் சேகர்பாபு ஏற்றிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

அதிமுகவின் பேச்சாளர்களும் சேகர்பாபுவின் மிகப்பழைய நண்பர்களுமான அஞ்சு லட்சுமி, வேளாங்கண்ணி ஆகிய இருவரையும் வெற்றிபெற வைக்க ஒத்துழைப்பு தருவதாக சேகர்பாபு கூறியிருக்கிறார் என அதிமுக வட்டாரத்திலேயே கூறுகிறார்கள்.

நாளை மாமன்றத்தில் அதிமுக தரப்பிலும் தங்களுக்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காக இவர்களை ஜெயிக்க வைக்க சேகர்பாபு முயற்சி செய்வதாக தெரிகிறது. இருவரும் போட்டியிடும் வார்டுகளில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய முஸ்லிம் லீக்கும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவுக்கு அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்புக்குக் கூட உதவி செய்யக்கூடிய அளவுக்கு அந்தக் கட்சியிலும் தனது பழைய தொடர்புகளை வைத்து பல்வேறு வேலைகளைப் பார்த்து வைத்திருக்கிறார் சேகர்பாபு. இதையெல்லாம் மீறி அதிமுகவில் சொந்த செல்வாக்குள்ள கணிசமான சிலருக்கு மட்டுமே சென்னை மாநகராட்சியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதே நிலவரம்.

பாஜக பறபற

பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டி என்ற முடிவு எடுத்த நிலையில் சென்னை மாநகராட்சியில் பாஜகவின் தேர்தல் பணிகள் உற்சாகமாகவே இருக்கின்றன.

சென்னை மாநகராட்சி பாஜக தேர்தல் பொறுப்பாளரான கராத்தே தியாகராஜன் அதிரடியாகப் பேசி வருவதோடு தனது முந்தைய மாநகராட்சி தேர்தல் அனுபவங்களை பாஜகவுக்காகச் செயல்படுத்தி வருகிறார். வெளியே ஆயிரம் வசனங்கள் பேசினாலும் பாஜகவின் உள்வட்ட திட்டம் இதுதான்.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மூன்று முதல் ஐந்து வரை பிடிக்க வேண்டும். 25 வார்டுகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டும். 50 வார்டுகளில் மூன்றாவது இடத்தை பிடிக்க வேண்டும். சென்னை மாநகரத்தில் இதுதான் பாஜகவின் லட்சியமாக இருக்கிறது.

சென்னையில் பரவலாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் பிரச்சாரங்களையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.

திமுக கூட்டணிக் கட்சிகளோடு சேர்த்து சுமார் 170 முதல் 180 இடங்கள் இலக்கு வைத்துள்ளது. மக்களிடம் பல அதிருப்திகள் இருந்தாலும், ஆளுங்கட்சி என்ற உற்சாகமும் செலவு செய்யும் திறனும் திமுகவை முன்னோக்கி செல்ல வைக்கின்றன.

அதிமுகவில் சென்னைக்கு எனத் தனித்த அடையாளம் கொண்ட தலைவர்கள் இல்லை என்பதும் வேட்பாளர்கள் பலர் திமுகவோடு கடைசி நேர டீலிங்கில் இருக்கிறார்கள் என்பதும் தேர்தலின் போக்கை மாற்றக் கூடும்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 18 பிப் 2022