நீதிபதிகளாகும் வழக்கறிஞர்கள்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் நேற்று (பிப்ரவரி 16) நடைபெற்ற கூட்டத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தின் 10 வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்கள் என மொத்தம் 16 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2022 பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும், கிஷோர் சந்திரகாந்த் சாந்த், வால்மீகி மெனேசஸ்.எஸ்.ஏ., கமல் ரஷ்மி கட்டா, ஷர்மிளா உத்தம்ராவ் தேஷ்முக், அருண் ராம்நாத் பெட்னேகர், சந்தீப் விஷ்ணுபந்த் மார்னே, கௌரி வினோத் கோட்சே, ராஜேஷ் சாந்தாராம் பாட்டீல், ஆரிஃப் சலே டாக்டர் மற்றும் சோமசேகர் சுந்தரேசன் ஆகிய பத்து பேரையும்,
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் நிடுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், மற்றும் ஆர். ஜான் சத்யன் ஆகிய ஆறு பேரையும் நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதுபோன்று மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியான நீதிபதி அஹந்தம் பிமோல் சிங்கை, அந்த உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-வினிதா