மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

நியூட்ரினோவை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு!

நியூட்ரினோவை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு!

தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பிப்ரவரி 17ஆம் தேதி தெரிவித்துள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு இத்திட்டம் குறித்து இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில், "நியூட்ரினோ திட்ட அமைவிடம் மதிகெட்டான் – பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் இத்திட்டத்திற்கான காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

இத்திட்ட அமைவிடமானது உலக அளவில் உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மேற்கு மலையாகும். இந்த போடி மேற்கு மலையானது புலிகள் வசிக்கக் கூடிய மேகமலை திருவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இந்த இணைப்புப் பகுதி புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கும் அவற்றின் இனப்பெருக்க பரவலுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும்.

மேலும் இந்த மலை பகுதியானது வைகை அணைக்கு நீர் தருகின்ற பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.

திட்டத்திற்காக அமைக்கப்படும் குகையானது மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு பூமிக்கடியில் அமைக்கப்பட்டாலும் கூட அக்குகை அமைப்பதற்கான சுரங்கம் அமைக்கும் பணி, வெடிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்து, பெரிய பெரிய இயந்திரங்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயினங்களின் நடமாட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கடந்த ஆண்டு பிரதமர் மோடியிடம் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஆண்டு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்" என்று

தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 22ம் தேதி நடைபெறுகிறது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

"தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில், பல்லாயிரக்கணக்கான டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, தரைக்கு உள்ளே 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நீளவாட்டிலும், குறுக்குவாட்டிலும், சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் உள்ள இரண்டு குகைகளைக் குடைந்து, அங்கே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகின்றது.

உலகின் மறுபக்கத்தில் உள்ள அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள செர்பி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, நியூட்ரான் துகள்கள், சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, பொட்டிப்புரத்தில் அமைக்கத் திட்டமிடும் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். அங்கே, 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்தக் கல்லைப் பதித்து ஆய்வு நடத்தும் திட்டம் இது.

அதற்காக, வெடிமருந்து வைத்து பாறைகளை உடைப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், 30 கி.மீ தொலைவில் உள்ள இடுக்கி அணை, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்படும். நிலம், நீர், காற்று மண்டலத்துக்கும் பெரும் தீங்கு ஏற்படும். விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். வெளியாகும் தூசுப் படலத்தால் சுவாச நோய்கள் ஏற்படும்.

மேலும், இந்தச் சுரங்கங்களில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்கும் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

முதலில் இந்தத் திட்டத்தை அசாம் மாநிலத்தில் அமைக்க முற்பட்டார்கள். அங்கே எதிர்ப்பு ஏற்பட்டதால், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அமைக்க முயன்றார்கள். அங்கேயும் மக்கள் எதிர்த்ததால், தேவாரம் பொட்டிப்புரத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது.

ஆனால், தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கருத்தைக் கேட்கவும் இல்லை; இரண்டு கிலோ மீட்டர் அருகாமையில் கேரள எல்லை தொடங்குகின்றது; கேரள மாநில அரசின் ஒப்புதலையும் ஒன்றிய அரசு கேட்கவில்லை.

இங்கே வெட்டி எடுக்கப்படுகின்ற கிரானைட் கற்கள் மூலம் சில பகாசுர நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்திற்கு 1500 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளார்.

இமயமலைப் பாறைகள் உறுதித் தன்மை அற்றவை. எனவேதான், அங்கே அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலைப் பாறைகள் உறுதியான கருங்கற்கள் ஆகும், அதனால்தான், மேற்குத் தொடர்ச்சி மலைகளை, உலகின் பழமையான வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாக, ஐ.நா.மன்றம் அறிவித்துள்ளது. அதனால், இம்மலைத் தொடரில் எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பது யுனெஸ்கோ விதி ஆகும்.

எனவே, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், 2015, மார்ச் 26 ஆம் தேதி, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் அமைப்பு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்று(17.02.2022) விசாரணைக்கு வந்த போது, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் அளிப்பது இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார் வைகோ.

வேந்தன்

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 17 பிப் 2022