மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

இன்றுடன் ஓய்கிறது உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்!

இன்றுடன் ஓய்கிறது உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டு பரிசீலனையின்போது 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்ப பெற்றுக்கொண்டனர். 218 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதுதவிர கடம்பூர் பேரூராட்சி, வத்திராயிருப்பு, அந்தியூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வேட்பாளர்கள் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மொத்தம் 57,600க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்., எம்.பிக்கள் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக பிரச்சாரம் முடிக்கப்பட வேண்டும் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வெளியாட்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இன்று மாலை 6 மணிக்கு அந்தந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்.

அதுபோன்று தேர்தலுக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடக்கும் மற்றும் அதைச் சுற்றி 5 கிமீ வரையுள்ள பகுதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாநில தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்வது, பறக்கும் படைகளின் கண்காணிப்பு, வாக்குச்சாவடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தேர்தல் ஆணையர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தேர்தலின்போது தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 17 பிப் 2022