மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

நீட்டை கொண்டு வந்தது யார்?: அன்புமணி

நீட்டை கொண்டு வந்தது யார்?: அன்புமணி

நீட் தேர்வு வந்ததற்கு நான்கு கட்சிகள்தான் முக்கிய காரணம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (பிப்ரவரி 15) சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை விட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இது மக்களிடம் நேரடி தொடர்புடையது. அரசியலமைப்பு சட்டத்தின்படி நகராட்சி அமைப்புக்கென்று 18 அதிகாரங்கள் உள்ளன. அதுபோன்று மாநகராட்சி மேயர் பதவி சாதாரணமானது கிடையாது. மாநகராட்சி மேயர் பதவி என்பது வானூயர்ந்த அதிகாரம் படைத்தது. அதனால், சேலம் மாநகராட்சி மக்கள் இந்தமுறை பாமகவுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது மக்களின் முன்னேற்றத்திற்கு தேவைப்படும்.

சேலம் மாநகராட்சி தேர்தலில் பாமக வெற்றி பெற்று கட்சியை சேர்ந்தவர் மேயராக தேர்வு செய்யப்பட்டால், சேலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு முதல் கையெழுத்து போடப்படும். இதை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சொல்ல முடியுமா? சொல்ல தைரியம் இருக்கிறதா? அவர்களால் சொல்ல முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு வருமானம்தான் முக்கியம். ஆனால், மதுக்கடைகளை மூடுவதற்கு நமக்கு தைரியம் உள்ளது.

கடந்த 55 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால், எந்தவித முன்னேற்றமும் கிடையாது. சேலம் நகராட்சியில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? வேண்டுமென்றால் சாலைகளை போட்டு இருப்பார்கள். அதுவும் போட்ட சாலை மீதே சாலை போடுவார்கள். அவர்களுக்கு தேவை கமிஷன் மட்டும்தான்.

சேலம் மாநகரில் உள்ள உயர் மட்ட பாலங்கள்,போக்குவரத்து நெரிசல் காரணமாக இடிக்கும் சூழல் வரும். நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கு எங்குமே உயர்மட்ட பாலங்கள் கிடையாது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் திட்டமிடுதல் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால், அவர்கள் மக்களுக்கு தேவையானதை செய்யமாட்டார்கள்.

மேடையில் ஏறினால் திமுகவை பற்றி அதிமுக பேசும், அதிமுகவை பற்றி திமுக பேசும். இதைத்தான் 55 ஆண்டுகளாக கேட்டு கொண்டு இருக்கிறோம். அவர்களினால் எந்தவித முன்னேற்றம் இல்லை..அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். ஒரு மாற்றத்தை கொடுங்கள்..முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம்….கொரோனா காரணமாக உங்களை இரண்டு ஆண்டுகள் பார்க்காமல் துடித்துபோய்விட்டேன். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் நேரடியாக ஒவ்வொரு ஊர்களாக, கிராமங்களாக வந்து மக்களை சந்திக்க வருவேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மேட்டூர் உபரிநீரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது தொகுதியில் உள்ள ஏரிக்கு மட்டும் எடுத்து சென்றுவிட்டார். மற்ற ஏரிகளுக்கு செல்லவில்லை. மேட்டூர் உபரிநீர் திட்டம் நான் முதல்வராக இருந்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிருப்பேன். நீர் மேலாண்மை பற்றி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தெரியாது. நான் பேசிய பின்னர் தான் அவர்கள் பேசினார்கள்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மேடைகளில் நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதிக்க, அதிமுகவும்,திமுகவும் சவால் விட்டுள்ளது. அந்த விவாதத்திற்கு நானும் வருகிறேன். நீட் யார் கொண்டு வந்தது என்பதை நானும் விளக்குகிறேன். மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

மத்தியில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, நீட் போன்ற நுழைவுத் தேர்வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். அப்போது, நான் அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டேன். அதன்பிறகு 2009ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறிய பின்னர், 2010ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், திமுகவை சேர்ந்த காந்திச்செல்வன் இணை அமைச்சராகவும் இருந்தபோது, நீட் தேர்வு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது திமுக சொல்கிறது நாங்கள் நீட் தேர்வை கொண்டுவரவில்லை என்று. உங்கள் அமைச்சர்தானே அப்போது இருந்தார்.

அதன்பிறகு 2013 ஆண்டில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 2014ஆண்டில் பாஜக வந்தது, நீட் தேர்வை கொண்டுவந்தது. நீட் தேர்வு என்பது தமிழகத்திற்கும், கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. நீட் தேர்வு வருவதற்கு முதல் காரணம் காங்கிரஸ், இரண்டாவது திமுக, மூன்றாவது பாஜக, நான்காவது அதிமுக. இந்த நான்கு காட்சிகள்தான் நீட் தேர்வு வருவதற்கு முக்கிய காரணம். நீட் தேர்வினால் சுமார் 50 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய பாமக உறுதுணையாக இருக்கும். மற்றவர்களை போல் வசனம் பேசமாட்டேன். தேர்தலுக்கு முன்பு திமுக எத்தனையோ வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமானது. ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கையெழுத்து நீட் தேர்வு விலக்குதான் என்று சொன்னார்கள். ஆனால் பத்து மாதங்கள் ஆகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இதை எல்லாம் மக்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

அதனால், சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி வாய்ப்பை தரும்படி அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 16 பிப் 2022