மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!

கர்நாடகாவில் ஏழு நாள் விடுமுறைக்கு பின் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்-காவி சால்வை போராட்டத்தையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை முதல் ஒன்று முதல் 10வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று(பிப்ரவரி 16) 11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

மதம் சார்ந்த ஆடைகளை மாணவர்கள் அணிந்துவரக் கூடாது என்று உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக திங்கள்கிழமை முதல் பெரும்பாலான பள்ளி மாணவிகள் வகுப்புகளையும், தேர்வுகளையும் புறகணித்து வருகின்றனர். சில இடங்களில் பெற்றோர்களே ஹிஜாப் இல்லாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஒருசில மாணவிகள் மட்டுமே ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இன்று 11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுப்பியில் உள்ள டாக்டர் ஜி சங்கர் அரசு மகளிர் கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற மறுப்பு தெரிவித்து வகுப்புகளை புறகணித்தனர். “ஹிஜாப் அணிய அனுமதித்த பிறகே கல்லூரிக்குள் நுழைவோம். இது தவறு. ஹிஜாபுக்கு தடை என்பது ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் அனைவரும் வகுப்புகளைப் புறக்கணிக்கிறோம்” என்று கூறி சென்றனர்.

பல்வேறு இடங்களில் ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வந்த மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கோரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை காண முடிகிறது.

அதுபோன்று விஜயபுராவில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே செல்லலாம், இல்லையென்றால் அனுமதியில்லை என்று ஆசிரியர்கள் உறுதியாக கூறினர்.

இதை ஏற்க மறுத்த மாணவிகள், ”எங்களுக்கு நியாயம் வேண்டும். எங்களுக்கு ஹிஜாபும் வேண்டும், கல்வியும் வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் தங்களுடைய வேதனையை வெளிபடுத்தினர்.

அதுபோன்று சிவமொக்காவில் உள்ள டிவிஎஸ் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வெளியே வந்த மாணவிகள்,"நாங்கள் வகுப்புகளை மிஸ் செய்வோம். பரவாயில்லை, ஆனால், ஹிஜாப்பை அகற்ற முடியாது” என்று கூறினர்.

ஹூப்ளியில் ஜே.சி.நகரில் உள்ள எஸ்.ஜே.எம்.வி.எஸ் பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாணவிகளை அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகளும் கலைந்து சென்றனர். இந்த கல்லூரி அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், “மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது. ஆனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நாங்கள் பின்பற்ற வேண்டும். அதனால், உத்தரவை யாராவது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 16 பிப் 2022