மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 பிப் 2022

மாநகராட்சி வலம்: நெல்லை- அதிமுகவை சுற்றி வளைக்கும் திமுக

மாநகராட்சி வலம்: நெல்லை- அதிமுகவை சுற்றி வளைக்கும் திமுக

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இவற்றில் 47 வார்டுகளில் திமுக களம் காண்கிறது. மூன்று வார்டுகள் காங்கிரசுக்கு, இரண்டு மதிமுக, மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 1 என திமுக கூட்டணி களத்தில் இருக்கிறது.

வகாப்பின் வேகப் பின்னணி

மாநகராட்சி கவுன்சிலர்கள் வேட்பாளர் பட்டியலில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்பின் கை ஓங்கியிருக்கிறது. திமுகவின் ஆவுடையப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் ஆதரவாளர்களுக்கு கவுன்சிலர்கள் சீட்டு வாங்க கடுமையாக முயற்சித்த போதும் அப்துல் வகாப் நெல்லை மாநகரத்தை முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

முன்னாள் மேயரான மறைந்த ஏ.எல். சுப்பிரமணியனுக்கு ஸ்டாலினுடைய மருமகன் சபரீசனின் அப்பா நல்ல நெருக்கம். அந்த அடிப்படையில் ஏ. எல். எஸ்.சின் மகனும் தற்போதைய மாநகர செயலாளருமான லட்சுமணனுக்கு சபரீசன் நெருக்கம். லட்சுமணன் வழியாக சபரீசன் இடத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் நல்ல தொடர்பைப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சிப் பொறுப்பை ஏற்று செலவு செய்தவர் என்பதாலும், சபரீசன் உடன் நல்ல அலைநீளத்தில் இருப்பவர் என்பதாலும் நெல்லை மாநகர திமுகவில் அப்துல் வகாப்பின் கொடி உயரப் பறக்கிறது.

அதனால் தான் பல குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்களை அப்துல் வகாப் தேர்வு செய்தபோதும் அது திமுகவுக்குள் அதிருப்தியை ஏற்படுத்திய போதும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதேநேரம் மூளிக்குளம் பிரபு என்ற வேட்பாளர் மீதான சர்ச்சைகளைத் தொடர்ந்து அவர் மட்டும் மாற்றப்பட்டார்.

அழகிரி ஆதரவாளராக அறியப்பட்ட மாலை ராஜாவுக்கு தலைமை மூலம் கடுமையான நெருக்கடி கொடுத்து அவரை போட்டியில் இருந்து விலக செய்து விட்டார் வகாப்.

1 ஆவது வார்டில் போட்டியிடும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ஆர். ராஜு யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாதவ ராமானுஜம் திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதன் பின்னணியில் பெரும் பேரம் நடந்திருக்கிறது என்று தெரியவர அதிமுக மாதவ ராமானுஜத்தை கட்சியில் இருந்து நீக்கியது.

ராஜுவுக்கு மேயர் பதவியை பெற்று தர வகாப் வாக்கே கொடுத்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

அதேபோல 3வது வார்டில் போட்டியிடும் சுப்பிரமணியன், 25ஆவது வார்டில் போட்டியிடும் ராமகிருஷ்ணன், 54 வது வார்டில் களமிறங்கியுள்ள கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோரும் மேயர் பதவிக்கான ரேஸில் இருப்பதாக மாநகரத் திமுகவில் பேச்சு உலவுகிறது.

நெல்லை மாநகராட்சி பொது என்பதால் ஆண் பெண் என யார் வேண்டுமானாலும் மேயராகலாம் என்ற லாஜிக்கை வைத்துக்கொண்டு 17 வது வார்டில் போட்டியிடும் மகேஸ்வரியும் மேயர் வேட்பாளர் தான் என்கிறார்கள் சிலர்.

சொக்கம்பட்டி ஜமீன் வடநாட்டு யாத்திரை சென்றபோது அங்கு அல்வாவை சாப்பிட்டு அந்த ருசியில் மயங்கி அல்வா தயாரிக்கும் குடும்பத்தினரை பெரும் பணம் கொடுத்து சொக்கம்பட்டி கூட்டி வந்து விட்டார். அப்படி கொண்டு வரப்பட்ட வட இந்தியக் குடும்பத்தினர் சிலர் நெல்லைக்கு குடிபெயர்ந்தனர். அவர்களில் ஒருவர்தான் மகேஸ்வரி.

அடிப்படையில் பொந்தில் என்ற வட இந்திய சமூகத்தைச் சேர்ந்த வட இந்தியரான மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணியிலும் பொறுப்பு பெற்றுவிட்டார்.

அவருக்காக மேயரை பெற்றுத் தருகிறாரோ இல்லையோ துணை மேயர் பதவியை மாவட்ட செயலாளர் வகாப் பெற்றுத் தருவார் என்று மாநகரம் முழுதும் கிசுகிசு பேசிக்கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்.

திமுகவினர் போட்டியிடும் வார்டுகள் அத்தனையிலும் பணம் பாய்ந்து கொண்டிருக்கிறது. நீங்கதான் மேயர் என சிலரிடமும் நீங்கதான் துணை மேயர் என சிலரிடமும் உங்களுக்கு மண்டல தலைவர் உறுதி என சிலரிடமும் வாக்கு கொடுத்திருக்கும் வகாப், அந்தந்த மண்டலத்தில் இருக்கும் வார்டுகளுக்கு அவர்களையே செலவு செய்ய வைத்து விட்டார். இதனால் நெல்லை திமுகவினருக்கு பணப் பிரச்சினை இல்லை.

இந்த வகையில் திமுக சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிமுக

அதிமுகவில் மற்ற மாநகராட்சிகளில் எப்படியோ... நெல்லை மாநகராட்சியில் நிர்வாகிகள் பலர் போட்டியிட தயங்கிப் பின் வாங்கிவிட்டனர். அதனால் சில வார்டுகளில் அதிமுக கட்சியில் தீவிரமாக செயல்பட விட்டாலும் அபிமானிகள் ஆக இருக்கும் நபர்களை பிடித்து வேட்பாளர்கள் ஆக்கியுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் இருந்து பசை உள்ள முன்னாள் அமைச்சர் யாரும் இல்லாததால், செலவு செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. நிதி சிக்கலில் இருக்கும் அதிமுக வேட்பாளர்களை, முக்கிய பதவிகளை எதிர்பார்க்கும் திமுகவினர் வளைத்து வருகிறார்கள்.

மாவட்டச் செயலாளரும் முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை கணேசராஜா தன்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள் என்று கட்சியினரிடம் தெளிவாகவே தெரிவித்துவிட்டார். தேர்தலுக்கு முதல் நாள் பூத் கமிட்டியினருக்கு கணிசமாக ஒரு தொகை கொடுப்பார்கள். அந்தத் தொகையும் வரவில்லை என்றால் அதிமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்டுகள் இருப்பார்களா என்பதே சந்தேகம் தான் என்று நெல்லை அதிமுக நிர்வாகிகளே புலம்புகிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து சமீபத்தில் அதிமுகவுக்கு திரும்பிய இசக்கி சுப்பையா மிக வளமான நபர்.

அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு செலவு செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூத்த அமைச்சர் ஒருவர் இசக்கி சுப்பையாவை தொடர்பு கொண்டு, 'நீங்க ஏன் இப்ப செலவு பண்ணிட்டு இருக்கீங்க? தொழிலை கவனிக்கலாமே' என்று பேசி ஆஃப் பண்ணி விட்டதாகவும் ஒரு தகவல் அதிமுகவில் உலவுகிறது.

அடக்கி வாசிக்கும் நயினார்

பாஜகவின் மாநில துணைத் தலைவரும் சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக வேட்பாளர்களுக்கு தாராளமாக செலவு செய்வார் என்று திமுகவே கணக்குப் போட்டது.

ஆனால் மாநகராட்சி தேர்தலில் தனது வழக்கமான சுறுசுறுப்பை காட்டாமல் கூப்பிடும் வார்டுகளுக்கு மட்டும் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு அமைதியாகவே இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

நெல்லை மாநகராட்சியின் தற்போதைய நிலவரப்படி திமுக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக அதன் இயல்பான வேகத்தில் செல்லவில்லை.

வேந்தன்

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

செவ்வாய் 15 பிப் 2022