மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 பிப் 2022

முதல்வர் வீடு முற்றுகை: பாஜகவினருக்கு சிறை!

முதல்வர் வீடு முற்றுகை: பாஜகவினருக்கு சிறை!

தஞ்சை மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏபிவிபி அமைப்பினர் 35 பேரை பிப்ரவரி 28ஆம் தேதிவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாணவி விவகாரம் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என்று நேற்று(பிப்ரவரி 14) உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வந்த நேற்றைய தினத்தில், மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஹரிகிருஷ்ணன் தலைமையில் 35 பேர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேரிகார்டை தள்ளிவிட்டு, முதல்வர் வீட்டை முற்றுகையிட அனைவரும் ஓடினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த போலீசார், ஓடி சென்று அனைவரையும் தடுத்து நிறுத்தி, குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு வேனில் அடைத்தனர். தொடர்ந்து, அவர்களை முத்தையா முதலி தெருவில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்தனர்.

தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட 35 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்யும் நோக்கத்தோடு கூடுதல், சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிட முயற்சித்தல், அரசு பணியாளர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அனைவரும் மாணவர்களாக இருக்கிறார்களே என்று மாஜிஸ்திரேட் கேட்டார். அதற்கு, இவர்கள் அனைவரும் மாணவர்கள் இல்லை என்று துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் பதிலளித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின்,”தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நேரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது. இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் தடைச்செய்யப்பட்ட இடமான முதல்வர் இல்லத்தை முற்றுகையிடுவது மாணவர்களே என்றாலும் குற்றம்தான்” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுகொண்ட மாஜிஸ்திரேட், அனைவரையும் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-வினிதா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 15 பிப் 2022