மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 பிப் 2022

மாநகராட்சி வலம்: நேருவின் கை மீறுமா திருச்சி?

மாநகராட்சி வலம்: நேருவின் கை மீறுமா திருச்சி?

தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராகவே அவ்வப்போது பேசப்படும் திருச்சி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஆரவாரமாகச் சந்தித்து வருகிறது. மலைக்கோட்டை மாநகரின் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்காகக் கட்சிகளிடையே பிரச்சார யுத்தங்கள் நடந்து வருகின்றன.

மொத்தமுள்ள 65 வார்டுகளிலும் திமுக - அதிமுக இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.

திமுக

தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தான் திருச்சி மாவட்ட திமுகவின் முகம். திருச்சி மாநகராட்சிக்கும் அவரே திமுகவின் முகமாக இருக்கிறார்.

திமுக கடுமையான சவாலை எதிர்கொள்ளும் சேலம் மாவட்டத்துக்கு அவர் பொறுப்பு அமைச்சராக இருப்பதால் இப்போது திருச்சி, சேலம் என இரட்டை குதிரைகளில் மிக வேகமாக சவாரி செய்து வருகிறார்.

65 வார்டுகள் கொண்ட திருச்சி மாநகராட்சியில் 50 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு மற்ற வார்டுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் காங்கிரஸுக்கு கடுமையான அதிருப்தி இருந்தாலும் நேருவின் கறாரான அரசியல் அந்த அதிருப்திகளை எல்லாம் கடந்து திமுக கூட்டணி வேக வேகமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட காரணமாக இருக்கிறது.

தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் அன்பில் மகேஷ், நேருவுக்கு எதிராக காய்கள் நடத்துவதாகவும் மேயர் வேட்பாளராக தனது ஆதரவாளரான பகுதி செயலாளர் மதிவாணனை முன் நிறுத்துவதாகவும் ஆரம்பக் கட்டத்தில் தகவல்கள் பரவின. கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கூட்டியபோது கூட நேருவுக்கு அருகில் அமர்ந்திருந்தார் அன்பில் மகேஷ்.

'அமைச்சரோட பையன் அருண் நேரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தார். அவர் போட்டியிட்டால் அவர்தான் மேயர். அவரை எம்.பி தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லி மதிவாணனுக்கு ரூட் கிளியர் பண்ணி விட்டார் அன்பில் மகேஷ்' என்றெல்லாம் திருச்சி திமுக வட்டாரத்தில் தகவல்கள் பரவின.

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் திருச்சி மாநகரச் செயலாளரும் முன்னாள் துணை மேயரும் தனது நீண்ட நெடுங்கால ஆதரவாளருமான அன்பழகனை அழைத்த நேரு, 'யார் சொல்றதையும் காதுல போட்டுக்காதே. போய் வேலையை பாரு' என்று தட்டிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

திருச்சியில் தனது இளைஞர் அணி லாபியை வைத்து நேருவுக்கு எதிராக அன்பில் மகேஷ் சில அரசியல் மூவ்களை நகர்த்துவது திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றது. உடனே அவர் முதன்மைச் செயலாளர் நேருவிடம், 'திருச்சி எப்படிண்ணே இருக்கு?' என்று கேட்டிருக்கிறார். அன்பில் மகேஷ் பற்றிய பேச்சையே எடுக்காமல், 'ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. ஊரக உள்ளாட்சித் தேர்தல் போலவே மொத்தத்தையும் நாம்தான் அடிக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார் நேரு.

இதையடுத்து அன்பில் மகேஷை தொடர்புகொண்ட ஸ்டாலின், 'நேரு அண்ணனுக்கு எந்த நெருடலும் இல்லாமல் அவருக்கு ஒத்துழைப்பா இருங்க. அவர் சொல்றபடி தான் நடக்கணும்' என்று உத்தரவிட்டு விட்டார்.

இதனால் திருச்சி மாநகராட்சி தேர்தல் களம் முழுவதும் நேருவிடமே வந்து விட்டது.

திமுகவின் வேட்பாளர்களை மட்டுமல்ல... கூட்டணிக் கட்சியினரின் வேட்பாளர்களையும் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கும் கே.என்.நேரு பிரச்சாரத்தில் அனைத்து நிர்வாகிகளையும் சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறார்.

'என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்' என்ற பாடல்தான் திருச்சி மாநகராட்சி திமுகவின் தேசிய கீதமாக இருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கையாண்ட அனைத்து விவரங்களையும் மாநகராட்சி தேர்தலிலும் நேரு கையாண்டு வருகிறார். அன்பில் மகேஷும் நேருவுக்கு உறுதுணையாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக

திமுகவில் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரின் அதிரடிகளுக்கு

ஈடுகொடுக்க திருச்சி அதிமுகவுக்கு ஒரு பவர்ஃபுல் முகம் இல்லை என்பதுதான் உண்மை.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதவியில் இருக்கும்போதே பெரிதாக எதையும் கொடுக்க மாட்டார் என்ற இமேஜை வளர்த்துக்கொண்டவர். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் கேட்கவே வேண்டாம்.

அதிமுக வேட்பாளர்கள் பலர் தங்கள் சொந்த காசை தான் செலவு செய்து வருகிறார்கள். பிரச்சாரத்தின் ஆரம்பக் கட்டங்களில் 100 பேருக்கு மேல் வலம்வந்து கொண்டிருந்த அதிமுக வேட்பாளர்கள் தற்போது 25 பேர், 15 பேர் ஆக செலவைக் குறைத்துக் கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வம், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு வந்தபோது மாவட்ட நிர்வாகிகள் அவரிடம் வெல்லமண்டி நடராஜன் பற்றிய புகார் செய்துள்ளனர். தனது மகன் ஜவகர் போட்டியிடும் வார்டு அளவுக்கு மற்ற வார்டுகளை அவர் கவனிக்கவில்லை என்பது தான் அதிமுகவினரின் புகார். பண விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சூசகமாகச் சொல்லி சென்றுவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதனால் அதிமுக கூடாரம் திமுகவின் அளவுக்கு உற்சாகமாக இல்லை.

மக்கள் நீதி மய்யம்

திருச்சி மாநகரில் பரவலாக டார்ச் லைட்டை பிடித்துக்கொண்டு பல குழுக்கள் நடந்துகொண்டே இருக்கின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திருச்சி கிழக்கு தொகுதியில் 11,396 ஓட்டுகள், திருச்சி மேற்கு தொகுதியில் 10,466 ஓட்டுகள் பெற்றார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள். அந்த தைரியத்தில் திருச்சி மாநகரில் மக்கள் நீதி மய்யம் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 50% வார்டுகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியால் முழுமையாக வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. எனவே 42 வார்டுகள் வரையில்தான் அக்கட்சி போட்டியிடுகிறது.

வீடு வீடாகச் சென்று அப்பார்ட்மென்ட்களில் பல மாடிகள் ஏறி இறங்கி மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஒவ்வொரு வார்டிலும் முழுமையாக மக்களைச் சந்தித்து முடித்து இரண்டாவது ரவுண்டு வீட்டு பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். சைலன்டாக மக்கள் நீதி மய்யம் நடத்திவரும் இந்த வீட்டு வேட்டை அக்கட்சிக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. நகர்ப்புற மக்கள் கமல்ஹாசன் மீது ஒரு சாஃப்ட் கார்னர் வைத்திருக்கிறார்கள் என்பது மக்கள் நீதி மய்யத்தின் சாதகமான அம்சம்.

திருச்சி மாநகராட்சித் தேர்தலில் திமுக தற்போது வேகமாக முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அடுத்த இடத்தில் அதிமுக சற்று தூரம் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் தமிழர், பாஜக வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர்.

வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 15 பிப் 2022