மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 பிப் 2022

மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவு பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி!

மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவு பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி!

தஞ்சை மாணவி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை, தேவையான ஆவணங்களை உடனடியாக தமிழ்நாடு அரசு சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு, நீதிக்கும், பாஜகவுக்கும் கிடைத்த வெற்றி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் காரணமாக, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.

இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு அரசுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பு, நீதிக்குக் கிடைத்த வெற்றி; இது பாஜகவின் தொடர் அறப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

கட்டாய மத மாற்றம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்களோ, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் சென்றோ அல்லது ஆறுதல் உதவிகளையோ இதுவரை கொடுக்கவில்லை.

இன்னமும் சொல்லப்போனால், விசாரிக்கும் முன்பே காவல் துறையினர், மாநில அரசின் அமைச்சர்கள் எனப் பேசிய அனைவரும், இவ்வழக்கில் கட்டாய மத மாற்றத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினர்.

இந்த வழக்கு பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் முதலமைச்சர் மௌனம் காப்பதால், ஆளும்கட்சியின் எண்ணம் தெளிவாகத் தெரிந்தது. கட்டாய மத மாற்றத்துக்கு ஒரு இளம்பெண்ணை பலி வாங்கிய கட்டாய மத மாற்றத்தைக் கண்டிக்காமல் அப்பள்ளியைக் காப்பாற்றுவதில் ஆளும்கட்சி முனைப்பாக இருந்தது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகி சகாய மேரி சமீபத்தில் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தபோது, ஆளும் கட்சியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நேரில் சென்று மரியாதைகள் செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை வரவேற்கிறார். முதலமைச்சர் அனுமதி இல்லாமல் இது சாத்தியமா? மதுரை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டபோது, அதை ஏற்காமல், ஆளும் கட்சி அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில், மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைகோரி வழக்கு தொடர்ந்தது. மேற்கண்ட சம்பவங்களிலிருந்து ஆளும்கட்சியின் எண்ணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இனியாவது அறிவாலயம் அரசு, தான் சொன்ன பொய்களுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? மகளை இழந்து தவிக்கும் பெற்றோரை இதுவரை சந்திக்காத ஆட்சித் தலைவர் இனியாவது செல்வாரா? இனியாவது உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவாரா?

உச்ச நீதிமன்றத்தின் இந்தச் சிறப்பான தீர்ப்பின் மூலம் பல உண்மைகள் தெளிவாகின்றன. ஆளும் அரசும் அலுவலர்களும் அடுக்கடுக்காக சொன்ன பொய்களை இந்தத் தீர்ப்பு வெளிச்சப்படுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சி உண்மையின் பக்கம், நேர்மையின் பக்கம், மக்களின் பக்கம் நியாயத்தின் பக்கம் இருப்பதை இந்தத் தீர்ப்பு உறுதிசெய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்விட்டரில், "மாணவி வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசு இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, நீதி கிடைத்திட செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 15 பிப் 2022