மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: திருமணம், வயது, சமத்துவம்: சட்டத்தால் தீர்வு கிடைக்குமா?

சிறப்புக் கட்டுரை:  திருமணம், வயது, சமத்துவம்: சட்டத்தால் தீர்வு கிடைக்குமா?

மேரி ஏ.ஜான்

கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதாவது, ஆண்களின் திருமண வயதுக்கு இணையாகப் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது இந்த மசோதாவின் நோக்கம்.

2020 பட்ஜெட் உரையில் இதுகுறித்த சிறு அறிவிப்பு அப்போதே வெளியான நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்ட மசோதாவாக வந்துள்ளது. 2020 ஜூலை மாதத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய நிதி ஆயோக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கையை வைத்து அரசு சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்தது. ஆனால், குழு அறிக்கை பொதுப் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. இந்த மசோதா நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட மசோதாவில், 21 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் எனக் காட்டும் தன்மை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான சிறப்பு கவனம்

எனினும், பெண்களின் உடல் நலன், மன நலன், கல்வி வாய்ப்புகள், திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களை இந்த சட்ட மசோதா தொடுகிறது. இவ்வளவு விஷயங்களையும் எந்தவொரு மசோதாவும் அண்மைக் காலத்தில் எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லை.

பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாகுபாட்டை ஒழித்தல், சுயசார்பு உள்ளிட்டவற்றை இலக்காகக் கொண்டுள்ளதாக இந்த மசோதாவின் மொழி உள்ளது. அரசியலமைப்பு சாசனம் சொல்லும் சமத்துவத்தை, திருமண வயதை உயர்த்துவதன் மூலம் எட்ட முடியும் என்கிறது இந்த மசோதா.

எனினும், பெண்கள் நல மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றனர். இந்த முரண்பாடு ஏன் ஏற்படுகிறது? இதைப் புரிந்துகொள்ள 130 ஆண்டுக் கால சமூக முரண்களைப் பார்க்க வேண்டும்.

சமூகச் சீர்திருத்தங்களின் வரலாறு

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமூகச் சீர்திருத்தங்கள் உச்சத்தில் இருந்தபோது எல்லா விவாதங்களும் பெண்களைச் சுற்றியே இருந்தன. ஒரு சமூகத்தின் மேம்பாட்டை அச்சமூகத்தின் பெண்கள் அடைந்துள்ள மேம்பாட்டை வைத்தே அளவிடலாம் என்றார் அம்பேத்கர். சமூகச் சீர்திருத்தங்களில் திருமணங்களை ஒழுங்குபடுத்துவது முக்கியப் பங்கு வகித்துள்ளது. அதிலும் பெண்களுக்கான திருமண வயது மையக் கருவாக இருந்துள்ளது.

பெண்களுக்கான திருமண வயதை 10 ஆண்டுக்கு மேல் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், திருமண வயதை உயர்த்துவது இந்துக் கலாச்சாரத்துக்கு ஆபத்து எனக் கடும் எதிர்ப்பும் இருந்தது. பின்னர் வயதான கணவனின் வன்புணர்வால் ஒரு சிறுமி இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பெண்களின் திருமண வயது 12 ஆண்டாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, 1920களில் சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் பெண்களுக்கான திருமண வயதை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் சாரதா சட்டம் 1929ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு பெண்களுக்கான திருமண வயது 14 ஆகவும், ஆண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் உயர்த்தப்பட்டது.

விடுதலைக்குப் பிந்தைய முன்னெடுப்புகள்

இந்திய விடுதலைக்குப் பின் சிறப்புத் திருமணச் சட்டம் 1954ஆம் ஆண்டிலும் இந்து திருமணச் சட்டம் 1955ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆண்களுக்கான திருமண வயது 18 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 15 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக 1977ஆம் ஆண்டில் எமர்ஜென்சி முடிவுக்கு வந்தபோது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டு பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் உயர்த்தப்பட்டது. இப்போதைய அரசு பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த மசோதா கொண்டுவந்துள்ளது.

ஒருகாலத்தில் 10 ஆக இருந்த பெண்களின் திருமண வயது தற்போது 21 வரை வந்துவிட்டது. பெண்களின் திருமண வயது பற்றிய கருத்து காலப்போக்கில் வெகுவாக மாறியிருக்கிறது என்பதையே வரலாற்று நிகழ்வுகள் காட்டுகின்றன. 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்குத் திருமணமும் குறைந்துவிட்டது என்பதையே மக்கள்தொகை கணக்கெடுப்புத் தகவல்களும் கூறுகின்றன.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்குத் திருமணம் குறைந்துவிட்டது என்பதை தேசிய குடும்ப நல ஆய்வு தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வு 3 (2005-06) தகவல்படி, 20-24 வயது வரம்பில் உள்ள 47.4% பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. தேசிய குடும்ப நல ஆய்வு - 4 (2015-16) தகவல்படி 20-24 வயது வரம்பில் உள்ள 26.8% பெண்கள் மட்டுமே 18 வயதுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். தேசிய குடும்ப நல ஆய்வு - 5 (2020-21) தகவல்படி 20-24 வயது வரம்பில் உள்ள 23% பெண்கள் மட்டுமே 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இன்றைய யதார்த்தம்

நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் இப்போது திருமணத்துக்கு தகுதியான பெண், தகுதியான ஆண் என்பதற்கு வரையறைகள் மாறியுள்ளன. ஆண்களைப் பொறுத்தவரை நல்ல கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை திருமணத்துக்கான முக்கிய தகுதியாக உள்ளன. சில மாநிலங்கள், பகுதிகளைத் தவிர பரவலான இடங்களில் பெண்களுக்கான திருமணத் தகுதியும் அதிகரித்துள்ளது.

எனினும், திருமண வயதை அதிகரிப்பதால் மட்டுமே நல்ல பயன்கள் கிடைத்துவிடும் எனப் பொருள் இல்லை. உதாரணமாக, குழந்தைப் பிறப்பின்போது பெண்கள் உயிரிழப்பதற்கு ரத்தச் சோகை முக்கிய காரணமாக உள்ளது. சர்வதேச அளவில் ரத்தச் சோகையில் இந்தியா மிக மோசமான இடத்தில் உள்ளது. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த முற்படும் இந்தக் காலத்திலும் பெண்களுக்கான ரத்தச் சோகை இன்னும் மோசமாகவே உள்ளது.

பெண்கள் மிகக் குறைந்த அளவில் வேலைவாய்ப்பு பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், வேலைவாய்ப்பு பெற்ற பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்குத் திருமணம் உள்ளிட்ட காரணங்களும் உள்ளன. திருமண வயது உயர்ந்து வந்த காலத்திலும், பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வந்துள்ளது. திருமண வயது உயர உயர பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும் வேகமாகக் குறைந்துவருகின்றன.

எனவே, திருமணத்தையும் தாண்டி வேலைவாய்ப்பின்மையே பெண்களின் சுயசார்பையும், அதிகாரம் பெறுதலையும் தடுக்கிறது. பல பெண்கள் இல்லத்தரசிகளாக இருந்து பொருளாதார ரீதியாகக் கணவனையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதால் மட்டும் அவர்களுக்கான வளர்ச்சி கிடைத்துவிடாது என்பதே இறுதி வாதம். எனினும், எந்தப் பலனும் இல்லாவிட்டால்கூட, திருமண வயதை உயர்த்துவதால் ஆபத்து இல்லை.

பெண்களுக்கான வளர்ச்சி குறித்து ஆர்வம் காட்டுபவர்கள் பெண்கள் சுயசார்பு வாழ்வைப் பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதாகத் தெரியவில்லை. கல்விச் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. நல்ல வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகச் சொற்பமாக உள்ளது.

குழந்தைத் திருமணங்களை ஒழிக்க வேண்டும் எனச் சர்வதேச சமூகமும் குரல் எழுப்பிவருகிறது. சொல்லப்போனால், குழந்தைத் திருமணத்தை ஒழித்தால் சுகாதாரத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தை நிறைய சேமிக்க முடியும் என உலக வங்கியே வெளிப்படையாகக் கூறிவருகிறது. எனினும், இதனால் பெண்களுக்கான சுயசார்பு, வன்முறை குறைப்பு, வேலைவாய்ப்புகள் ஆகியவை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

எனவே, திருமண வயதை உயர்த்துவதால் ஏற்படும் நன்மைகளைவிடத் தீமைகள் அதிகமாக இருக்குமா என்பதை ஆராய வேண்டியது அவசியம். பெண்கள் தங்களுக்கான சமத்துவத்தைத் தாமாகவே போராடிப் பெற வேண்டும். எனவே, பெண்களின் நிலையை மேம்படுத்துவதாகக் கூறும் சட்ட மசோதாவால் நிலைமை மோசமடையுமா என்பதை நாடாளுமன்றக் குழு தீவிரமாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்.

*

மேரி ஏ. ஜான் கட்டுரையாளர் - புதுதில்லியிலுள்ள சென்டர் ஃபார் விமன்ஸ் டெவலப்மெண்ட் ஸ்டெடீஸில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்

நன்றி: தி இந்தியா ஃபோரம்

தமிழில்: புலிகேசி

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 14 பிப் 2022