மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 பிப் 2022

மாநகராட்சி வலம்: உதயநிதி பிரச்சாரம்- நாகர்கோவிலில் கரையேறுமா திமுக?

மாநகராட்சி வலம்: உதயநிதி பிரச்சாரம்- நாகர்கோவிலில் கரையேறுமா திமுக?

மொத்தம் 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி, பாஜக, அதிமுக ஆகிய மூன்று அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மாநகராட்சி ஆனபின்பு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் நாட்டின் தென்கோடி முனையில் முதல் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திமுக

மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 37 வார்டுகளில் போட்டியிடுகிறது. 13 வார்டுகளில் காங்கிரஸ், இரண்டு வார்டுகள் மதிமுகவுக்கு. இங்கே அவ்வளவு தான் திமுக கூட்டணி.

காங்கிரஸ் கட்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் பாதிக்குப் பாதியாக 25 இடங்கள் கேட்டு அடம் பிடித்தார் எம். பி. விஜய் வசந்தகுமார். ஆனால் திமுக அதற்கு மறுக்க 17க்கு இறங்கிவந்து அதன்பிறகு 13 இடங்கள் என முடிவானது. குமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் குமரி கிழக்கு மாவட்டமான மாநகர பகுதியில் திமுகவோடு ஏனோதானோ கூட்டணியில் தான் இருக்கிறது காங்கிரஸ்.

இதுமட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் 9 வார்டுகளில் தனியாக போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் ஏற்பட்ட கசப்பால் அவர்கள் தனியாகவே நிற்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள வார்டுகளில் மட்டுமே அவர்கள் நிற்பதால் திமுகவுக்கு ஒரு சிறு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

4ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரான நாகர்கோவில் திமுக மாநகர செயலாளர் மகேஷ் தான் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் களத்தில் இருக்கிறார். குமரி மாவட்டத்தில் காணொலிப் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தனது உரையில் ஐந்து முறை மகேஷை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இது மகேஷ் தான் நாகர்கோவிலில் திமுக மேயர் வேட்பாளர் என்பதை கட்சியினருக்கு உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனாலும் மாவட்டச் செயலாளரான சுரேஷ்ராஜன் மகேஷை நேரடியாக எதிர்க்க முடியாமல் மிதமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அதேநேரம் அமைச்சர் மனோ தங்கராஜ் மேயர் வேட்பாளரான மகேஷ் உள்ளிட்ட திமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைப்பதற்காக தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.

பிரச்சாரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் திமுக முக்கிய நிர்வாகிகளிடம், "100% வெற்றி பெற வேண்டும் என்று தலைவர் சொல்லி அனுப்பியிருக்கிறார். நமக்குள் இருக்கும் எவ்விதமான கசப்புகளும் திமுகவின் வெற்றியை பாதித்து விடக்கூடாது. இதில் உறுதியாக இருங்கள்' என்று சொல்லியிருக்கிறார். மனோ தங்கராஜ் மற்றும் மகேஷ் ஆகியோரின் கரன்சி பாசனம் மாநகரம் முழுவதும் பாய்ந்து வருவதால் உற்சாகத்தில் இருக்கிறது திமுக.

பாஜக

ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சியாக இருந்த பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவராக இரண்டு முறை பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அப்போது நகராட்சி தலைவராக இருந்த மீனாதேவ் இப்போதும் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பொன் ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான மீனாதேவ் முதல் மேயர் நான்தான் என்ற நம்பிக்கையோடு களமிறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அதேநேரம் பாஜக ஜெயிக்கும் பட்சத்தில் மேயர் பதவியை பெறும் பொருட்டு மாவட்ட பொருளாளர் முத்துராமனும் களத்தில் இறங்கியுள்ளார். ரியல் எஸ்டேட் பிசினஸில் பெரும் பணம் சம்பாதித்த முத்துராமன், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மறைமுகத் தேர்தலில் கவுன்சிலர்களுக்கு எத்தனை லட்சம் கொடுக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான பாஜகவினர் பிரச்சார களத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் சீனியர் பிரமுகர்களான இந்த இருவருக்கிடையே.... அண்மையில் அண்ணாமலை முன்பு கட்சியில் சேர்ந்த இரட்டை கொலை வழக்கு புகழ் சகாயம் 5 வது வார்டில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பாஜகவில் சீட்டு கிடைக்காத நபர்கள் 7 வார்டுகளில் சுயேட்சையாக களம் இறங்கியிருப்பது பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

திமுக ,அதிமுகவுக்கு சரிநிகர் சமானமான தேர்தல் செலவுகள் பாஜகவாலும் மேற்கொள்ளப்படுகின்றன. பாஜகவின் கவுன்சிலர் வேட்பாளர்களில் கணிசமானோர் கோடீஸ்வரர்கள் என்பதால் பணத்துக்குப் பஞ்சமில்லை.

அதிமுக

பாஜக &அதிமுக கூட்டணி முடிந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அதிமுகவினர் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். அதேபோல நாகர்கோவில் மாநகராட்சியிலும் அதிமுகவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

பாஜக கூட்டணி இல்லாததால் 52 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளரை நிறுத்த முடிந்திருக்கிறது. இதனால் போட்டி வேட்பாளர் யாருமில்லை என்ற நிம்மதியில் இருக்கிறது அதிமுக.

அதிமுக அனைத்து வார்டுகளிலும் வேட்பாளரை நிறுத்தி இருந்தாலும் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலஜா மேயர் வேட்பாளராக கோடிட்டுக் காட்டப்படுகிறார். தளவாய்சுந்தரம் அவரை மேயர் வேட்பாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு எதிராக நாஞ்சில் முருகேசனின் மருமகள் பாஜக வேட்பாளராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் மாநகராட்சியில் ஆளும் கட்சி என்ற முறையில் திமுக அதிக இடங்களை பெற முயற்சி செய்தாலும்... பாஜகவை விட அதிக இடங்களில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான தளவாய் சுந்தரத்திடம் அழுத்தமாக கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் தீவிர தேர்தல் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தளவாய் சுந்தரத்தின் தாயார் காலமாகி விட குடும்பச் சடங்குகளை ஒட்டி ஓரிரு நாட்கள் தளவாய் சுந்தரம் தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடவில்லை. இன்று பிப்ரவரி 14ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் நாகர்கோவில் வரவிருக்கும் நிலையில் தளவாய்சுந்தரம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

திமுகவுக்கும் பாஜகவுக்குமே போட்டி என்று நாகர்கோவில் களநிலவரம் இருந்தாலும் அதை மாற்றி திமுகவுக்கும் அதிமுகவுக்குமே போட்டி, பாஜகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ள வேண்டும் என்பதில் நாகர்கோவில் அதிமுகவினர் உறுதியாக இருக்கிறார்கள்.

அதிமுகவினரின் கடைசிநேர சுறுசுறுப்பு நாகர்கோவில் நிலவரத்தை

மாற்ற வாய்ப்பு இருக்கிறது.

வேந்தன்

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

திங்கள் 14 பிப் 2022