மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

தமிழக மீனவர்களுக்கு 25ஆம் தேதி வரை சிறை!

தமிழக மீனவர்களுக்கு 25ஆம் தேதி வரை சிறை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்கக் கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு நேற்று மாலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றது.

குறிப்பாகக் கடந்த 8ஆம் தேதி 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதனைக் கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு நேற்றுதான் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். இந்நிலையில் மீண்டும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீனவர்கள் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ஜனவரி 31ஆம் தேதி 21 பேர், பிப்ரவரி 8ஆம் தேதி 11 பேர், இன்று 12 பேர் எனக் கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது" என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்?. வெறுமனே கடிதங்களை எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கச்செய்வதுடன், இனிமேலும் இந்த அவலம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “12.02.2022 அன்று, IND-TN-10-MM-612 மற்றும் IND-TN-10-MM-328 ஆகிய பதிவெண்களைத் தாங்கிய இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், 13.02.2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் . கொரோனா தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தச்சூழலில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 13 பிப் 2022