மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

எடப்பாடி காலில் எம்ஜிஆர்

எடப்பாடி காலில் எம்ஜிஆர்

தமிழ்நாட்டு அரசியலில் காலில் விழும் கலாச்சாரத்தை அதிகமாக ஊக்குவித்தது மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா என்பது ஊர் அறிந்த செய்தி.

அவர் கால்களில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என எந்த பேதமும் இல்லாமல் அனைவரும் வகை வகையான டிசைன்களில் விழுந்து எழுந்தனர். ஜெயலலிதா மறைந்ததும் திடீரென சசிகலாவை பொதுச்செயலாளர் என ஆக்கி அவர் கால்களிலும் அதிமுகவினர் விழுந்தனர். கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக சசிகலா அறிவித்தபோது சசிகலாவின் கால்களில் எடப்பாடி விழுந்த வீடியோ இன்னும் சமூகதளங்களில் பரிமாறப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

இப்படி எவர், எவர் காலில் விழுந்தாலும் அதிமுகவில் எல்லோரும் எம்ஜிஆரின் கால்களில் விழுவதுதான் இயல்பான இலக்கணமாக இருந்தது.

ஆனால், பிப்ரவரி 11ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் கண்ட ஒரு காட்சி அதிமுகவின் சீனியர் நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரையும் ஒரு கணம் அதிர வைத்தது.

இந்த நிமிடம் வரை அதிமுகவின் பிரச்சார மேடைகளிலும், பிரச்சாரக் களங்களிலும் கட்சிக்கான வாக்கு சேகரிக்கும் வசீகர முகமாக இருப்பது எம்ஜிஆர்தான். ஜெயலலிதா மிகப்பெரிய ஆதிக்கத்தை அதிமுகவில் செலுத்தி மறைந்திருந்தாலும்... பிரச்சாரம் என வருகிறபோது எம்ஜிஆர் என்ற முகத்துக்கு இன்னமும் மவுசு குறையவில்லை.

அந்த வகையில் அதிமுகவின் பிரச்சாரக் களங்களில் எம்ஜிஆர் போல வேடமிட்டு, எம்ஜிஆர் போல உடல்மொழிகள் வெளிப்படுத்தி வரும் நபர்களுக்கு இன்றும் வரவேற்பு கிடைக்கிறது. அவர்கள் நிஜ எம்ஜிஆர் இல்லை என்றாலும், எம்ஜிஆர் என்ற அதிமுகவின் ஆகப் பெரிய ஆளுமையை கண்முன்னே கொண்டு வருகிறார்கள் என்பதால் எம்ஜிஆர் போல வேடமிட்ட அவர்கள் மீது அன்பும் மரியாதையும் காட்டுகிறார்கள் அதிமுக தொண்டர்கள் இன்றும்.

அந்த வகையில் பிப்ரவரி 11ஆம் தேதி மதுரை கோ.புதூரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக அறிமுக கூட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். எம்ஜிஆர் காலத்து அதிமுக பிரமுகர்களான செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

அந்த மேடையில் மதுரை மாமன்றத்துக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ராஜா என்பவர் எம்ஜிஆர் போல தலைக்குத் தொப்பியும் கண்ணாடியும் அணிந்து வந்தார். அதிமுக தொண்டர்கள் அவரைப் பார்த்து குஷியாக... மேடைக்குச் சென்ற 'அந்த எம்.ஜி.ஆர்', அங்கே நின்றிருந்த எடப்பாடியின் கால்களில் விழுந்தார். எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை ஆசிர்வாதம் செய்கிறார். இந்தக் காட்சி புகைப்படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ‌

அதிமுகவின் முக்கிய பிரமுகர் இந்தக் காட்சியை நமக்கு அனுப்பி வைத்து தொலைபேசினார்.

"சார் எடப்பாடி பழனிசாமியின் கால்களில் எம்ஜிஆர் விழும் காட்சியை பார்த்தீர்களா... அண்மையில் கட்சியின் மூத்த பிரமுகரான அன்வர்ராஜா எந்த விசாரணையும் இல்லாமல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒரு நிர்வாகியோடு செல்போனில் பேசியதை பதிவு செய்து வெளியிட்டு விட்டார்கள். அந்த உரையாடலில், 'இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் நான்தான் எம்ஜிஆர்னு எடப்பாடி சொல்லியிருப்பார்' என்று அன்வர்ராஜா குறிப்பிட்டிருந்தார். அதுக்காகத்தான் அவரை கட்சியில் இருந்து நீக்கியதா பேசிக்கிட்டாங்க. மதுரை புதூரில் நடந்த சம்பவத்தை பார்த்தால், அன்வர்ராஜா உண்மையைத்தான் சொல்லி இருக்காருனு தெரியுது.

எம்ஜிஆரின் படத்துக்கு முன் வணங்கி நிற்கும் இவர்கள் எம்ஜிஆரை போல வேடம் அணிந்து வரும் கட்சித் தொண்டர்களை காலில் விழ வைப்பது நியாயமா? காலில் விழ கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், அவர்களாகவே விழுந்தாலும் தடுத்திருக்க வேண்டாமா? எம்ஜிஆர் என்ற பிம்பத்திற்கு இன்று இவ்வளவுதான் மரியாதையா..." என்கிறார் விரக்தியாய்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆரின் ஆசிபெற்ற எடப்பாடி பழனிசாமி என்ற சொற்றொடர்... உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடியின் ஆசிபெற்ற எம்ஜிஆர் என்று மாற்றப்பட்டுவிட்டதோ?

ஆரா

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 13 பிப் 2022