மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

பட்ஜெட்: நிதியமைச்சர் மறந்த சொற்கள்!

பட்ஜெட்: நிதியமைச்சர் மறந்த சொற்கள்!

அஸ்வினி தேஷ்பாண்டே

பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல், கிரீன், காலநிலை, ஆத்மநிர்பார், மேக் இன் இந்தியா, மூலதனச் செலவு, எளிமையாக தொழில் செய்தல், வரி வருவாய், ஜிஎஸ்டி வசூல் ஆகிய வார்த்தைகள் அதிக அளவில் இடம்பெற்றன.

வரி வசூல் உயர்வு என்பது பொருளாதார வளர்ச்சியைக் காட்டுவதாகவும், எதிர்காலப் பொருளாதாரத்தைத் தொழில்நுட்பம், பசுமை எரிபொருள், ஸ்மார்ட் நகரங்கள் ஆகியவை தீர்மானிக்கும் எனவும் நிதியமைச்சர் பேசினார். சரி, இந்த பட்ஜெட்டில் இடம்பெறாமலேயே விடுபட்ட வார்த்தைகள் என்னென்ன? அதாவது, நிதியமைச்சர் பேசாத விஷயங்கள் என்னென்ன?

கூறப்படாத சொற்கள்

வேலைவாய்ப்பின்மை, வறுமை, உணவுப் பாதுகாப்பு, அமைப்புசாரா துறை, புலம்பெயர் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளிகள், அனைவருக்குமான சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, பெண்கள், இளைஞர்கள் போன்ற வார்த்தைகள் சுத்தமாக இல்லை; அல்லது அதிக அளவில் இல்லை.

கொரோனா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை, பொருளாதாரமும் மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால், பணக்காரர்களின் செல்வம் மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது. எளியவர்களின் நிலை மோசமாகிக்கொண்டே போகிறது.

வறுமை ஒழிப்பில் இந்தியா கடந்து வந்த பாதையில் பின்னோக்கி நகரும் அபாயம் உள்ளது. நாட்டின் மொத்த வருமானத்தில் பணம் படைத்த 10 விழுக்காட்டினரின் பங்கு 57.1% ஆகவும், 50 விழுக்காடு எளியவர்களின் பங்கு 13.1% ஆகவும் உள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வு எதிர்கால வளர்ச்சிக்கு ஆபத்தாக உள்ளது.

மூலதனச் செலவுகள் 35.4 விழுக்காடாக உயர்த்தப்படும் என்பது பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக உள்ளது. எனினும், ஜிடிபியில் செலவினத்துக்கான விகிதத்தைப் பார்த்தால் கடந்த ஆண்டில் 2.2 விழுக்காட்டிலிருந்து இப்போது 2.9 விழுக்காடாக உயருகிறது. இது மிகப்பெரிய உயர்வு இல்லை என்பது தெளிவாகிறது.

சொத்துகளை உருவாக்குவது, நிலையான சொத்துகளை மேம்படுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவை மூலதனச் செலவுகளின் பகுதிகளாக உள்ளன. இதில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கான கடன்களைச் செலுத்துவதற்கு 51,971 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணமும் மூலதனச் செலவுகளில்தான் வருகிறது.

வேலைவாய்ப்புக்கு என்ன செய்வது?

உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பொருளாதார செயல்பாடுகளுக்குப் பலனளிக்கும் என்றாலும், உள்கட்டமைப்புத் திட்டங்களால் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், உள்கட்டமைப்புத் திட்டங்களில் நிறைய பணம் செலவாகுமே தவிர, நிறைய ஊழியர்களுக்கு வேலை கிடையாது.

மூலதனச் செலவுகள் எட்டுப் பகுதிகளாக அல்லது துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அணுசக்தி (1.9%), தொலைத்தொடர்பு (7.2%), பாதுகாப்பு (20.3%), மாநிலங்களுக்கு (1.4%), வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரம் (3.6%), ரயில்வே (18.3%), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை (25%) என மூலதனச் செலவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு என்பதே இல்லை என்ற சூழலில் எளிய குடும்பங்களுக்கு 100 நாள் வேலை திட்டமே கடைசி சரணாலயமாக உள்ளது. தற்போது வேலைவாய்ப்பின்மை தாண்டவமாடும் சூழலில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.

சுகாதாரம் என்ன ஆயிற்று?

மிகப்பெரிய சுகாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியுள்ளது. ஆனால் இன்னும் சுகாதாரத்துக்கான செலவு குறைவாகவே உள்ளது. குடிநீர், சுகாதாரம், ஊட்டச்சத்து, காற்று மாசுப்பாடு என பழைய விஷயங்களையே சேர்த்து சுகாதாரத்துக்குப் புதிதாக செலவு செய்ததை போல பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ளது. இதனால், சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார சேவைகளுக்கான செலவினத்தைக் கணக்கிடுவதும் கடினமாகியுள்ளது. கடந்த ஆண்டு தண்ணீர் மற்றும் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 44% மட்டுமே டிசம்பர் வரை செலவிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக குறைந்துகொண்டே வருகிறது. இந்த பாகுபாடு பற்றி பட்ஜெட்டில் எந்தப் பொருளும் இல்லை. பெண்களுக்கான திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.

கல்வியைப் பொறுத்தவரை டிஜிட்டல் கல்வியின் சாதனைகள் பற்றி நிதியமைச்சர் பெருமை பேசுகிறார். ஆனால், அந்த டிஜிட்டல் கல்வி பெறுவதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளால் பல லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதை பற்றி அவர் பேசவே இல்லை. இதற்கு ஒரே தீர்வு பள்ளிகளை உடனே திறப்பதுதான். எத்தனை கல்வித் தொலைக்காட்சிகள் வந்தாலும் வகுப்பறைக்கு ஈடாகாது.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும், அமைப்புசாரா துறைகளும்தான் பல கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் அளிக்கின்றன. இவ்விரு துறைகளுமே தற்போது கடுமையான நெருக்கடியில் உள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ECLGS கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது அரசு. இதுவொரு கடன் உதவித் திட்டம் மட்டுமே.

அமைப்புசாரா துறை இந்தியாவின் 80% தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. ஆனால், இதுபற்றி பட்ஜெட்டில் எந்தக் குறிப்பும் இல்லை. டிமாண்டை ஊக்குவிப்பதன் மூலமாகச் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேபோல, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணமும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மார்க்கெட்டில் டிமாண்டைத் தூண்டலாம்.

இந்தியாவின் ஜிடிபி 2019-20ஆம் நிதியாண்டில் 145 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜிடிபி 15-20 லட்சம் கோடி ரூபாயாகச் சுருங்கியுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதற்கு, எளிய மக்களின் நெருக்கடியைப் போக்குவது, அவர்களின் வருமானத்தைப் பெருக்குவது, நுகர்வை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்றத்தாழ்வுகள் முன்பை விட இருமடங்கு வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இதனால் டிமாண்ட் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சமூகச் சமநிலையும் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

அஸ்வினி தேஷ்பாண்டே - டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழில்: புலிகேசி

.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 13 பிப் 2022