மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: பிழைத் தகவல்கள்: அரசு வன்முறைக்கான புதிய ஆயுதம்

சிறப்புக் கட்டுரை:  பிழைத் தகவல்கள்: அரசு வன்முறைக்கான புதிய ஆயுதம்

நீலாஞ்சன் சர்க்கார்

உமர் காலித், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தில்லி காவல் துறையால் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 53 பேரை பலிவாங்கிய தில்லி கலவரங்களைத் தூண்டியதில் பங்கு வகித்ததாகக் கைது செய்யப்பட்டார். பலியானவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். சர்ச்சைக்குரிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் அவர் மீது ஜனவரி 8ஆம் தேதி பேசிய பேச்சுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை வழக்கில் ஒரு பிரச்சனை இருக்கிறது.

இதை தில்லி நீதிமன்றத்தின் முன் அவரது வழக்கறிஞர் திரிதீப் பயஸ் ஆகஸ்ட் 23ஆம் தேதி புரியவைத்தார். ரிபப்ளிக் டிவி மற்றும் நியூஸ் 18 தொலைக்காட்சிகளில் வெளியான பேச்சு தொடர்பான செய்தி அடிப்படையில் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், இந்த சேனல்களில் வெளியான வீடியோ காட்சி, பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரான அமீத் மாளவியா ட்விட்டரில் பகிர்ந்துகொண்டது. ஆனால், நீதிமன்றத்தில், பயஸ் போட்டுக் காண்பித்த முழு பேச்சு, வன்முறையைத் தூண்டிவிடுவதாக அல்லாமல், ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

கவனத்துக்குரிய மூன்று புள்ளிகள்

இதன் அபத்தத் தன்மையை மீறி, இதில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. முதலில், தவறான தகவலுக்கான தோற்றுவாய், ஆளும்கட்சி தொடர்புடையதாக அமைந்துள்ளது. இரண்டாவதாக, இதனால் குறிவைக்கப்பட்டவர் அரசை விமர்சித்துச் செயல்படுபவர். மூன்றாவதாக, இந்தத் தவறான தகவல் வெகுஜன ஊடகத்தால், உண்மையானது போல நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தவறான மற்றும் உள்நோக்கம் கொண்ட தகவல்களின் வழக்கமான அம்சங்களாக இவை அமைகின்றன. அரசை விமர்சிப்பதற்கான அலசலுக்கான வெளி குறுக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டப்படும் நிலையில், பிழைத் தகவல்கள் பரப்பப்படுவதில் அரசின் பங்கு தெளிவாக உணர்த்தப்படுவதில்லை.

தவறாக வழிகாட்டும் தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தி, காரண காரியங்களுக்கு ஏற்ப எதிர்வினை ஆற்றுவதை பாதித்தாலும் இவை ஜனநாயகத்தை பாதிப்பதாகக் கருதப்படுவதில்லை. எனினும் இந்தியச் சூழலில், அரசு தலையீடும் கட்டுப்பாட்டின் தீவிரமும் தவறாக வழிகாட்டும் தகவல்களைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட வழி செய்கிறது. தகவல் முறிப்பு என்றும் குறிப்பிடப்படும் இந்த நிகழ்வு, ஆளும் பாஜக, இந்து தேசியக் கொள்கைக்கு ஆதரவான தேசியச் சொல்லாடலை உருவாக்கவும், அரசை விமர்சிப்பவர்களையும் முஸ்லிம் சமுதாயத்தினரைத் துன்புறுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. விமர்சிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகத் திட்டமிட்டுப் பிழையான தகவல்களைப் பரப்பும் உத்தியை அரசே கையாளும்போது, ஜனநாயக பாதிப்புகள் ஏற்படலாம்.

எப்படிச் செயல்படுகின்றன?

ஜனநாயக பாதிப்பைப் புரிந்துகொள்ள, பிழையான தகவல்கள் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு விஷயங்கள் முக்கியமாகின்றன. முதல் விஷயம், ஆளும் அரசை விமர்சிக்கும் தகவல்களைத் தணிக்கை செய்து தேர்வு செய்யும் அதிகாரம். இரண்டாவது விஷயம், நாடு முழுவதும் தகவல்களைக் கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்தும் ஆற்றல்.

பிழையான தகவல்கள் இந்திய ஜனநாயகத்தை எப்படி பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள, இந்திய அரசியலில் அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசியல் பிழையான தகவல்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரால் அரசின் சாதனைகள் குறித்து தவறான சாதனைகளை முன்வைக்கவும், சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸின் பங்களிப்பை அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதைவிட, அரசியல் எதிரிகளையும் விமர்சகர்களையும் அச்சுறுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பிழையான தகவல்களின் முக்கியக் குறி, முஸ்லிம் சமுதாயத்தினர். அரசியல் ஆதாயம் தவிர, பிழையான தகவல்களின் நோக்கம் இந்தியாவுக்கான முஸ்லிம்களின் விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்குவது. இந்து தேசியவாதக் கொள்கையை அடைய இது நேரடியாகப் பிரயோகிக்கப்படுகிறது.

இந்திய முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளன. ஆனால் இத்துடன் நிற்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தினர், அரசின் விமர்சகர்கள் ஆகியோர் மீதான திட்டமிட்ட பிழையான தகவல்களை இன்னொரு வன்முறையாகப் பார்க்க வேண்டும். நேரடி வன்முறையைவிட அதிக சமூக, அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசு ஆதரவு வன்முறை இது.

நேரடியான வன்முறையைவிட, அரசியல் பிழைத் தகவல்கள் தரப்படுத்தவும் பெரிதாக்கவும் எளிதானவை. உள்ளூர்ப் பிரச்சினைகளை தேசியச் சொல்லாடலாக மாற்றிவிடலாம். காணொலிக் காட்சிகள், பின்னணியிலிருந்து விலக்கப்பட்ட புகைப்படங்கள் வாயிலாக உருவாக்கப்படும் பிழையான தகவல்களின் அளவும், அவற்றை எதிர்கொள்வதில் உள்ள இயலாமையும் நாடு முழுவதும் தகவல்களாக ஏற்கப்படும் நிகழ்வுகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

பிழைத் தகவல்களின் அரசியல் தாக்கம்

பாஜக ஆளும் இடங்களில், மத உள்ளடக்கம் சார்ந்த பிழைத் தகவல்கள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அரசு ஆதரவு பெற்ற வன்முறையின் தர்க்கத்துக்கேற்ப இது அமைகிறது. பெரிய அளவிலான வன்முறையை நிகழ்த்தும் ஏகபோகம் பெற்றுள்ள அரசு, குறிப்பிட்ட அரசியல் தன்மை கொண்ட மக்கள்தொகையின் ஒரு பகுதியின் மீது தனது அதிகாரத்தைக் கொண்டு தாக்குதல் நடத்த உதவுகிறது. இந்து தேசியவாதம் மீது சார்பு கொண்டவர்கள் பிழைத் தகவல்கள் மூலம் ஊடகம் மீது முழுமையான கட்டுப்பாடு கொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம் சமுதாயமும் அரசியல் எதிரிகளும் எளிதாகக் குறிவைக்கப்படலாம்.

ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது, பிழைத் தகவல்களைப் பரப்புவது, விமர்சகர்களை அச்சுறுத்துவது ஆகியவை இந்தியாவில் புதிதல்ல. இதன் வீரியமும் இந்த உத்திகளின் செயல்திறனுமே இப்போது புதிதாக இருக்கின்றன. பிழையான தகவல்களுக்கும் உண்மை என நம்பித் தவறான தகவல்களைப் பகிர்பவர்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர்வது நல்லது. இந்தியாவில் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை அலச இது தேவை. தவறான தகவல்களுக்குப் பதிலாகப் பிழையான தகவல்களைப் பரப்புவதில் அரசு ஈடுபடும்போது, இவை அரசியல் அல்லது கொள்கை காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

நவீன தொழில்நுட்பங்களும் ஊடக ஊடுருவலும் இந்த வகைச் சொல்லாடல்களுக்கு உதவுகின்றன. 70 சதவிகித வீடுகள் தொலைக்காட்சியைக் கொண்டிருப்பதால், செய்தி நுகர்வுக்கான மிகப்பெரிய வழியாகத் தொலைக்காட்சி விளங்குகிறது. எனவே முன்பைவிட அதிகமாகப் பிழையான தகவல்கள் தொலைக்காட்சி வாயிலாக பரவுகின்றன. சமூக ஊடகங்களும், பிழைத் தகவல்கள் பரவுவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

கலவரங்கள், தேர்தல் முறைகேடு, அரசியல் ஆதரவு போன்ற வழக்கமான ஜனநாயக பாதிப்புகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றாலும், வன்முறை, துன்புறுத்தல், அடக்குமுறை தொழில்நுட்பத்தின் பரப்பு மற்றும் செயல்திறனில் வேகமாக ஏற்படும் மாற்றங்களையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும். நாட்டில் ஜனநாயக ஆரோக்கியத்தின் மீது அரசியல் பிழைத் தகவல்களின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள இந்தியாவில் தகவல்களைத் தேர்வு செய்து, அவற்றை மையமாக்கி விநியோகிக்கும் அரசின் ஆற்றலோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். விமர்சிப்பவர்களையும் முஸ்லிம்களையும் துன்புறுத்தி, மவுனமாக்க ஊடகத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் அளவும் தீவிரமும் அரசு ஆதரவு பெற்ற வன்முறையின் செயல்திறன் மிக்க வடிவமாக்குகிறது.

நீலாஞ்சன் சர்க்கார் - பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மேம்பட்ட கொள்கை ஆராய்ச்சி மையத்தில் மூத்த உறுப்பினராக உள்ளார்.

நன்றி: தி இந்தியா ஃபோரம்

தமிழில்: சைபர் சிம்மன்

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

சனி 12 பிப் 2022