மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: எனது பார்வையில் ஹிஜாப்!

சிறப்புக் கட்டுரை: எனது பார்வையில் ஹிஜாப்!

ஸ்ரீராம் சர்மா

கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்கள் அனைத்தும் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அதன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார். காரணம், இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரும் ‘ஹிஜாப்’ என்னும் உடை!

அது குறித்த எதிர்ப்பலைகள் மாணவர்களிடையே எழுந்து, கலவரம் எழும் அளவுக்குப் பெரிதாகி, துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்கும் அளவுக்குச் சென்று விட்ட செயல் இந்திய அறிவுலகத்தைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நாட்டின் வருங்காலத் தூண்களாக மாணவர்களே அமைந்து நிற்கிறார்கள் எனும்போது, அவர்களிடையே சகோதரத்துவமும் ஓர்மையும் உண்டாக்க வேண்டிய அவசியம் இந்த தேசத்தின் கடமையாகிறது. அவர்களை திசை திருப்பும் எந்த சக்தியையும் கண்டு மடக்கி, அதன் மூலமறிந்து முடக்க வேண்டிய கட்டாயக் காலம் இது!

கலையும் – கலாச்சாரமும்தான் எனது பிரதான களம். அதனளவில் நின்று, அரசியல் அகற்றி, ஒரு சில கருத்துகளை மட்டும் பரிமாறிக்கொள்ள விழைகிறேன்.

இஸ்லாமியத்தில் பெண்களின் உடைகளுக்கான ஒழுங்கு விதிகள், புர்கா – நிக்காஃப் – ஹிஜாப் மற்றும் சாதோர் என நான்கு வகைப்பட்டாலும், அதன் பயன்பாடுகள் தேசத்துக்கு தேசம் மாறுபாடு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

அதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள கூகுள் இருக்கிறது என்பதால், வேறு சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் விதைக்க விழைகிறேன்.

இந்திய மண்ணின் அடிப்படையானது அதன் வேரூன்றிய கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தின் கண்கள் - பெண்கள்! ஆம், இந்த மண்ணில் ஓடும் நதிகள் அனைத்தும் பெண்களின் பெயர் தாங்கியே விரைகின்றன!

காலம் காலமாக ‘கன்யா வந்தனம்’ என பெண்மையைப் போற்றும் உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டு கொண்டாடி வந்த இந்த மண்ணில்… மேற்கத்திய நாடுகளின் தாக்கங்களால் அந்தக் கலாச்சாரம் பாழ்பட்டுப் போவதாகச் சொல்பவர்கள்தான்,

இளம் பெண்கள் குட்டை ஆடைகளோடும், டைட்ஸ் உடைகளோடும் பொது வெளியில் உலவக் கண்டு கவலை கொள்பவர்கள்தான்,

பிப்ரவரி 14இல் பீச்சுகளில், பார்க்குகளில் MORAL POLICING செய்து இளவட்டக் கூத்துகளை விரட்டி அடிப்பவர்கள்தான்…

அதே மாரல் போலீஸிங்கை - ஒரு மார்க்கத்தின் மாணவிகள் தன்னியல்பாக ஏற்று நடக்க முன் வரும்போது எதிர்க்கிறார்கள். கல்வீசி எறிகிறார்கள். கலவரம் செய்கிறார்கள்.

இந்த முரண்பாடுதான் ஆச்சரியம் அளிக்கிறது. ஆழ்ந்த கவலைக்குள் தள்ளுகிறது!

பெண்களின், தலையலங்காரம் மற்றும் காதுகள் கழுத்தை மறைக்க செய்யும் ஹிஜாப்பை மதம் கடந்து பார்த்தால் மறுத்துவிட முடியாது.

கவனியுங்கள். போர்க்கள பூமிக்குள் வளர்ந்த இஸ்லாம் மதம் பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்பட்டது. எந்த மண்ணையும் எதிரிகள் ஆக்கிரமிக்கும்போது முதலில் நிகழும் பேராபத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையே. ஆக, பெண்மையை இஸ்லாம் உஷார் படுத்தி வைத்தது…

“பெண்களே, ஆண்களின் காமாந்தக செயலானது உயிர்பலி வரை கொண்டு சென்று விடும். எந்த நேரமும் உங்களைக் கண்காணிக்க எவராலும் முடியாது. நீங்களே உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்.

கலாச்சாரத்தின் எல்லைக்குள் நின்றுகொள்ளப் பழகுங்கள். வெளியுலகில் நடமாடும்போது உங்கள் உடலை ‘புர்கா’ எனும் உடை அணிந்து முழுமையாக மூடிக் கொள்வது நலம்...”

இப்படியாக அறிவுறுத்தும் அதே இஸ்லாம்…

“பெண்களே, உங்கள் சொந்த வீட்டுக்குள் இருக்கும்போது, உங்களை மணம் முடிக்கும் தகுதி அற்றவர்கள் முன்னிலையில், ‘ஹிஜாப்’ மட்டும் அணிந்துகொண்டால் போதுமானது…” என்றது!

அதாவது, தகப்பன் மற்றும் சகோதரர்கள் முன்னிலையில் ‘ஹிஜாப்’ அணிவதே போதுமானது என்கிறது!

விரித்துச்சொன்னால், “ஆபத்து இல்லாததொரு பிரதேசத்தில் உங்களை முற்றிலும் மூடிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம்பிக்கைக்குரிய ஒரு இடத்தில் நீங்கள் ஹிஜாப்போடு இயல்பாக இருக்கலாம்” என்கிறது.

எனில், மேற்கண்ட கர்நாடகப் பள்ளியில் ஹிஜாப் அணியும் மாணவிகளின் மறைமுகக் கூற்று என்னவாக இருக்க முடியும்?

இந்தப் பள்ளியில் சகல பாதுகாப்போடுதான் நான் பயிலுகிறேன். எனது மாணவ சகோதரர்களின் முன் ‘ஹிஜாப்’ மட்டும் அணிந்துகொண்டால் எனக்குப் போதுமானது என அவர்கள் கருதுவதாக அல்லவா கொள்ள முடிகிறது.

சக மாணவர்களுக்கு கண்ணியம் சேர்க்கும் செயலல்லவா அது? அப்படியாக ஏற்றுக்கொள்வதுதானே சகோதரத்துவத்துக்கு வழிகோலும்!?

மேற்கத்திய கலாச்சார வழி பற்றி, தாறுமாறாக உடையணிந்து, இந்தியக் கலாச்சாரத்தை அழிக்கும் செயலை அவர்கள் செய்யவில்லை என்னும் அளவில் அவர்களை வாழ்த்தி வழி மொழிவது தகுமல்லவா?

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான “போக்ஸோ” சட்டம், கடுமையான ஷரத்துகளை தன்னுள்ளடக்கியது ஏன் என்பதை உணர வேண்டாமா?

இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை, நமது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை - மூன்று லட்சத்து எழுபத்து ஓராயிரத்து ஐந்நூற்று மூன்று என்கிறது!

மேற்கத்திய நாடுகளின் கலாச்சார பரிவர்த்தனைகளால் சில நன்மைகள் நமக்குண்டு எனினும், அதில் சில ஆபத்துகளும் உண்டு. அதை உணர்ந்து, இந்த மண்ணுக்குரிய கலாச்சார விழுமியங்களை முன்வைத்து முன்னேறுவதே நமக்கு நன்மை பயக்கும் என்கிறது ஆய்வு.

எனில், பெண்களின் கவர்ச்சியை ஆண்களின் கண்களுக்கு பந்தி வைக்க மறுக்கும் ஹிஜாப் உடையை மறுப்பதில் அர்த்தமில்லை என்றே கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் இன்று எத்தனையோ இஸ்லாமியப் பெண்கள் ‘ஹிஜாப்’ கூட அணியாமல் மேடையில் தோன்றி பேசுகிறார்கள்! அவர்களெல்லாம் மார்க்க சிந்தனையில் இருந்து அகன்று விட்டார்கள் எனக் கொண்டுவிட முடியுமா?

சக மாந்தர்களிடம் அளப்பரிய நம்பிக்கை கொண்டு வாழும் அவர்களின் அழகிய வாழ்வு நமக்கான பெருமை அல்லவா?

கேளுங்கள். அன்றொரு நாளில், ஆரிய சமாஜ வளாகத்தில் ‘வெண்ணிலா இலக்கிய வீதி’ என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தேன்.

இன்று, நாடறிந்த இஸ்லாமியப் பெயர் தாங்கிய பெண் பேச்சாளர் ஒருவர் அன்றதற்கு நிரந்தர ஆதரவாளராக இருந்தார். கம்பன் கழகம் உட்பட பற்பல மேடைகளில் தன் பேச்சாற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவரது சகோதரர் எனது கிரிக்கெட் நண்பர்தான் என்றாலும், மார்க்க சிந்தனையில் ஊறியவராக இருந்தார். புர்கா அணியாமல், ஹிஜாப்பும் அணியாமல் மேடை ஏறிப் பேசும் தன் தங்கையின் போக்கை அன்றவர் வன்மையாக கண்டித்தார்.

ஆனாலும் அவரது தாயார் நம்பிக்கையோடு மறுமொழி சொன்னார்…

“என் மகளை எனக்குத் தெரியும். அவள் சென்று வரும் அமைப்புகளில் நல்ல நல்ல மனிதர்கள் இருப்பதாகவே நான் நம்புகிறேன். இலக்கியம் மட்டுமே அவர்கள் இலக்கு. கவலைப்பட ஏதுமில்லை. அல்லாஹ் காப்பாத்தும்!”

அந்தத் தாயின் நம்பிக்கையை வருங்காலத்திலும் காப்பாற்றுவதே இந்த மண்ணின் ஆகப் பெரும் கடமையாகிறது!

ஆழங்காற்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரிடமும் கலந்த பின்பே சொல்கிறேன்…

அது, புர்காவோ – ஹிஜாப்போ, எந்த ஒன்றையும் எவர் மீதும் இஸ்லாம் திணிப்பதில்லை. உங்கள் வாழ்நில - சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி உங்களை தகவமைத்துக் கொள்ளுங்கள் எனத்தான் கனிவுடன் அறிவுறுத்துகிறது,

பெரும்பான்மை ஈகோ குறித்தும், சிறுபான்மை ஈகோ குறித்தும் நிறைய உணர்ந்திருக்கிறேன். சென்று வந்த சில நாடுகளில் அதனை நேரிடையாகக் கண்டு மறுகியிருக்கிறேன்.

அதைச் சட்டம் கொண்டு அடக்க முற்பட்ட நாடுகள் தோல்வி கண்ட வரலாற்றையும் படித்திருக்கிறேன் என்பதால் மாண்புமிகு கர்நாடக முதலமைச்சருக்கோர் பணிந்த வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.

அடுத்த சில பல ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியினைக் கண்டுவிடக் கூடும் என உலக நாடுகளெல்லாம் உன்னித்திருக்கும் இந்த வேளையில், இது போன்ற அவலங்கள் அதற்கு தடை போட்டுவிடக் கூடாது என்பதை தயவுசெய்து கவனத்தில் வைத்து காரியமாற்றுங்கள்.

சமூக அமைதியைக் குலைக்கும்படியாக உலவும் அந்த வீடியோவில்…

‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தோடு, சக மாணவியை விரட்டும் மாணவர்களின் அந்தச் செய்கை அசிங்கமானது. அவலமானது. ஆபத்தானது. அவர்களை இயக்கும் பாழரசியலின் மூலம் எது எனக் கண்டு அதை ஒடுக்குங்கள்!

போலவே,

“நான் இந்த நாட்டின் குடிமகள்! என்னை அச்சுறுத்த நீங்கள் யார்?” என அந்த மாணவி பதில் கோஷமிட்டிருந்தால் மொத்த மண்ணும் அவரோடு நின்றிருக்கும்!

மாறாக, ‘அல்லாஹூ அக்பர்’ என அந்த மாணவி, மத கோஷமிட்டதற்கு யார் காரணம் என்பதையும் ஆராய்ந்து பிடியுங்கள்!

1557இல் தொடங்கி நூற்றாண்டுகளாக தொடர்ந்த மதவாதப் போர்களில் சிக்கி சின்னாபின்னமான ஐரோப்பிய மண்ணில், அன்று தோன்றிய ஆகச் சிறந்த மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் மனம் வெறுத்து இவ்வாறு சொல்கிறார்…

மதம் என்பது OPIUM OF THE MASSES!

இதற்கு மேல் எதைச் சொல்லி முடிக்க இந்தக் கட்டுரையை!?

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 10 பிப் 2022