மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: உடைந்த பார்ப்பனிய உற்பத்தி முறையும் உடையாத சாதிய சமூகமும்! - பகுதி 5:

சிறப்புக் கட்டுரை: உடைந்த பார்ப்பனிய உற்பத்தி முறையும் உடையாத சாதிய சமூகமும்! - பகுதி 5:

பாஸ்கர் செல்வராஜ்

பார்ப்பனிய பொருளாதார சமூக கட்டமைப்பின் சாரம், நிலம் என்பது விற்க - வாங்க உரிமையற்ற பொதுவான விவசாய உற்பத்தி பயன்பாட்டுக்கானது. இதில் உழுது உற்பத்தி செய்பவர், அந்த உற்பத்திக்கும் உற்பத்தியாளருக்கும் சேவகம் செய்பவர் என இந்த உற்பத்தியில் மனிதர்கள் ஆற்றும் பாத்திரத்தைப் பொறுத்து சமூக ஏணிப்படியில் இவரின் இடம் நிர்ணயிக்கப்படும். இந்த நிலப் பயன்பாட்டையும், சமூக இடத்தையும் நிர்ணயிக்கும் ஏகபோக அதிகாரம் பெற்றவனாக ஆட்சியாளன் இருக்கிறான். இப்படி நிலத்தை பொதுவில் வைத்து உற்பத்தியில் ஈடுபடுவது, பலனை ஆள்பவர்கள் அனுபவிப்பது என்ற ஆசிய பாணி உற்பத்தி முறை இந்தியாவில் மட்டுமல்ல பாரசீகம், துருக்கி வரை இருந்திருக்கிறது.

இந்தப் பார்ப்பனிய பொருளாதார சிந்தனை யாருடையது?

மேய்ச்சல் தொழில் முதன்மையாக நடந்த அந்தப் பகுதிகளில் மேய்ச்சலுக்கான நிலத்தை பொதுவாகவும் அதன்மீது நடைபெறும் உற்பத்தியான கால்நடைகளில் தனியுடைமை என்ற அந்தப் பொருளாதார கட்டமைப்பு உருவானதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கால்நடை தொழில் செய்யாத, மற்ற விவசாய உற்பத்தி நடந்த நாடுகளில் இல்லாத இந்தப் பொருளாதார முறை நம்மிடம் மட்டும் எப்படி என்ற கேள்விக்கு, சோழர்கள் வடக்கில் இருந்து ஆதி மேய்ச்சல் தொழிற்காரர்களான ஆரிய பார்ப்பனர்களை இறக்குமதி செய்தது பதிலாக வந்து நிற்கிறது. ஆனால், பாரசீகம், துருக்கியில் சாதி இல்லையே நம்மிடம் எப்படி என்ற கேள்விக்கு நாம் தொழில்ரீதியில் மட்டும் ஆரியர்களிடம் இருந்து வேறுபடவில்லை; நிறத்திலும் வேறுபட்டிருக்கிறோம் என்பதைத் தவிர வேறு பதில் கிடைக்கவில்லை. மற்ற நாடுகளில் தொழில், செல்வம் சார்ந்த வர்க்க சமூகமாக மாறுகிறார்கள்; வடக்கில் வர்க்கத்தோடு கூடுதலாகப் பிறப்பு சார்ந்து சாதிய நால்வர்ணமாக மாறுகிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வரும் பார்ப்பனியம் வர்ண சுத்தமற்ற சாதிய அடுக்காக நம்மை மாற்றுகிறது.

களப்பிரர் கால பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து உற்பத்தி பெருகி, நிலத்தில் தனியுடைமை ஏற்பட்டு அதன் பலன்கள் தொழிலாளர், உடைமையாளர், வணிகர், ஆள்பவர் என அனைவருக்குள்ளும் பகிர்ந்து கொள்ளப்பட்டு அவர்களுக்குள் பரிவர்த்தனை நடந்தது எனக்கொண்டால் இப்போது இந்த சாதிய கட்டமைப்பில் அது சேவையாக மாறி உற்பத்தியின் உபரி அனைத்தும் ஆளும் வர்க்கத்திடம் செறிவடைகிறது (Concentrate). இந்த செல்வச்செறிவும், சாதிய சமூகமாக நாம் முழுமையடைவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகத் தோன்றுகிறது. இந்தியாவின் எல்லா ஆளும் வர்க்கத்தின் தெரிவும் பார்ப்பனியமாக இருப்பதன் காரணத்தை வெறும் கருத்தியல் சார்ந்து மட்டும் பார்க்கவியலாது. பொருளியல் ரீதியாக அது அவர்களுக்குப் பலனளிக்காவிட்டால் அதை அவர்கள் எதற்கு தெரிவு செய்ய வேண்டும் என்பதும் இங்கே சிந்திக்கத்தக்கது.

பார்ப்பனியமும் செல்வச்செறிவும்...

இதனோடு வடக்கில் சாதி நிலைப்படுத்தப்படும் குப்தர்கள் காலம் பொஆ 5ஆம் நூற்றாண்டோடு முடிவடைவதும் இதே காலத்துக்குப் பிறகுதான் மக்கள் ஒன்று கலத்தல் நின்றது என மரபணு ஆய்வு சொல்வதும் இங்கே கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் கங்கை, கடாரம் வரை செல்லும் ராஜராஜன், ராஜேந்திரனோடு சோழர்களின் விரிவாக்கம் முடிவுக்கு வருகிறது. இவர்களின் காலத்தில்தான் பெருமளவில் பார்ப்பனர்கள் குடியேற்றம் நடப்பதும், இவர்களிடம் குவிந்த செல்வம் மாபெரும் கோயில்களாக மாறுவதும் நடக்கிறது. இந்தக் காலத்தில்தான் சாதிய கட்டமைப்பு தமிழகத்தில் முழுமையடைகிறது எனக் கருதுவோமானால் இதன் பிறகான இவர்களின் வீழ்ச்சியை இதைக்கொண்டே புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

செல்வம் ஒரு சிலரிடம் செறிவடையும்போது இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் பலனடையாத மற்றவர்களுக்கு (Non Stakeholders) இந்தச் சமூக ஒழுங்கை (Order) காக்கும் தேவை இல்லாமல் போகிறது. அதோடு இந்தச் செல்வச்செறிவு எதிரிகளுக்கு எளிதான இலக்காகவும் மாறுகிறது. பொருளாதாரப் பங்குதாரர்கள் குறைந்து சமூகம் சாதியாக பிளவுண்ட பிறகு இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் தார்மீக பலத்தை பார்ப்பனிய ஆட்சிகள் இழந்து விடுகின்றன. பார்ப்பனியம் நிறுவனமயமான வடக்கில் குப்தர்களை முகலாயர்களும், நம்மை சோழ, பாண்டியர்களுக்குப் பிறகு முகலாயர்கள் உள்ளிட்ட பலரும் ஆட்சி செய்கிறார்கள். இதை மார்க்ஸ் இந்திய சமூகத்துக்கு என்று தனித்த தெரிந்த வரலாறு என்ற ஒன்று இல்லை; அது ஒருவரையடுத்து ஒருவராக வந்து செயலூக்கமோ, எதிர்ப்போ, மாற்றமோ இல்லாமல் இருக்கும் இந்தச் சமூகத்தில் பேரரசுகளை கட்டமைக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் வரலாறாக இருக்கிறது என்கிறார்.

தேங்கிய பார்ப்பனிய உற்பத்தியில் நடந்த அழிவுபூர்வமான உடைப்பு!

சோழர்களுக்குப் பிறகு ஆட்சிகள் மாறினாலும் ஆட்சி செய்பவருக்கு நிலம் சொந்தம்; உயிர்வாழ உழவர்கள் அதை உழுது உண்பது; அதற்கு உதவி செய்து அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்வது; உபரியை நிலத்தின் உடைமையாளர் எடுத்துக்கொள்வது; அவர்கள் அந்த உபரியைக் கொண்டு மற்ற நாடுகளுடன் பரிவர்த்தனையில் ஈடுபடுவது என்ற பார்ப்பனிய பொருளாதாரச் சாரத்தில் மாற்றமின்றியும் கைத்தொழில்களின் வளர்ச்சி முடக்கப்பட்டு உழைப்பின் வளர்ச்சியின்றியும் (Development of Llabour), மக்களுக்குள் பரிவர்த்தனையற்ற சாதிய சமூகமாக வரலாற்றில் பல நூற்றாண்டுகள் தேங்கி நிற்கிறோம். இந்த உற்பத்தி முறையில் முதல் உடைப்பை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

இந்த உடைப்பு எங்கு என்ன நோக்கத்தில் ஏற்படுத்தப்படுகிறது என்பது முக்கியமானது. ஆங்கிலேயர்கள் தமது தேவையான விவசாய மூலப்பொருட்களைப் பெற நிலத்தில் தனியுடைமையை உருவாக்குகிறார்கள். நிலத்தின் உரிமை ஒருவரிடம் இருந்து ஒரு சிலரிடம் மாற்றும் இந்த உடைப்பு ஆளும் வர்க்கத்துக்குள் சொத்துக்கான ஜனநாயகத்தை வழங்குகிறது. இவர்களுக்கு நுகரும் வாய்ப்பையும் பரிவர்த்தனையில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. ஆனால், இந்த உற்பத்தி சங்கிலியைச் சார்ந்து வாழ்ந்தவர்களை இந்தச் சங்கிலியில் இருந்து விடுவித்து பரிவர்த்தனையில் பங்கெடுக்கும் வாய்ப்பை வழங்கவில்லை. மாறாக உடைக்கப்பட்ட உற்பத்தி சங்கிலி இதுவரையிலும் கிடைத்து வந்த உணவையும் இல்லாமல் ஆக்கி வறுமையிலும், பஞ்சத்திலும் தள்ளுகிறது. உதிரியாக எஞ்சியவர்களை போரில் ஈடுபடுத்தி பலி கொடுக்கிறது.

தமிழகத்தின் அறிவுபூர்வமான ஆக்கபூர்வ உடைப்பு!

விடுதலையின் பெயரால் அரியணை ஏறும் பார்ப்பனியம் நிலத்தைச் சிலரிடம் இருந்து பலருக்கு மாற்றினாலும் இதுவரையிலும் இந்த பார்ப்பனிய உற்பத்தி சார்ந்து வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை மாற்றவில்லை. பண்ணையடிமைகளாக நிலவுடைமையாளர்களை சார்ந்து வாழும் முந்தைய சூழலே தொடர்கிறது. இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல. ஆனால் விவசாய வளர்ச்சியும், தொழிற்துறை பாய்ச்சலும் நடந்துகொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்வி, சத்துணவுத் திட்டம், அரசி அரசியல் ஆகியவற்றை முன்னெடுக்கும் தமிழகத்தின் சமூகநீதி அரசியல் பழைய பார்ப்பனிய உற்பத்தி சார்ந்த இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு சார்பை உடைக்கிறது. இதிலிருந்து விடுபட்டவர்களுக்கு கல்வியைப் பரவலாக்கி அவர்களின் உழைப்புத்திறனை பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

தொண்ணூறில் இந்தியாவுக்குள் நுழையும் உலகமயம் பார்ப்பனிய பொருளாதாரக் கட்டமைப்பை முழுமையாக உடைத்து நொறுக்குகிறது. நமது சமூகம் உழைப்பும், பயன் மதிப்பும் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்து பரிவர்த்தனையின் மூலம் பரிமாறிக்கொள்ளும் சரக்குகளை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ முறைக்கு முழுமையாக மாறுகிறது. சுயசார்பு கிராமங்கள் என்று அழைக்கப்படும் ஒருவரை சார்ந்து ஒருவர் வாழும் அந்த ஒட்டுண்ணி பொருளாதார முறையை உடைத்து நொறுக்குகிறது. மற்ற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் முழுமையான சுதந்திரமாக சந்தையில் தனது உழைப்பை விற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஏற்கனவே அந்த சுதந்திரத்தைப் பெற்று திறனை வளர்த்துக்கொண்ட தமிழக உழைப்பாளர்கள் தனிச்செயல்திறன்மிக்க உழைப்பின் மூலம் மாநிலத்தைத் தொழில் வளர்ச்சியடைந்த முதன்மை மாநிலமாக மாற்றுகிறார்கள். கிராமங்களின் அளவு குறைந்து இந்தியாவிலேயே மிகப் பெரும் அளவில் நகரமயமான மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறது.

கல்வி என்பது அந்தந்தக் கால உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் தேவையான உழைப்பாளர்களை உருவாக்குவது. சங்க கால பாகுபாடற்ற கல்வி உற்பத்தியைப் பெருக்கி அதன் விளைவாக முற்கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உருவாக்கத்துக்கும் கல்லணை கட்டுமளவு பொறியியலாக்கத்துக்கும் வித்திட்டது எனவும் பிந்தைய களப்பிரர் கால பௌத்த - சமணப் பள்ளிகளின் மூலம் பரவலாக்கப்பட்ட கல்வி நுணுக்கமாக நீரின் போக்கை அறிந்து குலம், ஏரிகளை வெட்டி உற்பத்தியைப் பெருக்கி பிற்கால பாண்டிய, சோழ அரசுகளை உருவாக்கியது எனவும் புரிந்து கொள்வோமானால் இந்தப் பிற்கால ஆட்சிகளின்போது வரும் பார்ப்பனியம் கல்வியையும், தொழிலையும் முடக்கி அதன் பரவலாக்கத்தை தடுத்து உற்பத்தியின் வளர்ச்சியைத் தடுத்து நமது சமூக வளர்ச்சி தேக்கத்தைச் சந்திக்கிறது என்ற முடிவை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது. இந்த வரலாற்று தேக்கத்தை மிகச்சரியாக அடையாளம் கண்டு எந்த இடத்தில் அது தடுத்து நிறுத்தப்பட்டதோ, அந்த இடத்தில் தமிழகம் இடையீடு செய்வதன் மூலம் மிக வேகமாக பொருளாதாரத் தொழிற்துறை வளர்ச்சியை எட்டுவதும் இங்கே சரியாகப் பொருந்திப் போகிறது.

முன்னேறிய உற்பத்தி முறையும் பின்தங்கிய சமூக அமைப்பும்...

இந்திய கம்யூனிஸ்டுகளின் வழமையான பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திய வாதத்தில் இருந்து மாறுபட்டு அது சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும் என்ற ஏங்கல்சின் சிந்தனை வழிப்பட்டது நமது வாதம். ஒரு சமூகம் எந்த வரலாற்று கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அந்தச் சமூகத்தின் உழைப்பின் வளர்ச்சியையும் குடும்பத்தின் வளர்ச்சியையும் கொண்டே மதிப்பிட வேண்டும் என்பது அவர் தரும் வரையறை. அதன்படி தமிழக தொழிலாளர்களின் உழைப்பின் வளர்ச்சி நமது குடும்ப அமைப்பில் எதிரொலித்திருக்கிறதா என்று பார்த்தால் இதுகாறும் நிலவிவந்த பலதார மணமுறையை அருகச் செய்திருகிறது; தனிநபர் சார்ந்த சொத்துடைமை கூட்டுக்குடும்ப முறையை உடைத்து, தனிக்குடும்பங்களின் பெருக்கத்துக்கு வித்திட்டிருக்கிறது. இளைஞர்-இளைஞிகள் தங்களது துணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நோக்கி சமூகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சாதியை உடைத்துக்கொண்டு அதற்கு வெளியே மணம் செய்துகொள்ளும் அளவுக்கு மாறவில்லை.

நமது உற்பத்தி சரக்குகளை உற்பத்தி செய்து பணத்தின் மூலம் பரிவர்த்தனை செய்துகொள்ளும் முதலாளித்துவ முறைக்கு மாறிவிட்ட பின்னரும் சமூகம் அதற்கேற்ப முதலாளி - தொழிலாளி, பணக்காரன் - ஏழை என வர்க்க சமூகமாகாமல் சாதிய சமூகமாகவே நாம் தொடர்வது முரணானதும் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொள்ளும் புதிய எதிர்மறை மாற்றமாகும். இந்த மாறுபட்ட முரணான மாற்றத்துக்கான காரணம் இந்த நாடுகள் எப்படி முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறியது என்பதில் இருக்கிறது. தமிழகத்தில் நாம் பார்ப்பனிய அரசியல் ஆதிக்கத்தை திராவிட அரசியல் கொண்டு போராடி வீழ்த்தி இருக்கலாம். ஆனால், அதன் பொருளாதார ஆதிக்கத்தில் இருந்து இன்னும் நம்மை விடுவித்துக் கொள்ளவில்லை. அதேபோல இந்த பார்ப்பனிய பொருளாதாரக் கட்டமைப்பை அதனால் சுரண்டப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வீழ்த்தவில்லை. மாறாக ஆங்கிலேய - அமெரிக்க ஏகாதிபத்தியங்களே தங்களது தேவையின் பொருட்டு இதை உடைத்து மாற்றி வைத்திருக்கிறார்கள். முன்பு மக்களின் உழைப்பின் உபரி முழுவதையும் ஒருவராக உண்டு வாழ்ந்த பார்ப்பனிய முற்றுருமை வேறுவழியின்றி தனது பங்கை குறைத்துக்கொண்டு இந்தப் பொருளாதார பலன்களை ஏகாதிபத்தியங்களுடன் பங்கிட்டுக் கொண்டு வருகிறது.

நமது தொழிலாளர்கள் உருவாக்கும் செல்வமனைத்தும் இந்த இரு முற்றுருமைவாதிகளால் உறிஞ்சப்படும்போது இங்கே மூலதனம் எப்படி உருவாகும்? அந்த மூலதனம் சுழன்று இங்கே உற்பத்தியில் ஈடுபட்டிருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான உற்பத்தி சங்கிலி மாற்றங்கள், தனிச்செயல்திறனுள்ள தொழிலாளர் உருவாக்கம், அந்த திறனின் அடிப்படையிலான செல்வச் செழிப்பு, அதன்மூலம் உருவாகும் தனிச்சொத்துடைமை எனப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கும். இதில் ஏற்படுத்தப்படும் செல்வப் பரவலாக்கத்தைப் பொறுத்தும், இருபாலரின் பங்களிப்பைப் பொறுத்தும் மண முறையும், குடும்ப அமைப்பும் பெருமளவில் மாற்றத்தைக் கண்டு சாதிய சமூகத்தை உடைத்து நொறுக்கி இருக்கும். அவ்வாறு இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படுத்தப்படும் அசமத்துவப் பொருளாதார வளர்ச்சி சாதிய சமூகத்தை இளக்கம் காண வைக்கும் அளவுக்கு அளவுரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதே ஒழியே சாதிய சமூகத்தில் இருந்து வர்க்க சமூகம் என்ற பண்புரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தாமல் பழைய சாதிய சமூக அமைப்பிலேயே நம்மை நீடித்திருக்கச் செய்து கொண்டிருக்கிறது.

இதனடிப்படையில் நாம் சாதிய சமூகமாக தொடர்வதற்கும் நமது உழைப்பை இந்த இரு முற்றுருமைவாதிகள் சுரண்டுவதற்கும் தொடர்பிருக்கிறது என நாம் முடிவுக்கு வருவோமானால் அதை எப்படித் தடுப்பது? அவர்களின் இந்த பொருளாதார ஆதிக்கத்தை எப்படி வீழ்த்துவது? அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? இதற்கான விடையைக் கண்டடைவதற்கு அவர்கள் நமது உழைப்பைத் திருடுவதற்கு எந்த பொறிமுறையை (Mechanism) பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அந்த பொறிமுறையின் மையம் பணம். அதன் தோற்றம் வளர்ச்சி, இந்தியாவில் அதன் தாக்கம் குறித்த பகுதி சிறிது இடைவெளிக்குப் பிறகு வெளிவரும்.


பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3 / பகுதி 4

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

4 நிமிட வாசிப்பு

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

புதன் 9 பிப் 2022