மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 பிப் 2022

எப்படி நடந்து கொள்ள வேண்டும்: வேட்பாளர்களுக்கு கமல் அறிவுரை!

எப்படி நடந்து கொள்ள வேண்டும்: வேட்பாளர்களுக்கு கமல் அறிவுரை!

வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், அவர்களின் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை,வெளியிட்டார்.

இதில், “அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு, ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத்தொட்டி, காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், நிதி ஒதுக்கும் கவுன்சிலர் கூட்ட விவாதங்களை இணையதளத்தில் நேரலை செய்தல், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலைக்கு உயர் தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி, கட்டட வரைபட அனுமதிகளை லஞ்சமில்லாமல் வழங்குதல் மற்றும் சென்சார் உதவியுடன் அவசர ஊர்திகளுக்குத் தடையில்லா போக்குவரத்து" ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொலியில் உரையாடினார்.

அப்போது, “இனம், மதம் போன்றவை கடந்தது மக்கள் நீதி மய்யம். யாரு வரம்பு மீறினாலும் அவர்களை கண்டிப்பேன். பெங்களூரில் தற்போது எல்லை மீறி இருக்கிறார்கள். எனக்கு மதம் பிடிக்காது, மனிதம் தான் பிடிக்கும். யாரும் எந்த மதத்தையும் திட்ட வேண்டாம். தமிழகத்தில் எந்த செயல் வரம்பு மீறினாலும் அதையும் நான் கண்டிப்பேன்.

நான் கலைஞன், கலையை மட்டும்தான் பார்ப்பேன். இங்கே தெருவில் என்ன நடக்கிறது, சாக்கடை ஓடுகிறதா என்பதை கவனிப்பதா என் வேலை. எனக்கு பரத கலை தெரியும், நடிப்பு தெரியும், எழுதத் தெரியும், பாடத் தெரியும்’ என்று கூறிக்கொண்டிருந்த இளைஞன் நான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மழை தண்ணீர் வீட்டிற்குள் தேங்கியதால் கழிவறைக்கு செல்லமுடியாமல் இருந்தபோது, அதற்காக ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டிய நிலை வந்தபோதுதான், எனது கவிதையையும், கலையையும் ஓரமாக வைத்துவிட்டு, தெருவில் நடக்கிற விஷயத்தை நான் கவனிக்க வேண்டும் என்பது எனக்கு புரிந்தது. அது எல்லாருக்கும் புரியவேண்டும்.

நீங்க எம்.ஏ, எம்.எட், பிஎஸ்சி படித்திருந்தாலும், உங்கள் வீட்டின் கழிவு நீர் சரியாக வெளியே செல்லாவிட்டால் உங்கள் கல்வியே கெட்டுப்போகும், உடம்பு கெட்டுப்போகும்.

இதிலிருந்து ஆரம்பித்து உங்களுடைய பங்களிப்பு அரசியலில் வேண்டும். இதுதான் அரசியல். நீங்கள் நினைப்பதுபோல், உச்சகட்டத்தில் தலைவர்கள் செய்யும் அரசியல் அரசியல் அல்ல. அரசியல் சேவை சார்ந்தது, சூழ்ச்சி சார்ந்தது அல்ல. இதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் நற்பணி இயக்கமாக இருந்ததை தைரியமாக கொண்டுவந்து அரசியலாக மாற்றியதே தவிர, உங்கள் எல்லாரையும் இருக்கும் கழக ஆட்சிகளின் எம்எல்ஏ போல், கள்வர்களாக மாற்றுவதற்கு அல்ல. அந்த வேலைக்காக உங்களை தயாராக்கி அனுப்பி வைக்க நான் வரவில்லை.

இங்கிலாந்து, அமெரிக்கா என்று நாம் பார்த்து ஆச்சரியப்படும் மேம்பட்ட நாடுகள் அனைத்தும் இப்படிதான் அலைக்கழிந்து, மனம் திரும்பி மாறியிருக்கிறார்கள் என்பது சரித்திரம். ராபர்ட் கிளைவ் என்பவர் அந்த ஊரில் ரவுடியாக திரிந்து கொண்டிருந்தவர். சாக்கடைகளை வழிமறித்து பெரிய ஆட்கள் மலம் கழிக்க முடியாமல் தவிக்கும்போது, வீடுகளில் வசூல் செய்து, அந்த மாதிரி ரவுடித்தனம் செய்து கொண்டிருந்தவர். பல ரவுடிகளை கூட்டமாக வைத்து தலைமை தாங்கிக்கொண்டு, லண்டனை சாக்கடையாக மாற்றிக் கொண்டிருந்த ஒருவரை ஊரை விட்டே நாடு கடத்த வேண்டும் என்று, நாட்டுக்கு ஏதாவது நல்லது செய் என்று இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு வந்த அவர் போர் தொடுத்தாரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது பாணியை சற்றே மாற்றி, ஆங்கிலத்தில் பேசி இங்கிருந்தவர்களை அடிமைப்படுத்தினார். இங்கிருக்கிறவர்கள் தப்பு செய்கிறமாதிரிதான், அவரும் திருடிட்டுதான் போனார். கடைசியில் அவருக்கும் திருட்டு பட்டம் கட்டப்பட்டது. இதுதான் சரித்திரம். இதிலிருந்து மேம்பட்டு வந்தவர்கள்தான் சர்ச்சில் போன்றவர்கள், இப்படி இருக்கக்கூடாது, இந்த பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? உடம்புக்கு ஏதாவது வந்தால் என்ன செய்வது? என்பதை உணர்ந்து, சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்த தேம்ஸை, மாற்றி குடிநீராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த மாதிரி தெருத் தெருவாக சென்ற கவுன்சிலர்களால் தானே தவிர, வேறு எப்படியும் அல்ல.

உலக யுத்தத்தில் எல்லா தெருவும், எல்லா சாக்கடையும், எல்லா கட்டடமும் இடிந்து விழுந்தபோது, எல்லாருக்கும் பொறுப்பு வந்தது. இப்படி ஒரு நிலைமை வந்தால்தான் நாம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டாம். இப்போதும் கிட்டதட்ட, இடிபாடு பாழடைந்த நிலையில்தான் தமிழகம் இருக்கிறது, இந்தியா இருக்கிறது. சும்மா மேம்பூச்சுக்கு அவ்வப்போது வார்னீஷ் அடித்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கக்கூடாது. நம் தெருவில் இருந்து ஆரம்பிக்கிறது, நம் வீட்டு வாசலில் இருந்து ஆரம்பிக்கிறது நம்முடைய அரசியல். இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குறுதிகள் எல்லாம், இதெல்லாம் தெரியுமே எனக் கூறுவதைவிட, தெரிந்த விஷயத்தை செய்யவில்லை என்பதுதான் நம்முடைய இழிநிலை. இதிலிருந்து மாற்றி இந்த அரசியலை கொண்டு செல்வதற்காகத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.உங்களில் யார் தவறு செய்தாலும் அது என்னையே சாரும். நான் வந்து உங்களை சாடுவேன். திருடன் எங்கே இருக்கணுமோ, அங்கேதான் இருக்கணும். அதனால், அது நம்ம கட்சியில் இருக்கக் கூடாது. பலரால் இந்த சூடு தாங்க முடியாததால், இளகி உருகி போய் கொண்டிருக்கிறார்கள். சுட்டாலும் பரவாயில்லை என்று சிலர் இங்கே இருக்கிறார்கள். நம் கட்சியிலிருந்து நல்லவர்களையும், வல்லவர்களையும் எடுக்கவில்லை. இவர்களை எப்படிதிருத்துவது என்றுநான் யோசித்துக் கொண்டிருந்தவேளையில், சிலர் அவர்களை கொத்தி சென்றுவிட்டனர். அந்த கட்சிகளுக்கு நன்றி.

சிங்கப்பூர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். அந்த சுத்தத்தை நாம் இங்கு கொண்டு வர வேண்டும். வேறு தலைவர்கள் யாரும் இதை கொண்டு வருவார்கள் என்று எண்ணக் கூடாது. இதை செய்ய கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,ஓபிஎஸ்.ஈபிஎஸ்,ஸ்டாலின் போன்ற தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள்தான் பண்ண வேண்டும். அதற்கு உங்களிடம் பலம் உள்ளது. அதற்கு மக்கள் சொல்வதை கேட்க வேண்டும். மக்களுடன் அடிக்கடி தொடர்புக் கொள்ள வேண்டும். மக்கள் குரல் உங்கள் குரலாக ஒலிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். தவறுசெய்ய வெட்கப்படவும், சேவை செய்ய பெருமை கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 9 பிப் 2022