சிறப்புக் கட்டுரை: தமிழகத்தில் பரிவர்த்தனையின் தோற்றமும் தேக்கமும் -பகுதி 4

politics

b> பாஸ்கர் செல்வராஜ்
சங்க காலப் பாடல்கள் வழியாக சமூகம் தாய்வழி சமூக அமைப்பில் இருந்து தந்தைவழி சமூக அமைப்பை நோக்கி நகர்வதாக இருந்திருக்கிறது; நீரும், சமநிலப் பகுதியும் அமைந்த மருத நிலப் பகுதி மற்ற பகுதிகளைவிட வேகமான வளர்ச்சியைப் பெற்றது; சமூகத்துக்குள் உழைப்பு பிரிவினை வளர்ந்து பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்தது; இதன் வளர்ச்சி சமூகங்களுக்கு இடையிலான மோதலாகப் பாடல்களில் வெளிப்பட்டது; பின்பு ரோமர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் மூவேந்தர்களின் காலத்தில் இந்த வர்த்தகத்தின் தேவையால் உந்தித் தள்ளப்படும் உற்பத்தி அணை கட்டுதல் மற்றும் மக்களை ஆதிக்கம் செய்தலை நோக்கி நகர்த்தியது; இதற்கு எதிராக மக்கள் பௌத்த, சமண மதத்தைக் கைகொண்டு, ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சி அடையும் மூன்றாம் நூற்றாண்டில் அதிகாரமும் செல்வமும் பரவலாக்கப்பட்ட களப்பிரர் ஆட்சி அமைந்தது; அவர்கள் குலம் ஏரிகளை வெட்டி தமிழகம் முழுவதும் சமமான விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கிறார்கள் என்பதான ஒரு சித்திரத்தை மனதில் வரைந்து கொண்டோமானால் இந்தப் பொருளாதார வளர்ச்சி என்னவிதமான சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை இதே காலத்தில் உருவான சிலப்பதிகாரக் கண்கொண்டு காண முற்படுவோம்.

**சிலப்பதிகார கால சமூகமும் பரிவர்த்தனையும்**

சங்க காலப் பாடங்கள் போலன்றி பணக்கார வணிக கோவலனுக்கு பாலியல் சுதந்திரமும் அவன் மனைவி கண்ணகிக்கு கற்பையும் போதிப்பதில் இருந்து சமூகம் முழுமையாக தந்தைவழி சமூகமாக மாறிவிட்டது என முடிவுக்கு வரலாம். பல நகர காண்டங்கள் என்பது அன்றைய கட்டமைப்பு நகரம், கிராமம் எனப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு கொண்டதாக இருந்திருக்கிறது என கருதும் முகாந்திரத்தைக் கொடுக்கிறது. திருடுதல் என்பது இவ்வாறான ஏற்றத்தாழ்வும் தனியுடைமையும் நிலைபெற்றுவிட்ட சமூகத்தில்தான் நிகழ முடியும்; சமத்துவம் நிலவும் சமூகத்தில் இந்த எண்ணத்துக்கே இடமில்லை.
ஆக தனியுடைமையும், நகரங்களுக்கு இடையில் பயணம் செய்து வணிகம் செய்யும் கோவலனின் செய்கையையும் கொண்டு சமூகங்களுக்கு இடையிலும், சமூகத்துக்குள்ளும் பரிவர்த்தனை வேர்விட்டு வளர்ந்து கொண்டிருந்ததாகக் கருதலாம். பொற்கொல்லன் கதாபாத்திரம், கண்ணகியின் தனிச்சிறப்பான சிலம்பு ஆகியவற்றைக்கொண்டு ஆடம்பரப் பொருட்களை நுகரும் வர்க்கமும், அதற்கேற்ற மேம்பட்ட உழைப்பின் வளர்ச்சியும் இருந்ததை அனுமானிக்கலாம். இதன் வளர்ச்சி மக்களை மேலும் சுரண்டுவதிலும், மற்றவரின் செல்வதை படையெடுத்துச் சென்று அபகரிப்பதுமாகவே இருக்கும். இப்போது ஆறாம் நூற்றாண்டு முதல் பாண்டிய, சோழ அரசுகள் எழுவதைப் பார்க்கிறோம். இப்படியான ஆதிக்க சுரண்டல் வேட்கை கொண்ட ஆளும் வர்க்கத்துக்கு சமத்துவமும், கொல்லாமையும் பேசும் பௌத்தமும், சமணமும் தடையாக இருக்குமே ஒழிய துணையாக இருக்க இயலாது. அசமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியம்தான் அவர்களுக்கு அணுக்கமாக இருந்திருக்க முடியும்.


**வெறும் கருத்தியலுக்கான போராட்டமா?**
இப்போது மக்களின் தெரிவு பௌத்த, சமணமாகவும், ஆளும் வர்க்கத்தின் தெரிவு பார்ப்பனியமாகவும் மாறுகிறது. வடக்கில் மௌரியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான பக்தி இலக்கியங்களைப் போல தமிழகத்திலும் நீதி, அறத்துக்கு பதிலாக நமது இலக்கியங்கள் இங்கே பக்திப் பாடல்களைப் பாடுகின்றன. அங்கே பக்தி காலத்தைத் தொடர்ந்து எழும் பார்ப்பனிய குப்த அரசைப்போல இங்கும் பார்ப்பனிய பாண்டிய, சோழ அரசுகள் எழுகின்றன. இந்த அரசுகள் எழும் இந்த பக்தி இலக்கியக் காலத்தில் சமூகத்துக்குள் மோதலும் பிளவும் உண்டாவதைப் பார்க்க முடிகிறது. அது பார்ப்பனியத்தை ஏற்க மறுக்கும் பௌத்த, சமண இலக்கியங்களை அழித்து, அதைப் பின்பற்றுபவர்களைக் கொன்று, சமூகத்தில் இருந்து விலக்கி வைத்து தீண்டாமையை உருவாக்குவதை நோக்கி நகர்கிறது.
இந்தப் போராட்டத்தை வெறும் கருத்தியலுக்கான போராட்டமாகப் பார்க்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. இதற்கு ஒரு பொருளாதார காரணம் இருந்திருக்க வேண்டும். மூவேந்தர்களுக்கு முந்தைய சங்க கால மக்கள் நிலத்தில் பொதுவாகப் பயிரிட்டு வரும் விளைச்சலை பகிர்ந்துண்டு வாழ்ந்தார்கள் என்றும், அதற்குப் பிறகு ஏற்பட்ட மூவேந்தர்களின் ஆட்சியின்போது இந்த நிலத்தைப் பறி கொடுத்தார்கள் என்றும், நிலத்தை இழந்த மக்கள் மீண்டும் பௌத்த சமணர்களாக ஒன்றுகூடி அதை மீட்டார்கள் என்றும் ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். இப்போது பெருகிய பொருளாதார வளர்ச்சியின் ஊடாக உருவாகும் ஆளும் வர்க்கம் இதைத் தனதாக்குவதை நோக்கியதாகவே இருக்கும். அப்படி நிலத்தைப் பிடுங்க முற்பட்டதையும் அதற்கு எதிரான போராட்டத்தையும் கல்வெட்டுகள் பதிவு செய்திருக்கின்றன. அதேபோல முந்தைய ஆட்சியில் தனக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தைப் பறி கொடுத்த பார்ப்பனர்கள் இந்த ஆட்சியில் அதைத் திரும்பப் பெறுவதையும் பதிவு செய்கின்றன.

**ஐரோப்பியர்களிடம் இருந்து நாம் வேறுபடும் இடம்!**
இப்படி ஆளும் வர்க்கத்திடம் நிலத்தை இழப்பது இங்கு மட்டும்தானா என்றால் நிச்சயம் இல்லை; ஐரோப்பிய சமூகத்திலும் நடந்திருக்கிறது. அப்படியென்றால் அவர்களில் இருந்து நாம் எங்கே வேறுபடுகிறோம்? அவர்களிடம் பரிவர்த்தனை வளர்ந்து, பணம் தோன்றி, கடன்பட்டு, அடைக்க முடியாமல் நிலத்தைப் பறி கொடுக்கிறார்கள். இங்கோ அதிகாரத்தின் மூலம் பறிக்கப்படுகிறது. அங்கே நிலப்பிரபுவிடம் நிலத்தை இழந்து அவனிடம் அந்த விவசாயி தனது உழைப்பை விற்றுக் கொள்ளும் தொழிலாளியாக மாறுகிறான். இங்கே நிலத்தை இழந்த விவசாயி, அரச அனுமதியுடன் அதே நிலத்தில் வேறுவழியின்றி உழைத்துப் பயிரிட்டு உண்டு வாழும் விலங்கிடப்பட்ட மறைமுக பண்ணையடிமை ஆகிறான்.
நாடு என்ற இந்த மாபெரும் பண்ணையின் ஒற்றை உரிமையாளனாக நிலத்தைப் பிடுங்கிய வல்லாட்சியாளன் மாறுகிறான். இந்தப் பண்ணையைப் பராமரிப்பதும் விரிவுபடுத்துவதும் ஆட்சியாகவும், நிர்வாகமாகவும் மாறுகிறது. இந்தப் படிநிலை கட்டமைப்பை ஏற்படுத்தி, மக்களை ஏற்க செய்யும் சித்தாந்தவாதிகளாகவும், நிர்வகிக்க தேவையான பிறப்பின் அடிப்படையிலான குலக்கல்வியை வழங்கும் குருக்களாகவும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இப்படி ஏற்படுத்தப்படும் பொருளாதார சாதிய சமூக கட்டமைப்பின் பலன்களை இவர்கள் அனைவரும் அனுபவிக்கிறார்கள். அங்கே நிலம் சாராத கைவினைக் கலைஞர்கள் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்று பொருளீட்டுகிறார்கள். விவசாயத்துடன் செயலூக்கம் பெற்ற தனிச்சிறப்பான உழைப்பைக் கோரும் தொழிற்துறையும் சேர்ந்து வளர்கிறது.
இங்கே இதுவரையிலும் இந்தத் தொழிலைச் செய்து வந்தவர்களுக்கே உரித்தான குலத்தொழிலாகவும் இதைச் செய்பவர்கள் குறிப்பிட்ட சாதியாகவும் மாற்றப்பட்டு ஆளும் வர்க்கத்துக்கும், விவசாய உற்பத்திக்கும் சேவகம் செய்யப் பணிக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய பொருளாதாரம் நிலத்தில் வேலை செய்யும் உழைப்பாளிகள், அந்த உழைப்பை உறிஞ்சும் நிலப்பிரபுக்கள், அந்த உபரி உருவாக்கும் தேவைக்கு, பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்துறை, இந்தப் பரிவர்த்தனையில் பங்கேற்று பலன்பெறும் வணிக வர்க்கம், இந்த சமூக கட்டமைப்பைப் பேணிக்காத்து விரிவாக்கும் நிலப்பிரபுக்களின் தலைமையான அரசன், அமைச்சர்கள், படை, நிர்வாகக் கட்டமைப்பு, இதன் இருப்புக்கும் இறையாண்மைக்கும் இலக்கணமாக எல்லோர் மீதான வரி விதிப்பு என்பதான நிலப்பிரபுத்துவமாக (Feudalism) இருக்கிறது.

**பரிவர்த்தனையற்ற பார்ப்பனிய சமூகப் பொருளாதார முறை **
சிலப்பதிகார காலத்திலோ, அதற்கு முன்போ நம்மிடம் தோன்றிய கிராமம், நகரம், வணிகம், தனியுடைமை ஆகியவை மேன்மேலும் வளர்ந்து பரிவர்த்தனைகள் பெருகி மேற்சொன்ன வர்க்கத்தின் அடிப்படையிலான பல அடுக்குகளைக் கொண்ட பரவலான பொருளாதாரக் கட்டமைப்பை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். மாறாக, இந்த விவசாயப் பொருளாதாரத்தின் அடிப்படையான நிலத்தில் உடைமை இல்லாமல் ஆக்கப்படுகிறது. தமது உடைமையின் மீதான உரிமையை இழந்தவர்கள் இதில் பயனாளிகளாகவும், சார்ந்து வாழ்பவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள். இந்த உடைமைக்கான ஜனநாயக மறுப்பும், ஆட்சியாளனிடம் குவியும் பொருளாதார முற்றுருமையும் அவனை எல்லையில்லா அதிகாரம் கொண்ட யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லாத கடவுளுக்கு ஒப்பானவனாக மாற்றுகிறது. நிலப்பிரபுத்துவத்துக்குரிய எந்த பண்பும் அற்ற இந்த பொருளாதார முறையை ஆசிய பாணி சொத்துடைமை (Asiatic mode of production) எனவும் இந்த கட்டமைப்பின் தலைவனான மன்னனை வல்லாட்சியாளன் (Despot) எனவும் வகைப்படுத்துகிறார் மார்க்ஸ்.
அவரிடம் இருந்து மாறுபடும் இந்திய கம்யூனிஸ்டுகளோ, இல்லையில்லை… இந்தியாவும் ஐரோப்பிய சமூகத்தைப் போலவேதான் வளர்ச்சி அடைந்தது; இங்கு நிலவி வந்ததும் நிலப்பிரபுத்துவம்தான் என்று இன்றுவரை கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கில்லாத சாதிய சமூகம் இங்கு மட்டும் எப்படி உருவாகி இன்றுவரை நிலைத்து நிற்கிறது; இதை நீடித்து நிலைத்திருக்க செய்யும் பொருளாதாரக் காரணி எது என்றெல்லாம் இவர்கள் கேள்வி எழுப்புவதே இல்லை. சமூக உருவாக்கமும் அதன் மாற்றமும் வெறும் கலாச்சாரம் சார்ந்ததா? இல்லை, பொருளாதாரம் சார்ந்ததா? இவர்கள் சொல்வதைப்போல இங்கு நிலவி வந்தது நிலப்பிரபுத்துவம் என்றே கொண்டாலும் அது தனி மனிதர்களிடம் ஏற்படுத்தும் சொத்துடைமை குடும்ப அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். பெற்றோர்களால் நிர்ணயிக்கப்படும் இணை மண முறை (Pairing Marriage) உடைந்து சொத்துடைமையின் அடிப்படையில் தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒருதார மண முறையாக (Monogamy) வளர்ந்திருக்க வேண்டும்.

**பொருளாதார மாற்றத்துக்கும் குடும்பத்துக்குமான நெருங்கிய தொடர்பு!**
செல்வ செழிப்புமிக்க கோவலன் அந்தச் சொத்துடைமையின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட பலதாரமணம் (Polygamy) செய்துகொள்வது மட்டுமல்ல; தனது இனக்குழுவுக்கு வெளியில் தனக்கான துணையை தானே தேர்ந்தெடுக்கவும் செய்கிறான். அதன் பின்னர் வரும் சோழர்களும் வகைமையான இனக்குழுவுக்குள் மணம் செய்துகொள்ளும் முறையைப் பின்பற்றாமல் சொத்துடைமையின் அடிப்படையில் மற்ற ஆளும் வர்க்கத்துடன் மண உறவை ஏற்படுத்திக் கொண்டு தனது இனக்குழு அடையாளத்தை உதறுகிறார்கள். அதனால்தான் இன்றுவரையிலும் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆளும் வர்க்கத்தின் செயல்பாடு ஐரோப்பாவை ஒத்தத் தன்மையைக் கொண்டிருந்தாலும் அங்கே காலப்போக்கில் இந்த மண முறைக்கு மற்றவர்களும் மாறுகிறார்கள். இங்கே இது ஆளும் வர்க்கத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதாக மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு தடுக்கப்பட்டதாகவும் மாறி சாதி நிலைப்படுத்தப்படுகிறது.
எப்படித் தடுக்கப்பட்டது என்பதற்கு ஆரியமாலாவைக் காதலித்த காத்தவராயனை கழுவேற்றியது முதல் இன்று ஆணவப் படுகொலை செய்யப்படும் இளவரசன்கள் வரை நீளும் நீண்ட கொலைப் பாரம்பரியத்தை சொல்லலாம் என்றாலும் இப்படியான சாதிய பொருளாதார சமூக கட்டமைப்பை ஒருநாளில் எந்த எதிர்ப்பும் இன்றி உருவாக்கிட முடியாது. அதேபோல ஒட்டுமொத்த சமூகமும் தனது உடைமையை வல்லாட்சியாளனிடம் எதிர்ப்பின்றி இழக்க முன்வரும் சாத்தியமுமில்லை. ஒரு போராட்டத்தின் ஊடாக படிப்படியாக ஒவ்வொருவருக்கும் இந்தக் கட்டமைப்பில் சலுகைகள் வழங்கி சமூக ஒற்றுமையை உடைத்து செயல்படுத்துவதன் மூலமே சாத்தியமானது. அப்படியான போராட்டமாக பக்தி இலக்கிய கால பார்ப்பனிய, பௌத்த-சமண மோதலைக் காணலாம். இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்போது அவரவர் முக்கியத்துவத்தைப் பொறுத்து சாதிய படிநிலையில் சலுகை கொடுத்து மேலிருந்து கீழாக அடுக்கப்படுவதும் இங்கே கவனிக்கத்தக்கது. சோழர்கள் காலத்தின் உருவாகும் இடது-வலது பிரிவு, வணிகர்கள், வேளாளர்கள் சாதிய அடுக்கில் உயர்வான இடத்தைப் பெறுவது, தச்சர்கள், பொற்கொல்லர்கள் பூணூல் போடும் உரிமை பெறுவது போன்றவற்றை உதாரணமாக இங்கே எடுத்துக்கொள்ளலாம்.
இப்படி இவர்களின் இணக்கத்தைப் பெற்றுக்கொண்டு இணங்காதவர்களைக் கொடுமையான சமூக விலக்க தீண்டாமை தண்டனை கொடுத்து ஏற்றத்தாழ்வான சாதிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. எனில் இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பு எப்போது உடைந்து சமூகத்தில் பரிவர்த்தனை உருவானது?

**நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.**

**[பகுதி 1](https://minnambalam.com/politics/2022/02/05/5/US-Afganisthan-issues-and-dollar-shanges-effect-in-India)** / **[பகுதி 2](https://minnambalam.com/politics/2022/02/06/1/US-Afganisthan-issues-and-dollar-shanges-effect-in-India)** / **[பகுதி 3](https://minnambalam.com/politics/2022/02/07/2/US-Afganisthan-issues-and-dollar-shanges-effect-in-India)**

**கட்டுரையாளர் குறிப்பு**

**பாஸ்கர் செல்வராஜ்**, தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *