மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 பிப் 2022

பணத்தைப் பற்றி கவலை வேண்டாம்: நேரு சொன்ன தைரியம்!

பணத்தைப் பற்றி கவலை வேண்டாம்: நேரு சொன்ன தைரியம்!

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 6ஆம் தேதி கோவையைத் தேர்ந்தெடுத்தார். அடுத்த பிரச்சார நிகழ்ச்சியாக 7ஆம் தேதி சேலத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு மாவட்டங்களிலும் திமுக கடுமையாகத் தோல்வியுற்ற நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தனது உறுதியை வெளிப்படுத்தும் விதமாகவே முதல் பிரச்சார நிகழ்ச்சிகளை கோவை, சேலத்தில் அமைத்திருந்தார் ஸ்டாலின்.

இதற்கிடையே தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சிக்கு முன்பாக சேலம் மாநகராட்சி திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை நடத்தினார் மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் கே. என். நேரு.

சேலம் மாநகராட்சி உட்பட்ட சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோருடன் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான திமுக நிர்வாகிகள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.என்.நேரு, "நான் சேலம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதல் மக்கள் பணியிலும் கழகப் பணியிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன். உள்ளாட்சியை சிறந்த முறையில் நிர்வகிக்கவும் மக்கள் பணியைப் பாரபட்சமின்றி செய்துவரும் நமது முதல்வரின் கரங்களை வலுப்படுத்தவும் நீங்கள் எல்லாவிதமான மனமாச்சரியங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த மாவட்டத்தில் மீண்டும் சூரியன் உதிக்கும் வகையில் பாடுபட வேண்டும்.

திருச்சியை போலவே சேலத்திலும் எனது பணி வேகத்தோடு தொடரும். என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். சேலம் மாநகராட்சி திமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். மொத்தமுள்ள 60 வார்டுகளில் மட்டுமல்ல, இந்த மாவட்டத்திலுள்ள 699 பதவிகளையும் திமுகதான் கைப்பற்ற வேண்டும்.

நமது வேட்பாளர்கள் அனைவரும் மக்களைச் சந்திக்கும்போது உள்ளாட்சி தொடர்பான பிரச்சினைகள், கோரிக்கைகள், புகார்கள் ஆகியவற்றின் மீது பதவி ஏற்றுக்கொண்ட இரண்டு வருடத்திற்குள் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை கொடுங்கள்.

நமது ஆட்சி நடப்பதால் இரண்டு வருடங்களுக்குள்ளேயே மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கலாம். நாம் இங்கே வெற்றி பெற்றால்தான் தளபதியிடம் தலை நிமிர்ந்து நிற்க முடியும். ஏற்கனவே சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை நமது முதல்வர் வழங்கியிருக்கிறார். நாம் வெற்றி பெற்ற பிறகு மேலும் பல திட்டங்களை நமக்கு வழங்குவார்.

அதனால் எந்தவிதமான குழப்பத்துக்கும் இடம் கொடுக்காமல் வெற்றி என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுங்கள்" என்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசினார் நேரு.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு முன்னதாக முக்கியமான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய கே.என்.நேரு, சேலம் மாநகராட்சியில் எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்து வருகிறார் என்பதை கேட்டறிந்து கொண்டார். ஒவ்வொரு வார்டிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிமுக எவ்வளவு செலவு செய்கிறது என்பதையும் கேட்டறிந்தார்.

அப்போது, "பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாம் வந்து சேரும். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜக எல்லாம் தனித்தனியாக நிற்கின்றன. எனவே எதிர்க்கட்சிகளின் ஓட்டு சிதறும். இந்த நிலையில் நாம் கட்சிக்குள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தான் திமுகவின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய முடியும். எனவே கோஷ்டி மனப்பான்மையை ஒழித்துவிட்டு ஒழுங்காக வேலை செய்யுங்கள். அப்போதுதான் நான் தளபதியின் முகத்தில் முழிக்க முடியும்.

போட்டி வேட்பாளர்கள் நம் கட்சிக்குள்ளேயே பலர் இருப்பதாக அறிகிறேன். இன்று மாலை 3 மணிக்குள் அவர்கள் வாபஸ் பெற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர்கள் தான் எடுக்க வேண்டும்" என்றும் எச்சரித்திருந்தார் நேரு.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக வேட்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, "பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் தைரியமாக இருங்கனு சொல்றாரு. ஆனா, எப்ப பணம் வரும் தான் தெரியல. ஆளுங்கட்சினு தான் பேரு. இந்த எட்டு மாசத்துல கட்சிக்காரர்களுக்கு பெருசா எதுவும் கிடைக்கல. ஒரு நம்பிக்கையில்தான் தேர்தலில் போட்டியிடுறோம். எடப்பாடி அங்கே அள்ளி கொடுத்துக்கிட்டிருக்காரு" என்கிறார்கள் முணுமுணுப்பு குரலில்.

நேற்று வாபஸ் வாங்க கடைசி நாள் என்பதால் திமுக அதிருப்தி வேட்பாளர்களில் சிலர் மட்டுமே வாபஸ் வாங்கி இருக்கிறார்கள். உண்மையிலேயே சேலம் நேருவுக்கு சவாலாகத்தான் இருக்கிறது.

வேந்தன்

சேலம் மாநகராட்சி: எடப்பாடி மாஸ்டர் பிளான்!

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 8 பிப் 2022