மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 பிப் 2022

ஆளுநர் எப்படி நீட் தேர்வுக்கு எதிராகச் செயல்படுவார்?: சீமான்

ஆளுநர் எப்படி நீட் தேர்வுக்கு எதிராகச் செயல்படுவார்?: சீமான்

தமிழக ஆளுநர் பாஜகவால் நியமிக்கப்பட்டவர். அவர் எப்படி அவர்களுக்கு எதிராகச் செயல்படுவார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று (பிப்ரவரி 6) மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்றது.

இதையடுத்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. கொரோனா தொற்று காரணமாக வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழலால், வலிமைமிக்க ஊடகங்கள் மூலம் மக்களைச் சந்திக்கிறேன். அதற்காகத்தான் இந்தச் சந்திப்பு. எங்கள் வேட்பாளர்கள் யாருக்கும் அரசியல் பின்புலம் கிடையாது. அனைவரும் எளிய பின்புலத்திலிருந்து வந்தவர்கள். மக்களிடமிருந்து மக்களுக்காக சேவை செய்ய விரும்பும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற உதவுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் கட்சிகள் தனித்து நிற்கவே விரும்புவார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவருக்கான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்பதால் பதவிகளுக்குப் பேரம்தான் நடைபெறும். அதனால், அடுத்தவர்களுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்று தனித்தே போட்டியிடுவார்கள். ஆனால், 2024 ஆண்டிலும், 2026 ஆண்டிலும் இவர்கள் தனித்துப் போட்டியிடுவார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால், நாங்கள் எந்த தேர்தலானாலும் தனித்துத்தான் நிற்போம். அது எங்கள் கோட்பாடு” என்று கூறினார்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக ஆளும்கட்சி ஆனவுடன் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்கின்றனர். திமுக சின்னத்தில் நின்ற மதிமுக எப்படி தனிக்கட்சி ஆகும். ஆனால், அவர்களை அழைத்திருக்கிறார்கள். திமுக என்னை வெறுக்கிறது, நானும் திமுகவை வெறுப்பேன். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது ஒரு பொருட்டே இல்லை. ஆனால், எங்கள் கட்சியில் இருந்து திமுகவுக்குச் சென்றால் மட்டும் பிரமாண்டமாக அழைப்பு வைப்பார்கள்” என்றார்.

ஆளுநர் நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியது குறித்துப் பேசிய அவர், “தமிழக ஆளுநர் பாஜகவால் நியமிக்கப்பட்டவர். ஆர்எஸ்எஸ் உறுப்பினர். அவர்கள் நீட்டை ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி அவர் நீட் தேர்வுக்கு எதிராகச் செயல்படுவார்? செயல்பட மாட்டார். அதுதான் அவர்களது கோட்பாடு. ஆளுநர் சட்டப்படி செயல்படுகிறார் என்று கூறும் அதிமுக, பாஜகவுடன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், மத்தியில் பாஜக அதிகாரமிக்கதாக இருப்பதால் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதால் பாஜகவிடம் நயந்து பேசுகிறார்கள்.

மதுக்கடைகளை மூடக்கோரி பொதுநல வழக்கு தொடர்கிறோம். இதில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அரசே வழக்கு தொடுக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிட்டு, தேர்வை எழுத வேண்டும் என்று கூறுகிறது. மது குடிப்பதில் தலையிடாது, படிப்பதில் மட்டும் அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிடுகிறது. இப்படி இருக்கும் நாட்டில் என்ன பேச முடியும்? இந்த நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கொடுமை? விரும்பிய படிப்பைப் படிக்க முடியவில்லை, விரும்பிய உடையை அணிய முடியவில்லை. விரும்பிய உணவை உண்ண முடியவில்லை. இந்த நாட்டில் பிறந்ததைத் தவிர, வேறு என்ன பாவம் செய்தோம் என்கிற நிலையில் உள்ளோம். நீட் தேர்வால் என்ன பாதிப்பு இருக்கிறதோ, அதை இல்லை என்று கூறுவதுதான் பாஜக கொள்கை. சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாத கூட்டத்திடம் நாடு சிக்கிக்கொண்டு விட்டது. ஏழரை ஆண்டுகளில் அதானியை இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆக்கியதே பாஜகவின் சாதனை.

உலகத்திலேயே அதிகமாக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. ஆண்டு ஒன்றுக்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாடு புனிதமானது என்று சொல்லிவிட்டு ஏன் அதை வெட்டி அனுப்ப வேண்டும்? நெய்யை எரிப்பதும், பாலை கொட்டுவதும், மாட்டு மூத்திரத்தை குடிப்பதும் இந்தியாவில் மட்டுமே நடக்கும்” என்று கூறினார்.

ஆளும்கட்சி குறித்துப் பேசிய அவர், “ஒரு வருட ஆட்சி முடிய போகிறது. செய்தி அரசியலைத் தாண்டி, செயல் அரசியல், தேவை அரசியல் இருந்திருக்கிறதா? தேர்தலின்போது அனைத்து மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று பெட்டியில் போட்டு பூட்டினார்கள். அதில் ஒருத்தர் கூடவா டாஸ்மாக்கை மூட கோரிக்கை வைக்கவில்லை. பொங்கலுக்கு எடப்பாடி மக்களுக்கு 2,500 கொடுத்தார்கள். அது பத்தாது இன்னுமொரு 2,500 கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்து பொங்கலுக்கு 1,000 ரூபாய் கூட கொடுக்கவில்லை. சரி விடுங்கள், இங்கே யாரும் சர்க்கரை தயார் செய்யவில்லையா… ஏன் குஜராத்தில் இருந்து சர்க்கரை வாங்க வேண்டும்? அதுவும் நல்ல சர்க்கரை கூட கிடையாது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது நன்றாகப் பேசுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், அதற்கு எதிர்மாறாக இயங்குகிறார்கள்” என்று கூறினார்.

-வினிதா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

திங்கள் 7 பிப் 2022