மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 பிப் 2022

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் ஆன்லைன் பிரச்சாரம் ஏன்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் ஆன்லைன் பிரச்சாரம் ஏன்?

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சி நிரல் பிடிஎஃப் ஆக முதலில் வந்தது.

அதன் பிறகு வாட்ஸ்அப் டைப் செய்ய தொடங்கியது.

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள் யார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சார நிகழ்ச்சிநிரல்களை அறிவிக்க தொடங்கிவிட்டனர்.

இன்று பிப்ரவரி 6ஆம் தேதி முதல் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான், அண்ணாமலை ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்குவதாக இருந்த பிரச்சாரத்தை நீட் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் காரணமாக மாற்றம் செய்துள்ளார்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை ஆன்லைன் வழியாகவே மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கட்சி நிகழ்ச்சிகளை ஆன்லைனில் நடத்திய அனுபவம் மிக்க திமுகவினர் பிரச்சாரத்தையும் ஆன்லைனில் இப்போது நடத்துகிறார்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்யும் நிலையில்... எப்போதுமே மக்களை சந்திப்பதில் ஆர்வம் மிக்க முதல்வர் ஏன் ஆன்லைன் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் என்று கேள்வி திமுகவினர் இடையிலேயே எழுந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‌ஆனால் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தொற்று புள்ளிவிவரம் தமிழகத்தில் குறைந்து கொண்டே வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஏன் ஆன்லைன் பிரச்சாரத்தை தேர்ந்தெடுத்தார் என்றும் திமுகவின் தொண்டர்கள் கேட்கிறார்கள்.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, 'முதலில் ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகத்தான் இருந்தது. கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் பிரச்சாரத்திற்கான மேடை அமைக்கப்பட்டது. வேட்பாளர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி மேடைக்கு அருகே திறந்த ஜீப்பில் நின்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதாக நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென முதல்வரின் நேரடி பிரச்சாரம் கைவிடப்பட்டு ஆன்லைன் பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும்... பரவல் என்பது இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் முதல்வர் வருகையின்போது என்னதான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவரே உத்தரவிட்டாலும்... மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்களும் அதிகமான கூட்டத்தை கூட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள். இதனால் முதல்வரின் கூட்டத்திலிருந்து தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டலாம்.

இதைத் தவிர்ப்பதற்காக ஆன்லைன் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளார் முதல்வர்.

இது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம்... முதல்வரின் நேரடி பிரச்சாரம் என்றால் அதற்கான ஏற்பாடுகள் முதல்வரின் வருகைக்காக காத்திருத்தல் உள்ளிட்ட பொருள் விரயமும் நேர விரயமும் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்படும். அந்த நேரத்தை தேர்தல் பணிகளில் செலவிடலாம் என்று அறிவுறுத்திதான் ஆன்லைன் பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார் முதல்வர். இருந்த போதிலும் ஆன்லைன் பிரச்சாரத்தையும் ஆங்காங்கே ஒளிபரப்பு செய்யும் விதமாக திரைகள் அமைத்து அதற்குமுன் கூட்டத்தை கூட்டும் வேலைகளில் மாவட்ட செயலாளர்கள் இறங்கிவிட்டனர்' என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

திமுகவினரின் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளோ, 'பல மாவட்டங்களில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வரும்போது அவருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்களா என்ற கேள்வி எங்களுக்கு இருந்தது. இப்போது ஸ்டாலின் ஆன்லைன் பிரச்சாரத்தை மேற்கொள்வதால் அந்த கேள்வியே இல்லாமல் போய்விட்டது' என்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் முதற்கட்ட காணொளி பிரச்சார பட்டியலில் சென்னை, திருச்சி போன்ற இடங்கள் இல்லை. அடுத்த கட்ட பிரச்சாரத்திலாவது நேரடியாக ஸ்டாலின் வருவாரா என்று எதிர்பார்க்கிறார்கள் திமுகவினர்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

ஞாயிறு 6 பிப் 2022