மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 பிப் 2022

படிப்புக்கும் தொலைநோக்கு பார்வைக்கும் தொடர்பு உண்டா? ஒரு தந்தையின் வரலாறு!

படிப்புக்கும் தொலைநோக்கு பார்வைக்கும் தொடர்பு உண்டா? ஒரு தந்தையின் வரலாறு!

நா.மணி

21/01/22 அன்று இயற்கை எய்திய அவருக்கு வயது 85க்கு குறையாமல் இருக்க வேண்டும். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று உழைத்துக்  கொண்டே இருந்தவர். தனது மகன்கள் வளர்ந்து  படித்து, வேலை, கை நிறைய சம்பளம் என்று வளர்ச்சி அடைந்து விட்டனர். அந்த  நிலையிலும் உழைத்துக் கொண்டே இருந்தார். "இனி எதற்காக நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும்" என்று தடுத்தும் கூட  உழைத்துக்  கொண்டே இருந்தவர். "தன்னால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை,தனக்கு வழங்கும் ஊதியத்திற்கு நீதி வழங்க முடியாது" என்று அவர் உணர்ந்த தருணத்தில், தான் வேலைக்கு செல்வதை நிறுத்தினார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆடு மேய்க்கும் சிறுவன். கொஞ்சம் வளர்ந்தும் விவசாயக் கூலி. அடுத்து  வங்கப் பஞ்சம். அதனைத் தாக்குப் பிடிக்க சிக்மங்களூர் காபி எஸ்டேட்க்கு குடிப் பெயர்ச்சி. மீண்டும் சொந்த கிராமத்தில் தஞ்சம். திருமணம். குழந்தைகள். வேலை வேலை வேலை… ஒரு நான்கைந்து தோட்டங்களில் தான் மாறிமாறி வேலை செய்தார். அருகருகே அவை இருந்தன. அங்குள்ள முக்கியமான வேலைகளை வேறு யாரும் செய்யக் கூடாது. இவர் வந்து தான் செய்ய வேண்டும் என்று காத்திருந்தனர். அதற்கு தக்கவாறு தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொண்டனர்.

இப்படி உழைத்து ஓய்ந்திருந்த  ஒரு நாளில், "நீங்க என்னென்ன வேலை செய்தீர்கள்? அந்தக் காலத்தில்   சம்பளம் கொடுத்தார்கள்? அது பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?" என்றேன்.

"என்னத்த  சொல்றதுப்பா! நரகலைத் தவிர எல்லாவற்றையும் தின்று பிழைத்த பிழைப்பு  அது" என்றார். அவருக்கு கையெழுத்து கூட  போடத் தெரியாது. பிறந்தது முதல் உழைத்துக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை.  அவரது நற்குணங்கள் என்னை பிரமிக்க வைக்கும். அவரது தொலை நோக்கு பார்வை என்னை மெய்சிலிர்க்க வைக்கும். அந்த ஆழ்கடல் அமைதியில்  குடிகொண்டுள்ள இதயத்தில் இருந்து விழுந்து வார்த்தைகளால் ஆடிப் போனேன்.

மானாவாரி சாகுபடியை நம்பி வாழும் கிராமம் தான் அது. காசையே கண்ணில் பார்க்க முடியாத காலம். பெரும் பகுதி உழைப்பின் பலன் தானியமாக கிடைத்து வந்த காலம்.  ஊரின் எதிரிலேயே  பள்ளிக் கூடம். எட்டாம் வகுப்பு வரை படிக்கலாம்.  'அது யாருக்கானதோ' என்ற எண்ணத்தில் திரும்பிக் கூட பார்க்காத மக்கள் அவ்வூர் மக்கள்.  அந்த ஊரில் பிறந்து வாழ்ந்து வந்த அவர்,  தனது மூன்று மகன்களையும் எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட வேண்டும் என்று தீர்மானகரமாக இருந்தார். தனது உழைப்பிற்காகவே எல்லோராலும் அறியப்பட்டாலும், படிநிலை சாதி கட்டமைப்பில் தனக்கும் தன் உழைப்புக்கும் என்ன மரியாதை என்பதை உணர்ந்த நிலையிலே அந்த தீர்மானத்தை மேற்கொண்டு இருக்கலாம்.

தனது மூத்த மகன், ஒரு ஆசிரியரின் பிரம்படிக்கு பயந்து பள்ளியை விட்டு இடை விலகியதும், மனிதர் ஆடிப் போனார். தன்னைப் போலவே தனது மகன் ஆடு மேய்க்கும் இழிநிலை கொண்டு வெதும்பினார். அதை தன் சக்திக்கு உட்பட்டு எப்படி மாற்றுவது என்று அவருக்கு தெரியவில்லை. ஓராண்டு காலம் பொறுத்துக் கொண்ட பின்னர், விவசாயக் கூலியாக இருந்த அவர், குத்தகை விவசாயியாக மாறினார். தனது மகனையும் உறுதுணையாக வைத்துக் கொண்டார்.  தனது மகனையும் மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு ஆறாண்டு காலம், இரவும் பகலும் உழைத்தார். குத்தகை விவசாயத்தால்  கடன் பளு ஏறியதே கண்ட பலன். குத்தகை விவசாயத்தை தொடர முடியவில்லை. 

தனது மகனையும் விவசாய கூலியாக பார்க்க விரும்பவில்லை. குறைந்த பட்சம் தொழிலையாவது மாற்றலாம் என திட்டமிட்டு, சொந்தமாக ஒரு கைத்தறி வாங்கிக் கொடுத்து அதில் தனது மூத்த மகன் தொடரும்படி பார்த்துக் கொண்டார்.

பள்ளி இடை நின்ற மகன்,  அரசு ஊழியராக  பணியில்  அமர்ந்த அந்தத் தருணத்தில் அவருக்கு ஏற்பட்ட  மகிழ்ச்சிக்கு அளவில்லை.  அதையும் வெளிகாட்டிக் கொள்ளாத அதே ஆழ் கடல் அமைதி முகத்தில்.

தனது இரண்டாவது மகனை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என்ற அவரது இரண்டாவது வைராக்கியம் உயிர் பெற்றது. ஆனால் அந்த மகனே விரும்பி ஆறாம் வகுப்பில் இடைவிலகும் சூழல் ஒன்று உருவானது. கிராமத்துக் குழந்தைகளின் எளிய ஆசைகள் அந்த முடிவை எடுக்க வைத்தது. பவானி ஆற்றங்கரையில் உள்ள கரும்புத் தோட்டங்கள். கரும்பு ஆலைகள். அங்கு சர்க்கரை எடுக்கும் கதைகள். ஆற்றில் குளிப்பது பற்றிய மகிழ்ச்சியான செய்திகள் அவை  தந்த மனமாற்றம். அந்தப் பகுதியில் நான்கு மாதங்கள் தங்கியிருக்க கிடைக்கும் வாய்ப்பு.  நாற்பது  அடி ஆழத்தில்,  குடி தண்ணீர்   கிணற்றில் மட்டுமே நீரை எட்டிப் பார்த்து ரசிக்கும் அந்த சிறுவனுக்கு, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு,  மற்றொரு குழந்தையை பார்த்துக் கொள்ள செல்வதோ! பின்னர் காலம் முழுவதும் விவசாய கூலியாக அலைந்து திரிய வேண்டும் என்பதோ பெரிதாகத் தெரியவில்லை. 

கரும்புத் தோட்டங்கள், கரும்பாலை, ஆற்றங்கரை ஆகியவற்றை பார்க்கும் ஆவல் மட்டுமே கண் முன் நின்றது அவனுக்கு.  ஆறாம் வகுப்பில் பள்ளி இடைநிற்க தயாராகி விட்டான்.  "நீங்கள் தானே எட்டாம் வகுப்போடு நிறுத்தப் போகிறேன் என்று சொன்னீர்கள்? ஆறாம் வகுப்பு என்ன? எட்டாம் வகுப்பு என்ன எல்லாம் ஒன்று தானே!" என்று விவாதம் செய்து பார்த்தான் தந்தையிடம்.   "படி, பிறகு பார்க்கலாம்"  என்ற அவரது சொற்களில், ஒரு வைராக்கியம், தொலைநோக்கு பார்வை ஒளிந்து கொண்டு இருக்கிறது என்று அப்போது அந்த இரண்டாவது மகனான எனக்குத் தெரியாது.

கறாராக பேசி,  இடை நிற்றலை தடுத்து பள்ளியில் தொடர வழிவகுத்தார்.

அந்த  கிராமத்தில்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவன் அவரது மகன் தான். தந்தை மகன் இருவருக்கும்  என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?  எதைப் படித்தால் என்ன வேலை கிடைக்கும்?  எதிர்காலம் எப்படி இருக்கும்?  எது பற்றியும்  தெளிவான பார்வை இல்லை. இரவு வேலைக் காட்டிலிருந்து திரும்பிய தந்தை, "என்னப்பா படிக்கப் போற?" இது தந்தையின் கேள்வி.  "ஐடிஐ படித்தால் மெக்கானிக் வேலைக்கு போலாம். உடனடியாக கவர்மெண்ட்  வேலை கூட  கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தொடர்ந்து படித்தால் பின்னர் ஏதேனும் எழுதற வேலைக்கு போகலாம்"

”ஏப்பா மெக்கானிக் வேலைங்கறது   நம்ம செய்ற கூலி வேலை மாதிரிதானேப்பா! என்ன, நாம சட்டை இல்லாம காட்ல வேலை செய்யறோம். அவங்க காக்கி சடைய போட்டு மில்லுல வேலை செய்யறாங்க. அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பா" என்று ஆற்றுப்படுத்தினார். 

இரண்டு ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடிந்தது. நூற்றுக்கு பத்து பேர் விகிதத்தில் தான் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அந்தப் பள்ளியில். 

அப்பாவை சந்திப்பதோ உரையாடுவதோ இரவு எட்டு மணிக்கு மேல் தான் சாத்தியம். தான் வேலை செய்யும் தோட்டத்தில் இருந்து அப்போது தான் வந்து சேருவார். தனது மகனின் வெற்றி கண்டு மனதில் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனாலும் அதே அமைதி.  புன்னகை. "அடுத்து என்னப்பா படிக்கப் போற?"  தனது  மகனின் கனவுகள் மிக மிக எளிமையானவை. ஆனால் அந்தத் தந்தையின் கனவு விவரிக்கத் தெரியாத பெருங்கனவு. அப்போது அது மகனுக்கு தெரியவில்லை. "12 போதும்ப்பா. கண்டக்டர் லைசென்ஸ் எடுத்தால் உடனடியாக வேலை என்று எல்லோரும் சொல்கிறாங்கப்பா"

"ராத்திரி பகல்னு பாக்காம, கண்ணு முழிச்சு, படில தொங்கிக்கொண்டு, விசில் அடிச்சுட்டு... என்னப்பா வேலை அது?.  மேலே படிப்பா".

மேல என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?  இருவருக்கும் தெரியாது. சக மாணவர்கள் வழியாக விசாரித்து, தான் படித்த படிப்புக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து, விண்ணப்பம் செய்தாயிற்று.   அரசு கல்லூரி  மாணவர் விடுதிக்கு நேர் எதிரில் ஒரு கல்லூரியும், அதிலிருந்து  ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கல்லூரிக்கும் விண்ணப்பம் செய்தனர்.  ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கல்லூரியில்  முதலில்  இடம் கிடைத்தது. அந்நகரில் முதல் கல்லூரியும் புகழ் பெற்ற கல்லூரியும் அது தான். "அப்பா! முதல் தரமான கல்லூரியில் இடம் கிடைச்சிருக்குப்பா".  அவரது முகத்தில்  அதே புன்னகை, அதே அமைதி.

"தினமும்  ஏழு கிலோமீட்டர் தூரம் டவுனுக்குள்ளேயே போய் வரனும். டவுனுக்குள்ள சைக்கிள் ஓட்டறது   ஒரு நாளப் போல இருக்காது. ரெண்டு பஸ் புடிச்சு தினமும் போய் வரும் அளவுக்கு நம்மிடம் வசதியில்லை.  அதுவும் இல்லாம, பெரிய படிப்பு படிக்கப் போற. தினமும் ரெண்டு மூணு மணி நேரம் போக்குவரத்தில் ஏப்பா செலவழிக்கனும்? நெறைய நேரம் படிக்க செலவு செய்யப்பா.  எப்படியாவது ஹாஸ்டலுக்கு எதித்த மாதிரி இருக்ருற காலேஜில்  சேர்ந்துருப்பா" என்றார்.

அரசு மாணவர் விடுதிக்கு நேர் எதிர் திசையில் உள்ள கல்லூரியில் இடம் கிடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆனால் அந்தக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றதாலேயே அதே கல்லூரியில் முதுகலைப் பட்டம் படிக்க நேர்ந்தது. அப்போது மாணவர் தலைவராக மதிப்பெண் அடிப்படையில் உயர்ந்து நின்றதால்,  கல்லூரி தாளாளருக்கு மிகவும் பிடித்துப் போனது. இத்தனைக்கும் அவரது காலத்தில் அவர்  அங்கு ஜனநாயக வழியில் நடத்தாத போராட்டங்கள் இல்லை.

இன்று அதே கல்லூரியில் முப்பது ஆண்டுகள் பணி முடித்து பேராசிரியர் மற்றும் தலைவராக தொடர்கிறார் அந்த இரண்டாவது மகன்.

தான் சார்ந்த பாடம் மட்டுமல்லாமல் கல்வி, அறிவியல் பரப்புதல், சமூக மேம்பாடு என்று தனது கற்றல் கற்பித்தல் நேரம் போக தனது செயல்பாடுகளை விஸ்தரித்தும் உள்ளார்.  அவர் எழுதிய புத்தகங்கள், நாளிதழில் கட்டுரைகள், படத்துடன் வரும் செய்திகள், காணொளிகள் எப்போதேனும் அவருக்கு பார்க்க கிடைக்கும் அந்த தந்தைக்கு. அப்போதும் பழைய அதே அமைதியும் புன்னகையும்.

     

  அந்த கிராமத்தில் தந்தையின் வயதை ஒத்த அனைவரும் தங்கள் பிள்ளைகளை தங்களைப் போலவே வளர்த்து எடுத்தார்கள். கால் முளைத்ததும் ஆடு மேய்க்க கொண்டு போய் சேர்த்து விட்டார்கள்.   படிப்பறிவு இல்லை என்றாலும், அந்த தந்தையோ தன் சமகாலத்தை தனது சக்திக்கும் மீறி தொலை நோக்கில் பார்த்தார். உழைப்பின் களைப்பு, வேதனை, அவமானங்கள், என்னதான் உழைத்தாலும் குறைந்த பட்ச தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற நிராசை. இவை எல்லாவற்றுக்கும் அருமருந்தாக உழைப்பாளி மக்களிடம்  இயல்பாக அமைந்துவிடும்  குடிபழக்கமே, பின்னர் குடி நோயாக மாறுகிறது.

ஆனால் இந்த தந்தையோ அம்மதுவை விஷம் எனக் கருதியது தான், அவர் விரும்பிய முன்னேற்றத்தை அவர் காண பெரும் உதவியாக இருந்தது.

65 ஆண்டுகள் நிரம்பிய அத்தந்தையின் மூத்த  மகள், சொல்லி சொல்லி அழுகிறாள். "அப்பா இத்தனை ஆண்டுகளில் ஒரேயொரு நாள் கூட, கடும் சொல்லைப் பயன்படுத்தியது இல்லையே" என்று.  மருமகள்களோ, "நாங்கள் திருமணமாகி வந்த நாள் முதல்  இத்தனை  ஆண்டுகளில்  ஒரு நாள் கூட வருத்தத்தோடு எங்களைப் பார்த்தது கூட இல்லையே என அழுகிறார்கள். தனது உடன் பிறந்த சகோதரர்கள், தனது  மனைவியின் உடன் பிறந்த சகோதர சகோதரிகள்  என எல்லோருக்கும் தனது  சக்திக்கு மீறி உதவினார். அரவணைத்தார். காப்பாற்றினார். ஒரு முறை, இராகி சாகுபடி செய்து, பயிர் புடைக் கட்டி நிற்கிறது. மின்சார மோட்டார் இல்லை. கபிலைக் கிணறு.  காச நோய் முற்றிய நிலையில் அவரது தம்பி, பிள்ளைகளோடு  வீடு வந்து சேர்ந்து விட்டார்.  தம்பியை  காச நோய் சிறப்பு மருத்துவமனையை தேடிச் சேர்த்தார். தினமும் மருத்துவமனை பயணம். பராமரிப்பு என நாட்கள் நகர்ந்ததால் கபிலை ஓட்டி நீர் இறைக்க முடியவில்லை.

இராகிப் பயிர்,புடை கட்டிய நிலையிலேயே  காய்ந்து போனது. அது பற்றி அவருக்கு கிஞ்சிற்றும் கவலை இல்லை. தம்பியை மரணப் படுக்கையில் இருந்து மீண்டெழச் செய்தோம் என்ற நிம்மதிப் பெருமூச்சு. உறவினர்களோ! தான் உதவி செய்தவர்களோ! யாருடைய போக்கு சரியில்லை என்று தெரிகிறதோ! அவர்களிடமிருந்து மனதளவில் விலகி விடுவார்.   அவர் தன்னிடமிருந்து விலகி விட்டார் என்பதே எதிராளிக்கு தெரியாது.

   1970 களில் ஒரு வறட்சி ஏற்பட்டது. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஊரே காலியாவிட்டது. எல்லோரும்  வேலை கிடைக்கும் ஊர்களை நோக்கி குடிபெயர்ந்து விட்டனர். ஊரில் இரண்டு வீடுகள் மட்டுமே நிலைத்து நிற்க முடிந்தது. அதில் இவரது வீடும் ஒன்று. இரவில் ஊருக்குள் ஓர் மயான அமைதி நிலவும். வெளியில் வரக் கூட பயமாக இருக்கும்.  கிராமங்களில் இருந்த உழைப்பாளி மக்கள் பரவலாக மக்காச் சோள மாவைத் தின்று உயிர் வாழ்ந்தனர். 

உழைக்கும் மக்களின் குடிப் பெயர்ச்சி, அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு முதல் எதிரி.  வறட்சியை எதிர் கொள்ளும் திட்டமிடல் அவரிடம் இல்லாமல் போயிருந்தால் அவரது பிள்ளைகளும் பள்ளி இடைநிறுத்தம் ஆகி இருக்கலாம். வறட்சியை  ஒரளவு அவரால் கணிக்க முடிந்தது.  அதற்கு முந்தைய ஆண்டு குத்தகை விவசாயத்தில் கிடைத்த சாகுபடி  முழுவதையும் சேர்த்து வைத்தார். ஒரு மூட்டையைக் கூட விற்பனை செய்யவில்லை.வறட்சி முடிந்து நிலைமைகள் சீரடையும் வரை அந்த தானியங்கள் கை கொடுத்தது.  

  

     கணவன், மனைவி இருவருக்கும்  ஒத்த வயது.  இருவரும் எண்பதைக் கடந்து விட்டனர். உதவி தேவைப்படும் அளவுக்கு  மனைவிக்கு  உடல்  சரியில்லாமல் போய் விட்டது. வெளியூரில் இருக்கும்   தன் மகன்,  எப்போது அழைத்தாலும் உடன் புறப்பட்டு வரும் அவர், ஒரு நாள் மகனிடம் இப்படிச் சொன்னார். "ஏப்பா அம்மாவை நல்ல முறையில் அனுப்பி வைத்து விட்டு தான் எங்கும் வர முடியும். உன் வீட்டு துணைக்கு ஆள் வேண்டும் என்றால் உன் மாமியாரை அழைத்துக் கொள். அல்லது வெளியூர் போகாதே" என்றார். 

அன்று முதல் சுமார் இரண்டு வருடங்கள். மனைவியின் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். அனைத்து பணிவிடைகளையும் செய்தார். நாங்கள் நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவின் அருகில் கூட அவர் அமர்ந்து இரண்டு வார்த்தைகள் பேசியதில்லை. அந்த இரண்டு ஆண்டுகளில் தான், எவ்வளவு தூரம் அவர் அம்மாவை நேசித்தார் என்று பிள்ளைகள் புரிந்து கொண்டனர். அவரது காதல் மனம் அன்பைக் கொட்டிய தருணங்கள் அவை தான். அதற்கு முன் அதனைப் பூட்டியே வைத்திருந்தார். அவரது மனைவி எந்தவிதத்திலும் அவரது உழைப்புக்கு சளைத்தவர் அல்ல. சிக்கனத்திற்கும் அவர் பெயர் பெற்றவர். வாரச் சந்தைக்கு சென்று திரும்பிய நாட்களில் போது அவரின் சிக்கனத்தை எண்ணி பிரமிக்கிறேன்.

வறட்சிக் காலங்களிலும் வருவாய் பற்றாக்குறை காலத்திலும் வறுமையை சமாளித்து குழந்தைகளை படிக்க வைத்த விதம் அலாதியானது. வறுமையிலும் உறவுகளுக்கு உதவி செய்து வாழ்ந்ததில் இருவருக்குள்ளும் ஒரு பெரும் ஒற்றுமை இருந்தது.

ஊருக்குள் இரண்டு சாமிகள். ஒரு சாமிக்கு கோவிலே இல்லை. அதுவே எங்கள் குலதெய்வம். இன்னொன்று ஊர் பொது தெய்வம். அதுவும் ஒரு சிறிய திட்டில் வைத்து வணங்கப்பட்டு வந்தது. இரண்டுக்கும் இரண்டு கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முன்னின்று வேலை செய்தார் தந்தை.

எப்போது அலைபேசியில் அழைத்தாலும் எல்லாப் பெற்றோரைப் போலவும் ஆசீர்வாதம் செய்து கொண்டே இருந்தார். ஊருக்கு சென்று திரும்பும் போது பணம் கொடுத்தால் எண்ணிப் பார்த்து தனது தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்துக் கொள்வார்.  அடுத்த முறை பணம் கொடுத்தால், "போன தடவை கொடுத்ததே இருக்குப்பா. போதும்" என்று கூறி விடுவார். பணம் தேவையில்லை என்றால் வேண்டாம் என்று கூறி விடுவார். பணம் தேவையெனில் கேட்க மாட்டார்.  நாம் தான் குறிப்பறிந்து பணம் தர வேண்டும். ஒரு நாளும் அவர் பணத்திற்கு  செலவு இருக்கிறது என்று கேட்டதேயில்லை.

தனது அந்திமக் காலம் நெருங்கி வருகிறது என்று கண்டு கொண்ட நாள் பேருந்து ஏறுவதை தவிர்த்து, மகன்  வீட்டுக்கு வருகை தருவதை நிறுத்திக் கொண்டார். தனது பிள்ளைகள் வளர்ந்து திருமணம் செய்து வைத்த கையோடு, சொந்தம் பந்தம், இரத்த உறவு என்று யார் வீட்டுக்கு செல்வதையும் அவர் நிறுத்திக் கொண்டார். யாரேனும் கேட்டால், எல்லாம் தன் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறி விடுவார்.

இறக்கும் நாள் அன்று மட்டுமே மருத்துவமனைக்கு கைத்தாங்கலாக அழைத்து செல்லப்பட்டார். புறப்படுவதற்கு  கொஞ்சம் முன்னர், தனது  பேத்தியை ஒத்த வயது உடையவர்களை   வரிசையில் நிறுத்தி, "நீங்களெல்லாம் மகராசியாக இருங்க. நான் போய்விட்டு வருகிறேன்"  என்று கூறியிருக்கிறார்.  

பேத்திகளை   ஆசிர்வாதம் செய்து விட்டு போகிறீர்களே! பேரன்களை ஆசீர்வாதம் செய்ய வில்லையா? என்று  கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் "பசங்க எப்படியும் பொழச்சுக்கு வாங்க. பெண் குழந்தைகள நல்லாப் பாத்துக்குங்க" என்று கூறிச் சென்றார். அன்று இரவு 10.40 மணிக்கு மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. 

அப்போது அவரது இளைய மகன் மிகவும்  சிறுவன். அவர் வேலைக்கு செல்லும் காட்டிற்கு  மகனையும் கூட்டிச் சென்றார். தோட்டத்தின் உரிமையாளர் ஏதோ அவரிடம் கேட்டார்.  "இவன்  எனது இரண்டாவது மகன்" என்றார்.  மீண்டும் என்ன கேட்டார் என்று தெரியவில்லை. அதற்கு, "இல்லீங்க. என் தலைமுறையில் இந்த வேலை செய்வது நான்  தான் கடைசி. எம்பசங்க யாரும் இனி இந்த வேலையை செய்ய மாட்டார்கள்" என்றார். அவ்வாறே அவர் சாதித்து விட்டும் சென்று விட்டார்.

தொலை நோக்கு பார்வை. சிந்தனை என்பதெல்லாம் படித்தவர்கள் சமூகத்தின் மேல் அடுக்கில் உள்ளவர்கள் ஆகியவர்களோடு தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகிறது. 

நாச்சி, நாச்சி முத்து, நல்லதம்பி, குண்ணான் என்று பல பெயர்களைத் தாங்கி, 87 ஆண்டுகள்   வாழ்வாங்கு வாழ்ந்த இந்த மனிதரின் சிந்தனைகள் செயல்கள் தொலை நோக்கு பார்வை உடையதில்லையா? தன் பிள்ளைகள் தன்னைவிட நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லாப் பெற்றோர் மத்தியிலும் இருக்கும் இயல்பான குணம். யார் எப்படி அவரை திரும்பத் திரும்ப பார்த்தாலும் குறை காண முடியாத பக்குவமும் நிறைவும் ஞானமும் இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

கட்டுரையாளர் குறிப்பு:

இவரது இரண்டாவது மகன் மணி. ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்.

கல்வி பொருளாதாரம் குறித்து தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து எழுதி வருபவர். தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 6 பிப் 2022