மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 பிப் 2022

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தலில் சசிகலா ஆதரவு யாருக்கு? குழப்பத்தில் அமமுக

டிஜிட்டல் திண்ணை:  உள்ளாட்சித் தேர்தலில் சசிகலா ஆதரவு யாருக்கு? குழப்பத்தில் அமமுக

வைஃபை ஆன் செய்ததும் ஒரு சிறு வீடியோவை அனுப்பி வைத்தது இன்ஸ்டாகிராம்.

அதையடுத்து மெசேஜ் டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ்அப்.

"பிப்ரவரி 3ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தன்னை கிளைம் செய்துகொள்ளும் சசிகலா அண்ணாவின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தெரிவித்த கருத்துக்கள் தான் அதிமுகவிலும் அமமுகவிலும் இப்போது ஒருமித்த பேச்சாக இருக்கிறது.

'அம்மாவின் வழியை பின்பற்றுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த இயக்கம் ( அதிமுக) நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

சசிகலாவின் இந்த பேட்டியை மையப்படுத்திதான் அதிமுக நிர்வாகிகளும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும் தங்களுக்குள் நேற்றிலிருந்து விவாதித்து வருகிறார்கள்.

டிடிவி தினகரன் தனது கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து நிகழ்ச்சிகளில் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அப்படி சசிகலாவின் நிகழ்ச்சிகளில் தலைகாட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்திருக்கிறார். சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது உறுதியாகாத வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடர்ந்து நடத்துவது என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். ஆனால் இதில் சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை என தெரிகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என தினகரனிடம் சசிகலா கேட்டுக்கொண்டார். ஆனால் தினகரன் அதை மறுத்து களம் கண்டதாலும் பாஜகவின் தொடர் அழுத்தத்தாலும் அரசியலில் இருந்து சில மாதங்களுக்கு ஒதுங்கியே இருந்தார் சசிகலா.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அதிமுக தனது கைக்கு வந்துவிடும் என்று நினைத்தவர் அதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறமுடியவில்லை. அதே நேரம் டிடிவி தினகரன்

தான் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளார்.

இதனால் தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதைத் தீர்க்க தினகரன் மனைவி அனுராதா சமீபத்தில் சசிகலாவை சந்தித்து பேசியதாகவும் மன்னார்குடி குடும்பத்தில் இருந்து தகவல்கள் கசிந்தன.

இப்போதுவரை தினகரனுக்கும் சசிகலாவுக்கும் அரசியல் ரீதியான சுமுக உறவு இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நன்றாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் வெற்றி பெற வேண்டுமென சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் இந்தக் கருத்தால் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் தத்தமது பகுதிகளில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்களிடம், 'உள்ளாட்சித் தேர்தல் முடிந்து இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துவிடும், எனவே நீங்களும் அதிமுகவுக்கு ஆதரவு தாருங்கள்' என்று கேட்டு வருகிறார்கள்.

மேலும் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நடந்த மண்டல செயலாளர்கள் கூட்டத்திலேயே தேர்தல் செலவுக்கு பணம் வேண்டுமென்று மண்டல செயலாளர்கள் டிடிவி தினகரனிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை தினகரன் ஏற்கவில்லை. அமமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் போட்டியிட விரும்பி வருகின்றனர். மீதி 40 சதவீதம் பேரை மாவட்டச் செயலாளர்கள் தான் நிற்க வைத்துள்ளனர்.

விரும்பி நிற்பவர்களும் சரி, மாவட்டச் செயலாளர்களால் நிற்க வைக்கப்பட்டவர்களும் சரி.. தேர்தல் செலவுக்கு மாவட்ட செயலாளரிடம் பணம் எதிர்பார்க்கிறார்கள்.

போஸ்டர்களும் துண்டுப் பிரசுரங்களும் அடித்துக் கொடுப்பதிலேயே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு தற்போது வரை சில லட்சங்கள் செலவாகி இருக்கின்றன.

தொடர்ந்து பிரச்சார செலவு, வாக்காளர்களை கவனிப்பதற்கான செலவு ஆகியவற்றை நினைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர்கள் குழப்பத்திலும் பதட்டத்திலும் இருக்கிறார்கள்.

இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு அதிமுகவின் பிரமுகர்கள் தத்தமது பகுதியில் இருக்கும் அமமுகவினரிடம், சசிகலா அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி....'அதிமுக வெற்றி பெறவேண்டும் என்று தான் சசிகலா கூறுகிறார். ஆனால் அதற்கு தினகரன் குறுக்கே நிற்கிறார். உள்ளாட்சித் தேர்தல் முடிந்து தினகரனை ஓரங்கட்டிவிட்டு சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பு உள்ளது. இப்போது தலைமை கழக அறிவிப்புகளில் இரு கையெழுத்துக்கள் வருவதைப்போல அப்போது சசிகலா கையெழுத்தையும் சேர்த்து மூன்று கையெழுத்துகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே அதிமுகவுக்கு வேலை செய்யுங்கள்' என்று வெளிப்படையாகவே கேட்டு வருகிறார்கள்.

இந்தத் தகவல்களை சில அமமுக மாவட்ட செயலாளர்கள் தினகரனுக்கு தெரிவிக்க நினைத்தாலும் அவர்களால் தினகரனின் நேர்முக உதவியாளர் ஜனாவிடம் தான் பேச முடிகிறது. அவர் இதை தினகரனிடம் எடுத்து சொல்கிறாரா இல்லையா என்றுகூட அமமுக நிர்வாகிகளுக்கு தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்" என்ற மெசேஜு க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வெள்ளி 4 பிப் 2022