மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

அமைச்சர் அனிதா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பாய்ச்சல்!

அமைச்சர் அனிதா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பாய்ச்சல்!

தமிழக மீன்வளத் துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளை ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை முடக்கிவைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்போதைய முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சார்பில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் பண மோசடி விவகாரங்களை அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையின் மதுரை அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விசாரணைக்காக ஆஜரானார். இதன்பிறகு அந்த வழக்கு விசாரணை சென்னைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பண மோசடி வழக்கில் அவரது சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை பிப்ரவரி 2ஆம் தேதி மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... "தமிழகத்தின் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின்படி அமலாக்கத் துறை பண மோசடி விவகாரத்தைப் புலனாய்வு செய்ய தொடங்கியது ‌ அதன்படி பணம் மோசடி வழக்கில் 6.5 கோடி ரூபாய் வழிகாட்டு மதிப்பு கொண்ட அவரது சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறையால் அட்டாச் செய்யப்பட்டிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளில் 160 ஏக்கர் நிலம் மற்றும் வீடுகள் ஆகியவை அடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட நிலையில்... முன்னாள் அதிமுக அமைச்சரும் இப்போதைய திமுக அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத் துறை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவிக்கே கூட அச்சுறுத்தலாக விளங்கும் இந்த வழக்கு 2006 -11 திமுக ஆட்சியில் தொடரப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 3 பிப் 2022