மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: மோடியின் கையில் இந்தியா எப்படி இருக்கிறது?

சிறப்புக் கட்டுரை: மோடியின் கையில் இந்தியா எப்படி இருக்கிறது?

டி.என்.நைனன்

2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது நாட்டைப் புரட்டிப் போடுவதற்கு 10 ஆண்டுகள் தேவை என்றார். இப்போது மோடி அதில் முக்கால்வாசி ஆட்சிக் காலத்தை முடித்துவிட்டார். இந்த ஆண்டுகளில் நாம் எதைக் கடந்து வந்துள்ளோம்?

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பிருந்த மன்மோகன் சிங் அரசு ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள், பணவீக்கம், பொருளாதார பாதிப்பு, வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியது.

போணியான குஜராத் மாடல்

குஜராத் முதல்வராக இருந்த மோடி தனது சாதனைகளை மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்துகொண்டார். எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத தூய மனிதராகத் தன்னை காட்டிக்கொண்ட மோடி ஒரு செயல்வீரராகக் காட்டப்பட்டார்.

மேலும், வேகமான பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வெளிநாடுகளில் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்பது என இந்தியாவுக்கு நல்ல நாட்கள் வரப்போவதாக மோடியை விளம்பரம் செய்தனர்.

இதுபோக, மோடி ஆட்சிக்கு வந்தால் மத்திய - மாநில அரசு உறவு மேம்படும், குடும்ப ஆட்சி ஒழியும், விவசாயத்தில் சீர்திருத்தம் வரும், குஜராத் மாடல் இந்தியாவுக்கே கிடைக்கும் என பயங்கரமாக விளம்பரம் செய்தனர். தலைமை தரப்பில் இதுபோன்ற பிரச்சாரம் இருக்க, களத்தில் மதப் பிரச்சாரத்தைத் தீவிரமாகச் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

மோடி உள்ளபடியே ஆசீர்வதிக்கப்பட்ட அரசியல்வாதி. மக்களை வசீகரிக்கும் பேச்சாளர். எதிரிகளை கிண்டலடிக்கும் திறமை கொண்டவர். தேர்ந்த ஒருங்கிணைப்பாளர். தொழில்நுட்பம், சமூக வலைதளம் இரண்டையும் சரியாகப் பயன்படுத்தி 2014ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தார் மோடி. குஜராத் மாடல் என்பதை எப்படியோ மக்களிடம் போணி செய்துவிட்டார்.

2009ஆம் ஆண்டில் 19% ஆக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம் 2014ஆம் ஆண்டில் 31% ஆக உயர்ந்தது. அந்த தேர்தலில் 282 தொகுதிகளை பாஜக மட்டுமே தனியாகக் கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டில் பாஜகவின் வாக்கு விகிதம் 37% ஆக உயர்ந்தது.

பொருளாதாரமும் அரசியலும்

2014ஆம் ஆண்டில் மோடி பொருளாதாரத்தை மையமாக வைத்தே பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரின் நோக்கங்களோ நிச்சயமாக அரசியல் சார்ந்தவைதாம். ஆட்சிக்கு வந்தபின் பொருளாதாரம் மறந்தது, அரசியல் தொடங்கியது. இந்தியாவின் நீரோட்டத்தை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக பாஜகவை உருவாக்குவது, இந்தியாவுக்குப் புதிய முகத்தைக் கொடுப்பது, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஆகியவை மோடியின் இலக்குகள்.

டெல்லியைப் பிடித்த பின் மாநிலங்களையும் கைப்பற்றுவதுதான் மோடியின் அடுத்த டார்கெட். ஏனெனில், மாநிலங்களவையில் பெரும்பான்மை வேண்டும். குறிப்பாக, மோடி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்துக்கு மாநிலங்களவையில் முட்டுக்கட்டை விழுந்ததால் மாநிலங்களவையைக் கைக்குள் கொண்டுவர மாநிலங்களில் பாஜக ஆட்சியை நிறுவ மோடி தீவிரமாகச் செயல்பட்டார்.

இப்போது பொருளாதாரம் என்பது இரண்டாம்பட்சத் தேவையாகிவிட்டது. மேலும், ஜிஎஸ்டி, திவால் சட்டம், ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய சட்டம், பணக் கொள்கைக்குப் புதிய கட்டமைப்பு என அமைப்பு ரீதியாகப் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் மோடி. என்னதான் இருந்தாலும் மோடி அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு பிரச்சாரகர்.

இந்து தேசத்தைக் கட்டமைக்கும் வேலை

இப்போது இஸ்லாமியர்களுக்கான அரசியல் குரலை நசுக்குவதற்கான வேலைகள் தொடங்கின. பெரும்பான்மைவாதத்தை நோக்கி அரசியல் நகர்ந்தது. ஆர்.எஸ்.எஸ் இலக்கான இந்து தேசம் என்பது ஓரளவுக்காவது நிறைவேற வேண்டுமென வேலைகள் நடந்தன.

இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட ஊர்ப் பெயர்கள், தெருப் பெயர்கள், ரயில் நிலையங்களின் பெயர்கள், விருதுகளின் பெயர்கள் மாற்றப்பட்டன. மதச்சார்பின்மை என்பதே பாஜகவுக்குப் பிடிக்காது. மதச்சார்பின்மையை ‘அரைகுறை மதச்சார்பின்மை’ என பாஜகவினர் கிண்டல் செய்வதைப் பார்க்கலாம். இதுபற்றி ஒரு நிகழ்வில் கேள்வியெழுப்பியபோது, அரசுத் திட்டங்களில் சிறுபான்மையினருக்கு சமமான உரிமைகளை மறுக்கவில்லை என்று கூறினார். அதாவது அடிப்படை மனித உரிமைகளையும் பொருளாதாரச் சலுகைகளையும் போட்டுக் குழப்பினார்.

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் பரவலாகின. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தாகூர் போன்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகினர். லவ் ஜிஹாத், பசுப் பாதுகாப்பு, அசைவ உணவகங்களைத் தாக்குவது, முஸ்லிம்களின் உணவகங்களைச் சூறையாடுவது போன்ற வன்முறைகள் பெருகின.

இதெல்லாம் சிறுகச் சிறுக வளர்ந்து இப்போது சிறுபான்மையினரை இனப் படுகொலை செய்ய வேண்டுமென்ற குரல்களும் வெளிப்படையாகவே ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இப்போதும் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் போன்றவர்கள் அமைதியாக இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் கொட்டு வைத்த பின் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது.

தலித்துகள், கிறிஸ்துவ ஆலயங்களின் குழுக்கள், கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்கள், மிஷனரி பள்ளிகள், எதிர்க் கருத்துடையவர்கள் எனப் பலரும் தாக்கப்பட்டனர். பொதுவெளியில் பெரும்பான்மைவாதம் தலைதூக்கிய நிலையில், இந்து வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயத்திலேயே சிறுபான்மையினருக்கு ஆதரவான குரல்கள் அடங்கின.

அனைவருக்குமான வளர்ச்சி பற்றி ஆரம்பக் காலங்களில் பிரச்சாரம் செய்த மோடி 2021ஆம் ஆண்டில் கருத்துச் சுதந்திரம் மூலம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க பலர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். இது ஒரு புறமிருக்க, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோயில், முத்தலாக் தடை என்ற பெயரில் பொது சிவில் சட்டம் எனத் தனது வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றியது. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் புலம்பெயர்வதைத் தடுக்க சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக அதற்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டை விழுந்தது.

சர்வாதிகாரத்தை நோக்கிய பயணம்

நிர்வாகத்தைப் பொறுத்தவரை அதிகாரிகளை வைத்தே மோடி செயல்பட்டு வருகிறார். தனக்கு விசுவாசமானவர்களை முக்கியப் பொறுப்புகளை நியமித்துள்ளார் மோடி. சொல்லப்போனால், கேபினட்டில் நியமனக் குழுவில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மட்டுமே உள்ளனர். அதாவது, எந்தவொரு துறையிலும் அத்துறை அமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகளை நியமிப்பது மோடியும், அமித் ஷாவும்தான். தனக்குச் சாதகமான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமித்துள்ளது மோடி அரசு.

அதிகாரத்தைக் குவித்து வைத்து சர்வாதிகாரம் செய்யவும் முயற்சி நடக்கிறது. எதிர்க் கருத்தாளர்களை ஒழிப்பது, பெகாசஸ் மூலம் சொந்த நாட்டவரையே ஒட்டுக் கேட்பது போன்றவை இதற்கான சில உதாரணங்கள். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவரவும் பல ஆண்டுகளாக பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆனால், இந்தியாவோ பன்முகத்தன்மை கொண்டது. வடக்கே இந்தி பேசுபவர்கள், வடகிழக்கில் பழங்குடியினர், கிறிஸ்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர்கள், திராவிடத் தெற்கில் முற்றிலும் மாறுபட்ட வரலாறு, இனக்குழுக்கள், பண்பாடு, மொழிகள் என இந்தியா பல நிறங்களால் நிறைந்தது.

ஆனால், வடநாட்டின் இந்துத்துவாவை மட்டும் மையமாக வைத்து பாஜக செய்யும் அரசியலில் கூட்டாட்சித் தத்துவமே கிடையாது. இந்தியாவின் மிகப்பெரிய 20 மாநிலங்களில் ஒன்பது மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி செய்கிறது. இதில் பிகாரில் கூட்டணி ஆட்சிதான். பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகளாக இருந்த சிவசேனா, அகாலி தளம் ஆகியவை கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன. பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததே தவறு என சிவசேனா அண்மையில் கூறியது.

சிஏஏ, வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் எனப் பல சட்டத் திருத்தங்களையும் எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்காமலேயே தனது பெரும்பான்மையை வைத்துக் கொண்டுவர மோடி முயற்சி செய்தார். இதில் விவசாயிகளின் தீவிர போராட்டத்தால் வேளாண் சட்டங்களைக் கைவிட்டார்.

நாட்டின் இன்றைய நிலை என்ன?

பொருளாதாரத்தை மையமாக வைத்து பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால் இப்போது பொருளாதாரத்துக்கு என்ன ஆனது? கொரோனா கொள்ளை நோய் மீது பழியைப் போடுகிறது பாஜக தரப்பு. ஆனால், கொரோனாவுக்கு முன்பாகவே பொருளாதாரம் சரிந்துகொண்டுதான் இருந்தது. ஏற்றுமதி சரிவு, வேலைவாய்ப்பின்மை, வேலை செய்வோரின் எண்ணிக்கை குறைவு, உற்பத்தி, சேவைத் துறைகள் பாதிப்பு, விவசாயத்தால் லாபமில்லை என்ற சூழல் என இன்றைய பொருளாதாரம் எப்படியிருக்கிறது என்பது சாமானியர்களுக்கே தெரிகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அரசின் கடன்கள் உயர்ந்துகொண்டே போகின்றன. கார்ப்பரேட் லாபமோ சில நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளன. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும் ஜிஎஸ்டியாலும் சுக்குநூறாகிவிட்டன. இதனால், வேலை தேடுவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவிட்டது. இதன் விளைவாகச் சந்தையில் நுகர்வு குறைந்தது.

சரி... 2024ஆம் ஆண்டில் என்னதான் நடக்கும்? அந்த ஆண்டில் எந்தப் பிரச்சினையை முன்வைத்து பிரச்சாரம் நடக்கிறதோ அதைப் பொறுத்து முடிவு மாறுபடும். 2019 மக்களவைத் தேர்தலில் புல்வாமா தாக்குதலையும், பாலகோட் பதில் தாக்குதலையும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. நாடு டிஜிட்டல் மயமாகிவிட்டது, ரோடு போட்டிருக்கிறோம், நவீன ரயில் நிலையங்கள் வந்துள்ளன என மிடில் கிளாஸ் மக்களுக்கு வளர்ச்சி கிடைத்தது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க பாஜக முயற்சி செய்யும். அது எடுபடாவிட்டால் மதம் சார்ந்த பிரச்சாரம் தொடங்கும்.

எது எப்படியிருந்தாலும், மோடி வருவதற்கு முன்பிருந்த இந்தியாவை மீண்டும் பார்ப்பது கடினம். ஏனெனில், அரசு அதிகார அமைப்புகளில் மோடியின் விசுவாசிகளே உள்ளனர். எனினும், எமர்ஜென்சிக்கு பின் 1977ஆம் ஆண்டு தேர்தலில் நடந்தது போல இந்தியா 2024ஆம் ஆண்டில் தன்னை புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.

நன்றி: இந்தியா ஃபோரம்

கட்டுரையாளர் டி.என்.நைனன் பிசினஸ் ஸ்டேண்டர்ட், எகனாமிக் டைம்ஸ் ஆகிய இதழ்களின் முன்னாள் ஆசிரியர்

தமிழில்: புலிகேசி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 3 பிப் 2022