மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

‘கட்சி மாறினால் வெட்டுவேன்’: அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

‘கட்சி மாறினால் வெட்டுவேன்’: அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

அதிமுகவில் நின்று வெற்றிபெற்றுவிட்டு அடுத்த கட்சிக்கு மாறினால் வெட்டுவேன் என்று பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் சாத்தூர் நகர மன்றத் தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சண்முககனியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் அவர் பேசும்போது,”கட்சிக்கு உண்மையாக இருங்கள். கட்சி நல்லா இருந்தால்தான் நாம் நல்லா இருக்க முடியும். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நல்லா இருந்ததாக சரித்திரம் இல்லை” என்று பேசியவர்,

திடீரென்று ஆவேசமடைந்து, ”அதிமுகவில் இரட்டை இலையில் ஜெயித்துவிட்டு எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, எவரவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்றேன்.

இந்தப் பேச்சால், என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை. ஏனென்றால், போன உள்ளாட்சித் தேர்தலின்போது, என்மேலுள்ள கேஸ், தேர்தலையே பார்க்கவிடவில்லை. அது ஒன்னும் பிரச்சினையில்லை. இரட்டை இலையில் ஜெயிச்சுட்டு கட்சி மாறி போனால், உங்க ஆத்தாகிட்ட வாய்க்கரிசி வாங்கிட்டு போங்க” என்று மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசினார்.

அதிமுக ஒன்றிய செயலாளரின் இந்த சர்ச்சை பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அதிமுக மட்டுமில்லாமல் மற்ற கட்சியினரிடையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-வினிதா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

வியாழன் 3 பிப் 2022