மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

டாஸ்மாக் டிரான்ஸ்பர்: செந்தில் பாலாஜி மீது அடுத்த புகார்!

டாஸ்மாக் டிரான்ஸ்பர்: செந்தில் பாலாஜி மீது அடுத்த புகார்!

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் மதுபான பார்கள் டெண்டர் விஷயத்தில் பல புகார்கள் திமுகவினராலேயே எழுப்பப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் பார்களை நடத்தி வந்தவர்களும் செந்தில் பாலாஜி வீட்டுக்கு எதிரே போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்கள் இடமாற்ற விவகாரத்தில் பகிரங்க முறைகேடு புகாரை கிளப்பியிருக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம்.

டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்களுக்கு எந்தவிதமான சட்டப் பாதுகாப்பும் இல்லை என்றும், அவர்கள் எவ்விதமான தொழிலாளர் நல சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை என்றும் தொடர்ந்து போராடி வரும் சிஐடியுவின் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்தான், இப்போது டாஸ்மாக் டிரான்ஸ்பர் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச்செயலாளர் திருச்செல்வன் இதுபற்றி பிப்ரவரி 2ஆம் தேதி கூறும்போது.... "டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு எனப் பணி இட மாறுதல் கொள்கையைக் கடந்த 18 ஆண்டுக்காலமாக திட்டமிட்டு உருவாக்காமல் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர், துறை அமைச்சர் அலுவலகம் எனக் கூட்டணி அமைத்து அதிக விற்பனையாகும் கடைகளுக்கு பணியிட மாறுதல் கொடுப்பதற்குப் பெரும் தொகை கைமாறும் நிலை கடந்த ஆட்சியில் இருந்தது.

இதன்படி ஆயிரக்கணக்கான பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வந்தன. பணம் கொடுத்தால் வேண்டிய கடைக்கு இட மாறுதல் என்ற எழுதப்படாத விதி உருவாக்கப்பட்டது. இதனால் குடும்ப சூழ்நிலை, உடல்நிலை பாதிப்பு, தொலைதூரம் போன்ற உண்மையான காரணங்களைக் குறிப்பிட்டு பணியிட மாறுதல் கேட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு, ஏஐடியூசி, எல்எல்எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சுழற்சிமுறை பணியிட மாறுதல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் முந்தைய அதிமுக அரசு பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கவில்லை"' என்று கூறும் திருச்செல்வன் தொடர்ந்து பேசும்போது...

"இந்தப் பின்னணியில் கடந்த மே மாதம் புதிய திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் ஒரு சில ஊழியர்களுக்கு சிபாரிசுகள் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கும் நடவடிக்கையில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலக சிபாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரக் காலத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அவசரகதியில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் பல மாவட்டங்களில் பட்டியல் தயாராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு ஆணைகள் வழங்கப்படும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இந்தப் பணியிட மாறுதல்களில் ஆளுங்கட்சியினர், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் தலையீடும் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலக சிபாரிசும் இருப்பதாகத் தெரியவருகிறது. அரசு நிறுவனத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு என்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்று மது கூட உரிமம் (பார் லைசன்ஸ்), சரக்கு வாகன உரிமம், காலி அட்டைப் பெட்டி உரிமம் போன்றவற்றிலும் ஆளுங்கட்சியினர் என்ற பெயரில் சில நபர்களுக்கு ஆதரவான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

கடையின் விற்பனை அடிப்படையில் மாமூல் என்ற வசூல் ஏற்பாட்டுக்குள் உள்ளூர் ஆளுங்கட்சியினர் கடை ஊழியர்களை மிரட்டும் போக்கு துளிர் விட ஆரம்பித்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர் இடம் மாற்றுதல் பிரச்சினையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு, முறைகேடாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்யவும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய வெளிப்படையான சுழற்சிமுறை பணியிட மாறுதல் கொள்கையை அமல்படுத்தவும் வேண்டும். ஆளுங்கட்சியினர் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச்செயலாளர் திருச்செல்வன்.

வேந்தன்

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

வியாழன் 3 பிப் 2022