70 நாட்களாகியும் மழை நிவாரணம் வழங்கவில்லை: எம்.பி.வில்சன்

தமிழ்நாட்டுக்கு மழை வெள்ள நிவாரணத்தை விரைந்து வழங்குங்கள் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் வரலாறு காணாத வடகிழக்கு பருவமழை பெய்தது. இதில் சென்னை மாநகர் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி தஞ்சாவூர், நாகப்பட்டினம் என டெல்டா பகுதிகளில் விளை பயிர்கள் சேதம் அடைந்தன.
இதனால் சேதங்களைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மத்திய குழுவினர் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிக்கையைத் தயார் செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கியது.
அதன்படி மழை வெள்ளச் சேதங்களைச் சீரமைக்க 2 ,629 கோடி ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்க ஒன்றிய அரசுக்கு மத்திய அரசு குழு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் நிவாரணம் வழங்கப்படாத நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான இன்று மாநிலங்களவையில் இது குறித்து திமுக எம்பி வில்சன் பேசினார்.
தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஒன்றிய குழு பார்வையிட்டு 70 நாட்கள் ஆகியும் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கோரிய மழை வெள்ள பாதிப்பு நிவாரணமான 6203 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-பிரியா