மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

காவலர்களை வாக்கி டாக்கியில் விளாசிய தாம்பரம் ஆணையர்!

காவலர்களை வாக்கி டாக்கியில் விளாசிய தாம்பரம் ஆணையர்!

தாம்பரம் காவல் ஆணையரகக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் முறையாகப் பணி செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுக்கும் வாக்கி டாக்கி ஆடியோ காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களாகச் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, தன் கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் முறையாகப் பணி செய்யாததை கண்டித்து வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில், “பள்ளிகரணையில் கணவன் அடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற மனைவி, நான்கு முறை புகார் கொடுக்க வந்து செல்கிறார். பள்ளிக்கரணை காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை அனைவரையும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மாற்றிவிடுவேன். பிறகு தனுஷ்கோடியில் போய் அலையைத்தான் எண்ணிட்டு இருப்பீங்க. சரியாக நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கக் கூடாது. வெட்டித்தனமாக வேற வேலையை ஏதாவது பார்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் கூண்டோடு காலி பண்ணிவிடுவேன்.

பெண் ஒருவர் புகார் கொடுக்க நான்கு முறை வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் என்ன செய்றீங்க? காவல் துறை எதுக்கு அங்கே இருக்கீங்க. காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள்தானே... பொதுமக்களை துன்புறுத்தத்தான் இருக்கிறீர்களா?

அதைபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சைபர் க்ரைம் தொடர்பாக புகார்கள் வந்தால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகாரைப் பெற்று சிஎஸ்ஆர் கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகு வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

சைபர் க்ரைம் புகார்களை தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கக் கூடாது. புகார் கொடுக்க வருபவர்களை அலைகழிக்கக் கூடாது. குறையோடு புகார் கொடுக்க வருபவர்களை உட்கார வைத்து புகாரைப் பெற்று அனுப்பி விடுங்கள். முதல் நடவடிக்கை இதுதான். வந்தவுடன், இங்கே போ, அங்கே போ என்று அலைக்கழிக்காதீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் காவலர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதைமட்டும்தான் நான் எதிர்பார்க்கிறேன். நன்றாக இருப்பேன், இந்த மாதிரி ஏதாவது பிரச்சினை வந்தால் கூண்டோடு தூக்கிடுவேன். மோசமான விளைவுகள் இருக்கும். அதனால், அனைத்து காவல் நிலையங்களும் கவனமாக இருக்க வேண்டும்” என்று கடுமையாக எச்சரித்தார்.

காவல் ஆணையர் ரவி எச்சரித்தவுடன், சம்பந்தப்பட்ட காவலர்கள் ஆணையர் உத்தரவிட்ட விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

தற்போது இந்த ஆடியோ காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா? அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா?  அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் ...

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் அடுத்த அதிர்ச்சி!

புதன் 2 பிப் 2022