மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

மாணவி மரணத்துக்கு நீதி கிடைத்தது: வானதி சீனிவாசன்

மாணவி மரணத்துக்கு நீதி கிடைத்தது: வானதி சீனிவாசன்

தஞ்சை மாணவி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி அல்லது எந்தவொரு சுயாதீன விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு, தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 31) இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாத நிலையில், அவசர அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், “அரியலூர் மாணவி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தஞ்சை மாணவி வழக்கை தமிழக காவல் துறையிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினை நாங்கள் மனதார வரவேற்கிறோம். மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறோம். அதேசமயம், மாணவி இறப்பு சம்பவத்தில் நீதியை வழங்குவதற்காக, இந்த வழக்கினை சிறப்பான முறையில் கையாண்ட வழக்கறிஞருக்கும், இந்த வழக்கினுடைய அவசியம் கருதி, அவசரம் கருதி உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கும் எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வழக்கில் ஒரு மாணவி பாதிக்கப்பட்டிருக்கிறார். இறப்பதற்கு முன்பு தன் வாக்குமூலத்தில், தன்னைப் பள்ளியில் சிலர் மத மாற்றம் செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். மாணவி இறப்புக்குப் பிறகு அந்த வீடியோ எங்கள் கட்சிக்குக் கிடைத்தது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பாஜக போராட்டங்களை நடத்தியது.

தமிழக காவல் துறை ஒரு தற்கொலை வழக்கினை விசாரிக்கிறபோது, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டு உண்மையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் சட்டத்தினுடைய மாண்பு. ஆனால், இந்த வழக்கு ஏன் வித்தியாசப்படுகிறது. அந்த மாணவி மத மாற்றம் பற்றி பேசுகிறார். ஆனால், அங்கிருக்கக் கூடிய காவல் துறையின் உயரதிகாரி மத மாற்றம் அங்கே நடக்கவே இல்லை, அந்த வீடியோவில் இருப்பது உண்மை அல்ல என்று தானாக எந்த விசாரணையும் இல்லாமல் சான்றிதழ் கொடுக்கிறார். அதன்பிறகு, மாநிலத்தின் அமைச்சர்கள் இதுபோன்று நடக்கவில்லை என்று சான்றிதழ்கள் கொடுக்கிறார்கள்.

தற்போதைய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மாணவ, மாணவியர் யார் தற்கொலை செய்தாலும், அங்கு நேரடியாகச் சென்று குடும்பத்துக்கு நிதி உதவி அளித்து ஆதரவு தெரிவிப்பார். ஆனால், இந்த மாணவி தற்கொலை வழக்கில் அந்தக் குடும்பத்துக்கு உதவி செய்யவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதல்வர் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படும் என்ற உறுதியை தமிழ்நாடு மக்களுக்குக் கொடுக்க மறந்தார் அல்லது வேண்டுமென்றே மறைத்தார். இன்று உயர் நீதிமன்றம் அதற்கான தீர்ப்பினை கொடுத்திருக்கிறது. பொறுப்பேற்றுக் கொண்ட சிறிது காலத்திலேயே இந்த வழக்கின் மூலமாக முதலமைச்சர் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறார். அதுபோன்று காவல் துறையும் நியாயமாக நடந்துகொள்வதில்லை என்பதே இந்த வழக்கு மூலம் மக்களுக்குக் கூறுகிறோம்.

இனி இப்படி ஓர் உயிரிழப்பு நடந்துவிடக் கூடாது. அதற்காகத்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தக் கேட்கிறோம். இந்த வழக்கின் தீர்ப்பின் வாயிலாக மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைத்திருக்கிறது” என்று கூறினார்.

இரண்டாவதாக வெளியான மாணவி பேசும் முழு வீடியோவில் மத மாற்றம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடாததால், மதக் கலவரத்தைத் தூண்டும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது, மாணவி விவகாரத்தில் பாஜகவின் கோரிக்கைகளில் ஒன்றான சிபிஐ விசாரணை நிறைவேறியுள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் அண்ணாமலை தப்பித்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏபிவிபி அமைப்பினர் போராட்டம்

நேற்று தஞ்சை மாணவி மரணத்துக்கு நீதிக் கேட்டு டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ராணுவத்தினரின் பாதுகாப்பு வேலியை மாணவர்கள் தகர்த்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 1 பிப் 2022